பதினொரு வயதிலே’ஜஸ்டிசைட்” ஏட்டின் பாராட்டு பெற்றவர்!

டிசம்பர் 01-15

 

 

 

20.12.1944ஆம் நாளிட்ட “ஜஸ்டிசைட்’’ ஏட்டின்,  “Self-Respect Bombers’’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியருரையில் 11 வயது சிறுவன் வீரமணியின் சாதனை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இதழாளர் என்னும் வகையில் பெரியார் தம் இறுதிக் காலம்வரை நடத்திக் கொண்டு வந்த ‘விடுதலை’, ‘உண்மை’, ‘The Modern Rationalist’ ஆகிய தாளிகைகளின் பொறுப்பேற்று, தொடர்ந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர் திரு.கி.வீரமணியவர்களையும் அவருடன் அக்காலத்தில் கொள்கை பரப்பும் களப்பணிகளில் ஈடுபட்ட ஏனைய எடுத்துக்காட்டான வீரவிடலையரையும் பாராட்டிப் போற்றும் SELF-RESPECT BOMBERS” என்னும் ஆசிரியயுரையொன்று 20.12.1944ஆம் நாளிட்ட ‘ஜஸ்டிசைட்’ ஏட்டில் வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் இதோ:

“தன்மான வெடிகுண்டு வீசிகள்’’: திராவிடர் இயக்க மாணாக்கர் குழுக்கள் தமிழ் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து புரோகிதப் பித்தலாட்டம், மத, மூடநம்பிக்கை ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டி வருகின்றனர். தங்களுடைய வாய்ப்பான விடுமுறை நாள்களைத் துறந்துவிட்டுக் கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நம் மாணவமணிகளைப் பாராட்டுகின்றோம். கடந்த முறை அவர்கள் செய்த தொண்டு வீணாகி விடவில்லை. அவர்களின் கோடைப் பயணம் நல்ல வெற்றிப் பயணமாய் அமைந்தது. குறிப்பாக, நாட்டின் உட்கோடிச் சிற்றூர்ப் பகுதிகளில் பகுத்தறிவுச் செய்திகள் பேரார்வத்துடன் வரவேற்கப்பட்டன. விளைவாக _ பெரிய அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

இப்போது இரண்டாம் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள பயணம் முழுவீச்சுடன் நடைபெறுகிறது. ஒற்றையடிப் பாதைகள் நெடுக நடந்தும், தூக்கிப் போடும் வண்டிகளிலும் நெருக்கடி மிகுந்த தொடரிகளிலும் பயணம் செய்தும், காலை நேரக் குளிர்ச்சியை எதிர்கொண்டும், நேரந்தவறி உணவு உட்கொண்டும், முதல் தடவையாகப் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் ஒரு புதுவகைப் பட்டறிவுக்குள்ளாகின்ற இவர்கள் பலவகைப் பண்புகள் கொண்ட கூட்டத்தாரிடையே நுட்பமான சிக்கல்களைப் பற்றி உரையாற்றிவரும் இவ்விளம் தன்மான வெடிகுண்டு வீசிகள் பகுத்தறிவு வெடிகுண்டுகளை வீச, அவை வைதிக வெறியையும் இரண்டகத்தையும் சுட்டெரிக்கும் சூழ்நிலை அமைந்துள்ளது.

இவ்விளைஞர் அணியினர் பல்வேறு அகவையும் படிப்பும் வாய்ந்த ஒளிபொருந்திய அருமையான திரட்டாகும். சான்றுக்கு ஜாதியையும் வேதியனையும் எதிர்த்து இடிமுழக்கம் பண்ணும் பதினொன்றே அகவையுள்ள இளைஞர் வீரமணியை எடுத்துக் காட்டுவோம்.

கல்லூரி மாணாக்கரும் உயர்நிலைப் பள்ளி மாணாக்கரும் இயக்க நற்கொள்கைகளையும் பரப்புவதில் போட்டி போடுகின்றனர். இவர்களின் பயணங்களின் பயனாயும் மாநாடுகளின் விளைவாகவும் பெருந்திராவிட இயக்கம் வலுக் கூட்டப்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. எனவே இவ்வீர விடலைகளைப் பாராட்டுகிறோம்!’’

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *