அன்றாடம் வரும் சிக்கல்கள் எதுவானாலும் அதற்கு அன்றே சரியான தீர்வைத் தந்து வழிகாட்டுவது ஆசிரியரின் அரிய பணியாகும். அதன்வழி அரசும், மக்களும் பெற்ற பயன் ஏராளம். அதற்கு எடுத்துக்காட்டாய் அண்மையில் அவர் எழுதிய அறிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
அகில இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு காவி மயமாக்க புதிய அமைப்பா?
டாக்டர்களின் எதிர்ப்பினை வரவேற்கிறோம் – பழைய நிலையே தொடரவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்.
மருத்துவத் துறைப் படிப்புகளின் தரத்தை நிர்ணயம் செய்ய, மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு முதல் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்த நீண்ட காலமாக இருந்து வந்த அமைப்பு _- இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Concil ofIndia) ஆகும்.
அதுபோலவே, சட்டப்படிப்புகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவற்றை ஒழுங்குபடுத்திட, பார் கவுன்சில் இந்தியா (Bar Concil of India) என்ற அமைப்பும் உள்ளது.
மருந்தியல் படிப்பை ஒழுங்குபடுத்த மருந்தக கவுன்சில் என்ற அகில இந்திய பார்மசி கவுன்சில் (Pharmacy Concil of India) மருந்தியல் படிப்புகளை ஒழுங்குபடுத்த உள்ளது.
மருத்துவக் கவுன்சிலை ஒழிக்கத் திட்டம்
இந்நிலையில், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இந்த மருத்துவக் கவுன்சிலை (MCI) ஒழித்துவிட்டு, தங்களால் நியமிக்கப்படும் ஒரு குழுவே இனிமேல் அப்பணிகளைக் கண்காணிப்பார்கள் என்று திட்டமிட்டு, செயல்பட முனைப்புடன் உள்ளது!
இந்த மருத்துவக் கவுன்சிலில் பல மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்கள் உறுப்பினராகி, மாநில மருத்துவக் கவுன்சிலுக்கு பிரபல டாக்டர்கள் தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொண்டூழியம் செய்யும் வகையில் முன்வருகிறார்கள்!
நினைவிருக்கிறதா கேதன் தேசாய்?
ஏற்கெனவே இதன் தலைவராக இருந்தவர் பல வகையான ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளான கேதன் தேசாய் என்ற பார்ப்பனர். (இவர்தான் மண்டல் கமிஷனுக்கு எதிராக டில்லியில் ஏராளமான மருத்துவக் கல்லூரி மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை கிளர்ச்சி செய்யச் செய்தும், தீ வைத்துக் கொள்ளவும் தூண்டுதலுக்கு மூல காரணமானவர் என்று கூறப்படுகிறது).
மிகவும் சக்தி வாய்ந்த இந்த மனிதர் மீது சி.பி.அய். சுமத்தியுள்ள குற்றச்சாற்று சாதாரணமானதல்ல. அவர் வீட்டில் எடுத்த தங்கத்தின் அளவு திருப்பதி வெங்கடாசலபதிக்கு உள்ளதைவிட அதிகம் என்று அப்போது பல ஏடுகள் எழுதின.
அவர் எப்படியோ, குஜராத்தில் மேலிடத்தின் அவர்களது ஆதரவுடனோ என்னவோ, மீண்டும் புனருத்தாரணம் பெற்று, திரும்பவும் உலக அமைப்புக்குத் தலைவராக – _ ஊழலுக்குப் பரிசுகள் – போனசும் கிடைத்தது-போல கிரீடம் சூட்டப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் பல முக்கிய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பொறுப்பேற்று, மருத்துவக் கவுன்சில் சரியானபடி இயங்க ஏற்பாடுகளைச் செய்தனர்!
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமனம்
எப்படி திட்டக் கமிஷனை ரத்து செய்து நிதி அயோக் என்று ஒரு அமைப்பினை தங்களது ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவோ ஆதரவாக உள்ளவர்களையோ அமைத்து நடத்துவதுபோல, வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் போன்ற பல மத்திய அமைப்புகள் அத்தனையையும் காவி மயமாக்கி, தங்களது துணை அமைப்புபோல அதனை நடத்திட ஆழ்ந்த திட்டத்துடன்தான் மருத்துவக் கவுன்சிலைக் கலைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது!
டாக்டர்களின் கோரிக்கை நியாயமானதே!
இதனை எதிர்த்து டாக்டர்கள் பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்து அறப்போரில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுவரும் மருத்துவக் கவுன்சிலை ரத்து செய்யக்கூடாது என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர்களின் கோரிக்கையினை வரவேற்கிறோம்.
திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரித்து அவர்களின் நியாயமான கோரிக்கையான மருத்துவக் கவுன்சில் தொடரவேண்டும்; அவர்களின் முயற்சி வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறோம் _- வற்புறுத்துகிறோம்.
கி.வீரமணி,
ஆசிரியர்
* * *
இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கலாமா?
அ.தி.மு.க. எம்.பி.,க்கள், தி.மு.க. எம்.பி.,க் களையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்துத் தீர்வு காணவேண்டும்!
17.11.2016 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நமது தமிழக மீனவர்கள் இருவர் (ஒருவர் நாகை மீனவர், மற்றொருவர் காரைக்காலைச் சேர்ந்தவர்) மீது திடீரென்று இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
அவ்விரு மீனவ சகோதரர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக மீன்பிடித் தொழிலைத் தவிர, வேறு எதுவும் இல்லை. இந்நிலையில், அவ்வப்போது இப்படி சிங்களக் கடற்படையினர் நமது மீனவர்களை சிறை பிடித்துச் செல்வது, அடித்து உதைப்பது, வலைகளை அறுப்பது, அவர்தம் உடைமை-களைப் பறிப்பது போன்ற செயல்களில் அன்றாடம் ஈடுபட்டு அளவற்ற துன்பங்களை இழைத்து வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்று ஒரு பொய்க்காரணம் சொல்லி, கைது செய்து பிடித்துச் சென்று சிறையில் அடைப்பது, நீதிமன்றங்களில் கொண்டு போய் நிறுத்துவது, தண்டிப்பது, அவர்தம் படகுகளை, வலை-களைப் பறிப்பது, என்றால், இதற்கு ஒரு முடிவே இல்லையா?
அண்மையில்கூட, மத்தியில் உள்ள மோடி அரசு அந்நாட்டு மீனவர்கள், இந்நாட்டு மீனவர்கள் என இரு தரப்பையும் அழைத்துப் பேசி, ஒரு பலனும் கிட்டியதாகத் தெரிய-வில்லையே!
அதற்குமேல் அதிகாரிகளும், இரு நாட்டு அமைச்சர்களும் பேசியும் ஒரு பலனும் விளையவில்லை என்பதோடு, மீனவர் படும்பாடு ‘நித்திய கண்டம் பூர்ணாயுசு’ என்ற பரிதாப நிலையாகத்தான் உள்ளது!
முன்பு மத்தியில் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுதான் இதற்குக் காரணம்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு விடுவோம் என்று மார்தட்டி, மக்களுக்கு வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புத் திட்டம் என்ற ‘மயக்க பிஸ்கெட்டுகளை’ தந்து, மக்களின் வாக்குகளைப் பெற்றார் நரேந்திர மோடி.
இரண்டரை ஆண்டுகாலம் ஓடியதுதான் மிச்சம்! இவரது ஆட்சியில் தமிழக மீனவர் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம், ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைப் பாதுகாப்பு எல்லாம் முன்பு இருந்ததைவிட எவ்வகை முன்னேற்றமும் அடைய முடியவில்லை!
‘உருட்டைக்கு நீளம் புளிப்பில் அதற்கு அப்பன்’ என்ற பழமொழி (எலுமிச்சைப் பழத்தைவிட புளியம் பழத்தில் புளிப்பு பற்றிய பழமொழி இது) தான் நினைவிற்கு வருகிறது!
தரையில் எல்லை என்றால், தற்போது ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்று (Cross
Border Terrorism) கூறிட முடியும்.
கடலில் ஒரு காற்றடித்தால் மீன் பிடிக்கும் படகுகள் அலையில் அந்த எல்லையைத் தாண்டுவது சர்வசாதாரண இயற்கையின் விளைவு அல்லவா? இதனை ஏதோ பெரிய சர்வதேசக் குற்றம் என்று கூறி பழிவாங்குவதா? நியாயம்தானா?
எச்சரித்து திருப்பி அனுப்புவதுதானே நியாயம்!
வாதத்திற்காக வைத்துக்கொள்வோம், தவறு செய்கிறவர்களை எச்சரித்துத் திருப்பி அனுப்புவதுதானே முறை _- நியாயம்?
அதைவிடுத்து ஒரு கடற்படையே தாக்குதலைத் தொடுக்கலாமா?
மத்திய _- மாநில அரசுகள் இதுபற்றி தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
நமது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் _- கட்சி கண்ணோட்டத்தை விட்டு, அனைவருடனும், தி.மு.க. எம்.பி.,க்களுடனும் சென்று பிரதமரைச் சந்தித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
கி.வீரமணி,ஆசிரியர்