– கெ.நா.சாமி
பேனா முனையின் பேராற்றலே வலிமை வாய்ந்தது என்றான் வால்டேர்! என் நாவன்மையே இந்நாட்டைப் புரட்டிப் போடும் என்றான் ரூசோ! எழுங்கள், எழுங்கள் இன்றே எழுங்கள் நாளை தடைகள் அதிகமாகிவிடும் என எழுச்சி முழக்கம் செய்தான் மாஜினி!
சந்தைப் படுத்தப்பட்ட சரித்திரத்தின் ஏடுகளில் இவர்களை நான் படித்தபோது வியந்துதான் போனேன். பின்பற்றுதற்குரிய எடுத்துக்காட்டுகள் இவர்களே என்று எண்ணினேன்.
ஆனால் இவர்களிடம் கண்ட எழுத்தாற்றல், பேச்சாற்றல், தன் இனத்திற்கு ஆபத்தோ, அவலமோ சூழ்கின்றபோது பாடிவீடமைத்து போர்ப்பரணி பாடி, இன உணர்வை ஊட்டி வெற்றிக்கனி பறிக்கின்ற இந்த ஆற்றல்களோடு நின்று விடாமல் மேலும் பல வியத்தகு பண்பு நலன்களைத் தன்னகத்தே பெற்று தமிழர் நலன் காக்கும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அய்யாவைப் பார்க்கின்றபோது இவரே ஈடு, இணையற்ற தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது என்பதே உண்மை. மாற்றாரும் போற்றும் மனப்பக்குவம் கொண்டவர். தான் ஏற்றுக்கொண்ட தன்னிகரில்லாப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களையே சுவாசித்து, பெரியாரியத்தை இன்று உலகமயமாக்கும் உன்னதப்பணி, உயரியப்பணி, மிகக் கடுமையான உழைப்பை முதலீடாக்க வேண்டிய முழு நேரப்பணியினை ஒல்லும் வகையெலாம் ஓய்வின்றி ஆற்றுகின்ற ஆசிரியர் அய்யாவின் பணி தமிழ் சமூகத்துக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பே! பத்து வயது முதல் அவர் செயல் பாடுகளை அறியின் இதை யாரும் கூறுவர்.
தந்தை பெரியாரின் நம்பிக்கையைப் பெறுவதென்பது எல்லோர்க்கும் இயல்வதன்று. தந்தை பெரியார் தன்னைச் சூழ்ந்திருந்த எண்ணிலாத் தொண்டர்களின் அறிவை, ஆற்றலை, நாணயத்தை, செயலாற்றிடும் தன்மையை, தன்னல மறுப்புத் தன்மையை, பொதுநலப் பணியில் மானம் பாராத் தன்மையை, ஆய்ந்து, ஆய்ந்து அறுதியிட்டு இறுதி முடிவெடுத்து,
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”
என்ற வள்ளுவன் கூற்றுக்கொப்ப, இயக்கத்தை வழிநடத்தும் அனைத்துத் தகுதிகளையும் பெற்றவர் இவரே எனத் தெரிந்து ‘விடுதலை’யின் முழுப் பொறுப்பையும் இவரிடம் ஒப்படைத்தது முதல் இன்றுவரை 50 ஆண்டுகளுக்கு மேலாக, அதன் ஆசிரியராக இருந்து இவர் எழுதிவரும் தலையங்கங்களும், அறிக்கைகளும், வாழ்வியல் கருத்துக்களும், ‘சமூகநீதி காத்தச் சான்றோர்’ தொடர் கட்டுரைகளும் இவரது எழுத்தாற்றலுக்கும் கருத்தாழத்துக்கும் காட்டுகளாவதோடு, முதுபெரும் அரசியல் தலைவர், திராவிடர் இயக்கச் செம்மல் கலைஞர் அவர்களின் உள்ளார்ந்த பாராட்டுகளும் தகுதிச் சான்றுகளாகும்.
ஆரியக் கோட்டைக்கு அரணாய்க் காத்து நிற்கின்ற மனுநீதி, பகவத் கீதை, இராமயணம், மகாபாரதம் போன்ற நூல்களுக்கு இவரால் எழுதப்பட்டுள்ள மறுப்பு நூல்கள் ஆரிய ஆதிக்கம் தகர்க்கும் வெடிமருந்துகள்; சமுதாய நோய்க்கு நன்மருந்துகள்.
இவரது சொல்லாற்றலை தினம், தினம் தமிழ்ச் சமுதாயம் கேட்டு மேன்மையுறுகிறது. தான் ஒரு வழக்கறிஞர் என்பதை, எதிர்தரப்புக் கருத்துக்களைத் தன் வாதத்திறன் மூலம் சிதறடித்துக் காட்டுகின்றார். எந்தப்பொருள் பற்றிப் பேசினாலும் அவரது பேச்சு, கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்பதாய் இருப்பது தனிச்சிறப்பாகும். ஆதாரங்கள் இன்றி எந்தக் கருத்தினையும் எங்கும் கூறாதவர்.
அவரது சொற்பொழிவுகள் அனைத்தும் நூல்கள் வடிவிலே நூலகங்களிலும் உணர்வுள்ள வாசகர் கரங்களிலும் இடம் பெற்றிருப்பதே அவரது சொல்லாற்றலுக்கான சான்றாகும்.
தந்தை பெரியாரை உலகமயமாக்கலில் அவரது அயரா உழைப்பின் மூலம் பெரியார் சிந்தனைகளை உலகமெங்கும் பரவச் செய்வதோடு, ஆசிரியர் அய்யா அவர்களும் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகியுள்ள தனிப்பெரும் தமிழகத் தலைவராக விளங்குகிறார். இதுவரை எந்த ஒரு திராவிடத் தலைவரும் இந்த அளவு உலக அளவில் அறியப்பட்ட தலைவராக மிளிர்ந்ததில்லை. இன்று அமெரிக்கா, ஜெர்மன் சிங்கப்பூர், மலாயா, மியான்மர், ஹாங்காங், இலங்கை போன்ற நாடுகளில் பெரியாரியத்தைப் பரப்பும் மய்யங்கள் செயல் படுகின்றன என்று சொன்னால் அவரது கடின உழைப்பினால் அன்றோ! பெரியாரின் செயல் வீரர் காமராசர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை ஏற்று டெல்லியில் தங்கியிருந்த போது தமிழன் உயர்வைச் சகிக்காத ஜனசங்கக் காவிகளும், காலிகளும் அவரைக் கொளுத்திக் கொல்ல முயன்ற அதே டில்லியில் பெரியார் மய்யங்கள் அமைத்துள்ள சாதனை சாமானியமானதா?
தந்தைப் பெரியார் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களை நன்முறையில் வளர்த்ததோடு, மேலும் பல கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி, அவற்றை நடத்தும் ஆற்றல்கண்ட, மண்டல்குழு அறிக்கையை அமல்படுத்தியதால் தன் பிரதமர் பதவியை இழந்த வி.பி.சிங் அவர்கள், “கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்ய வீரமணியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று சொன்னதே அவரின் நிர்வாகத் திறனுக்குச் சான்றாகும்.
தந்தை பெரியார் விட்டுச் சென்ற அறக்கட்டளையின் சொத்துக்களை இன்று பல மடங்கு பெருக்கி, அதுசார்ந்த சிக்கல்களைத் தகர்த்து, மருத்துவமனை உட்பட பலவற்றை நடத்தும் திறன் தலைவருக்கு அடையாளமாகும்.
இத்தகு ஒப்புயர்வற்ற தலைவர் அவர்களுக்கு அகவை 83 முடிந்து 84 தொடங்குகிறது.
அது வயதுக் கணக்கே! உண்மையில் அவர் இன்றும் இளைஞர்களுக்கே சவால் விடும் அளவிற்கு ஆற்றலுடனும், துடிப்புடனும் செயல்படுகிறார்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தூண்களான கலைஞரும், பேராசிரியரும் முதுமையுற்ற நிலையில் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களின் தொண்டுச் சுமை கூடினாலும் அதை அறப்பணியாக ஏற்று அயராது உழைத்து வருகிறார்.
அதிகாரப் பலத்துடன் கூடிய ஆரியர்களின் சூழ்ச்சிகளையெல்லாம் விழிப்போடு, வீரத்தோடு, துணிவோடு, தூய்மையோடு, எதிர் கொண்டு தகர்த்து, இந்தியாவிற்கே வழிகாட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்காக ஓயாது உழைத்து வரும் ஆசிரியர் அய்யா அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த விருப்பமாகும்!