பெரியாரை உலகமயமாக்கும் தத்துவம் பிறழாத் தலைவர்! நீவிர் வாழி!

டிசம்பர் 01-15

– அ.கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர்,
விவேகானந்தா கல்லூர், சென்னை

 

 

எந்த ஒரு சமூகத்தின்

எந்த ஒரு தேசியத்தின்

வாழ்வும் தாழ்வும்

வளர்ச்சியும் தளர்ச்சியும்

எழுச்சியும் வீழ்ச்சியும்

பொலிவும் இருளும்

அந்த சமூகத்தை, தேசியத்தை வழிநடத்தும் தத்துவங்களால் வடிவமைக்கப்படுகின்றன.

தத்துவம் என்னும் உயிர், அறிவு, விவேகம் சமூகம் _- தேசியம் என்னும் உடலை இயக்குவதாகவும் வழிநடத்துவதாகவும் உள்ளது.

தத்துவம்தான் உயிர்ப்பைத் தருகிறது.

திணிக்கப்பட்ட தத்துவங்களால்

தீய தத்துவங்களால்

தவறான தத்துவங்களால்

அத்தகைய கொடிய தத்துவங்களின் ஊடுருவலால், திணிப்பால், ஒரு பழைமைச் சமூகம்,- தொல் சமூகம் சிதைவுக்கும் சீரழிவுக்கும் உள்ளாகி தன்னுணர்வையும் தன்மானத்தையும் இழந்து விடுகின்றபோது எது மானம்? எது இழிவு? என்ற பகுத்தறிவையும், பட்டறிவையும் இழந்து, இழிவையே தெய்வீகம் என நெக்குருகி இன்புறும்போது கழுத்துப் பட்டை யணிவிக்கப்-பட்ட நாய்களும், மூக்கணாங் கயிறு இடப்பட்ட கால்நடைகளும் அவற்றையே பெருமிதமாகக் கொண்டு வால்களை ஆட்டி ‘எஜமான்கள்’ பின்னால் தொடர்வதைப் போன்று சாதி _- பக்தி _- புரோகிதம் _- சடங்குப் பட்டைகளால் விலங்கிடப்பட்டும் அதை உணராமல் அந்த நிலையிலேயே பெருமிதம் காணும் மன அடிமைகளால் அச்சமூகம் சீரழிந்து தன்னையே இழக்கிறது.

அதுதான் தமிழருக்கும் _- திராவிடருக்கும், – சூத்திர பஞ்சமருக்கும், அனைத்துப் பெண்களுக்கும் இன்றுள்ள நிலைமை; அதனைத்தான் பார்ப்பனீயத்தால் வந்த பேரழிவு என்கிறோம்.

பார்ப்பனீயத்தால் விதைக்கப்பட்டு வளர்க்கப்-பட்ட அந்த ‘விஷ விருட்சங்களை’, மனத்தளை _- விழுமியத் தளை _ பண்பாட்டுத் தளை _- நிறுவனத் தளை _- சமூக, சட்ட, பொருளாதாரத் தளைகளை உடைத்தெறிந்து தன்னுணர்வுக்காக, தன்மான உணர்வுக்காக, இன விடுதலைக்காக _ முழு விடுதலைக்காக ஒரு தத்துவம் தேவைப்பட்டது, தேவைப்படுகிறது.

புத்தருக்குப் பின், பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின், பல நூறு ஆண்டுகள் பார்ப்பனீய இருளில் உழன்றிருந்த தமிழர் -_ திராவிடர் _- சூத்திரர் _- பஞ்சமர் _- பெண்களின் விடுதலைக்கு ஒரு தத்துவத்தைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார். அத் தத்துவத்தின் மீது ஓர் இயக்கத்தைப் படைத்தவர் பெரியார்.

அவர் வாளேந்தவில்லை,

துப்பாக்கி ஏந்தவில்லை,

வெடிகுண்டுகளைக் கையாண்டதில்லை, ஆனால் அணுகுண்டை விட அதிகமான வெப்பத்தையும், ஒளியையும் அவரது பகுத்தறிவு, தத்துவத் திண்மை, பார்ப்பனீயத்தால் கண்ணிருந்தும் குருடர்களாய் மாறிப்போன திராவிடரிடையே, பஞ்சம சூத்திரரிடையே, மாதர் குலத்திடையே தந்து _ அவர்களை விழிக்கச் செய்தன. எழுச்சிபெறச் செய்தன. ஒரு புதிய யுகத்தை உதிக்கச் செய்தன.

அரியணைக்காக, அதிகாரத்திற்காக அவர் அரசியல் இயக்கம் நடத்தவில்லை. பதவி-களையும், பட்டங்களையும் துறந்தே தத்துவ இயக்கம் படைத்தவர். மக்கள் அதிகாரத்திற்காக இயக்கம் கண்டவர் பெரியார்.

இயற்கை வரம்புகளால் அவரது வாழ்வு நிறைவடைந்த பின்னரும் அவரது தத்துவம் _- இயக்கம் யுகப் புரட்சிகளுக்காக, யுக மாற்றங்களுக்காகத் தொடர வேண்டுமானால் அவர் கண்ட இயக்கத்தை, உருவாக்கிய அமைப்பை, தளர்வின்றி கொண்டு செல்ல நேர்மையான, தகுதியான, உறுதியான தத்துவ வாரிசுகளைக் கண்டெடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தும் பெரும் பணியையும் பெரியார் செய்தார்.

அய்யாவும் மணியம்மையும் நம்பிக்கையுடன் நமக்குச் சுட்டிக் காட்டிய தலைமைதான் மானமிகு ஆசிரியர் அவர்கள்.

தந்தை பெரியாரின் நேரடிப் பார்வையில், நேரடிக் கண்காணிப்பில் வார்த்தெடுக்கப் பட்டவர் வீரமணி அவர்கள்.

பெரியாருக்குப் பின்

பெரியார் இயக்கம் தளர்ந்துவிடாதா?

பெரியார் தத்துவம் நீர்த்துவிடாதா?

என்ற நப்பாசையுடன் காத்திருந்த பழமைவாதிகளுக்கு, பார்ப்பனீயவாதிகளுக்கு பெரியார் தத்துவமும், இயக்கமும் நலிவடை-யாது; தொய்வடையாது; நீர்த்துப் போகாது. புதிய பொலிவுடன் வீறுநடை போடும் என்று எடுத்துக்காட்டிய தலைமைப் பண்பாளர் ஆசிரியர் அவர்கள்.

பெரியாரின் தத்துவங்கள் திராவிடர் _- மகளிர் விடுதலைக்கு மட்டுமல்ல. உலகில் எங்கெல்லாம் மனிதச் சமூகங்கள் _- தேசியங்கள் பகுத்தறிவிழந்து, தன்மதிப்பிழந்து, உரிமைகள் மறுக்கப்பட்டு ஏமாற்றுச் சுரண்டல்காரர்களின் கொடும் பிடியில் சிக்குண்டு தவிக்கின்றார்களோ, அந்த சமூகங்கள் _- தேசியங்கள் விழிப்படைய, விடுதலை பெற, மேம்பாடடைய, நவீனத்துவ-மடைய பெரியாரின் தத்துவத் தளங்கள், பகுத்தறிவு -_ தன் மதிப்பு ஆயுதங்கள் இன்றைக்கும் என்றைக்கும் பயன்படும்.

இதனை முன்னிறுத்தித்தான் ‘உலக மயமாகும் பெரியார்’, ‘உலக மயமாக வேண்டிய பெரியாரியம்’ என்ற குறிக்கோள்களை முழக்கங்களாக தமிழர் தலைவர் முன்வைத்-துள்ளார்.

‘பெரியாரியம்’ என்னும் பெரியார் தத்துவம் திராவிடர் விடுதலைக்கு மட்டுமல்ல, மகளிர் விடுதலைக்கு மட்டுமல்ல, மனித சமூகப் பிரிவுகள் அனைத்திற்கும், மாந்தர் அனைவருக்கும் பொருந்துகின்ற விடுதலைத் தத்துவம்.

இந்த உலகளாவிய தத்துவத்தை உலகறியச் செய்யும் பணியில் ஓய்வின்றி, தொய்வின்றி, உற்சாகத்துடன் உழைத்து வருபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

காட்சிக்கு எளியர்,

கடுஞ்சொல் அறியாதவர்,

கூர்மதியாளர்

வாழ்வியல் தெளிந்தவர்

வாட்டமே அறியாத செயல்வீரர்.

‘பெரியார்’ பெயரைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் காண்போர் பலருண்டு. அவர்கள் வசதிக்கேற்ப ‘பெரியாரை’த் திரித்தும் சிதைத்தும் பயன்படுத்துவதுண்டு.

ஆனால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், பெரியாரை தமக்காகப் பயன்படுத்துபவர் அல்லர். பெரியாரியத்திற் காகவே தம் முழுவாழ்வையும் அர்ப்பணித்து வருபவர். பெரியார் தத்துவத்தினின்று, இம்மியளவும் பிறழாதவர், தத்துவம் பிறழாமல், பெரியார் அமைப்பையும் இயக்கத்தையும் கொண்டு செல்பவர்.

தத்துவம் பிறழா தலைவா

பெரியாரியம் தொடரவும், பெரியாரியம் உலகளாவப் பரவவும்,

நீவிர் நீடுழி வாழ்க!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *