மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கப்படும் என்று (8.9.1993) மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாகக் கழகப் பொதுச் செயலாளர் விடுத்த அறிக்கை வருமாறு:-
13 ஆண்டுகள் போராடியதற்குப் பிறகு மண்டல் குழுப் பரிந்துரை அமலாகி நாளை முதல் 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பானது. சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், இது ஒரு முழு வெற்றியல்ல. அரசியல் சட்டத்தில் இல்லாத பொருளாதார வரம்பினை இதில் உள்ளடக்கி இருப்பது பாராட்டத்தக்கதல்ல; என்ற போதிலும், எப்படியோ இதுவரை திறக்கப்படாத மத்திய அரசு பணிமனைகளின் கதவுகள் ஓரளவுக்காவது திறக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கதே. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதைய ஆணை மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சர் திரு. சீதாராம் கேசரி அவர்களின் அறிவிப்பு ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. இதற்காகவும், மண்டல் கமிஷனை மேலும் கிடப்பில் போடாமல் நடப்பில் கொண்டு வந்ததற்காகவும் பிரதமரையும், மத்திய சமூக நலத்துறை அமைச்சரையும், இதனை விரைவுபடுத்த தன் வாழ்வையே தியாகம் செய்ய முன்வந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டி நன்றி செலுத்துகின்றோம்.
– கி.வீரமணி, பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் (விடுதலை, 9.9.1993)