ஆசிரியரின் ஆசான் ஆ.திராவிடமணி பார்வையில் தமிழர் தலைவர்

டிசம்பர் 01-15

1940இல் நான் தென்ஆர்க்காடு மாவட்டம் கடலூர் பழைய நகரில் ஒரு முஸ்லீம் ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போதிருந்து கி.வீரமணி அவர்களைத் தெரியும். அப்போது வீரமணி அவர்களுக்கு வயது பத்துக்குள்தான் இருக்கும்.

பகுத்தறிவுப் போதனை

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியதோடு மாலை வேளையில் நூல் நிலையக் கட்டடத்தில் சில மாணவர்களுக்கு தனிப்பயிற்சி (டியுஷன்) அளித்து வந்தேன். வீரமணி அவர்களின் தந்தையார் கிருஷ்ணசாமி அவர்கள், சிறு தையலகம் வைத்து நடத்தி வந்தார். அவர்கள், இயக்க வேலைகளில் வீரமணி அவர்கள் ஈடுபடுவதற்கு எவ்வித எதிர்ப்புமின்றி உதவி செய்தார்.

தனிப் பயிற்சி பெற்று வந்த மாணவர்களுக்கு பள்ளிப் பாடங்களைப் பயிற்சி அளித்ததோடு பகுத்தறிவுப் போதனையும் சிறுக அளித்து வந்தேன். அப்போது பகுத்தறிவு மாணவர் கழகம் அமைத்து மாணவர்களுக்கு, சொற்பொழிவாற்றும் பயிற்சியும் அளித்து வந்தேன். அதில் சிறந்து விளங்கியவர் நம் வீரமணி. மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, மூடநம்பிக்கை ஒழிப்பு இவற்றைப்பற்றி முக்கியமாக நாள்தோறும் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்பட்டு வந்தது.

பெயர் மாற்றம்

கடவுள் பெயராலும் சாதி, சமயப் பெயர்களாலும் பெற்றோர் சூட்டிய பெயர்களையெல்லாம் மாற்றி அமைத்தோம். கி.சாரங்கபாணி என்று இருந்த பெயர் கி.வீரமணி என்று மாற்றப்பட்டது.

சிறு வயதிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ள கூட்டங்களிலும், மாநாடுகளிலும் சிறிதும் அஞ்சாமல் சொற்பொழிவாற்றும் ஆற்றலை வீரமணி பெற்றிருந்தார்.

விபூதி வீரமுத்து

அச்சமயத்தில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆத்திகர்கள், விபூதி வீரமுத்துசாமியைக் கையாளாக வைத்துக் கொண்டு, தன்மான இயக்கப் பிரச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முயன்று வந்தனர். நம் கழகத் தோழர்கள் விபூதி வீரமுத்துசாமிக்குப் பதில் சொல்ல தம்பி வீரமணியே போதும் என்றுகூட எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

சிறு வயதிலிருந்தே, எதிரிகளைப் பற்றி சிறிதும் அஞ்சாது வீரமணி நடக்கும் வீரநடையைக் கண்டு மக்கள் அனைவரும் பாராட்டிப் பேசிக்கொள்வர்.

பெரியாரோடு இணைந்தார்

வீரமணி அவர்களின் பேச்சாற்றலை அறிந்து தந்தை பெரியாரவர்கள் வியந்து பாராட்டிய-தோடு, வீரமணி அவர்களின் மேற்படிப்புக்கு உதவி புரிந்து முன்னுக்குக் கொண்டு வந்தார்கள்.

இன்று திராவிடர் கழகப் பொதுச்-செயலாளராகவும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ஸ்தாபனச் செயலாளராகவும் விளங்கி வருகிறார். இன்றும் சிறு வயதிலிருந்தது போன்றே எளிய உணவு, எளிய உடை, இனிய பண்பாடுகளுடன் விளங்கி வருகிறார்.

ஓய்வு, ஒளிவு இன்றி, தந்தை பெரியார் போன்று நாள்தோறும் பிரச்சாரத்திற்குச் செல்வதோடு, தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்டுள்ள பல நிறுவனங்களையும் ஏற்று திறம்பட நடத்தி வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நாம் சிறிதும் எதிர்பாராத வகையில் வீரமணி அவர்களின் தமிழ் இன உணர்வைப் பாராட்டி மதுரை ஆதினம் போன்றவர்கள் திராவிட இயக்கத்திற்கு வெளிப்படையாகவே முன்வந்து ஆதரவு அளிப்பது மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு பலவகையிலும் தன்மதிப்பு இயக்கத்திற்கு சிறிதும் தன்னலமற்ற முறையில் வீரமணி தொண்டாற்றி வருவதுகண்டு நான் மிகுந்த பெருமையடைகிறேன். அவர்தம் தொண்டு மேலும் மேலும் சிறப்படைய விழைகிறேன்.

(ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் அவரது ஆசான் திராவிடமணி அவர்களுக்கும் டிசம்பர் 2 பிறந்தநாள் என்பது வியக்கத்தக்க ஒற்றுமையாகும்.)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *