ஆட்டு மந்தையாய் அரசியலில் சாயக்கூடாது
ஒரு கட்சியை ஆதரிக்கவும், ஒரு கொள்கையை ஆதரிக்கவும், ஒன்றைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதும் ஆட்டுமந்தையாகச் சாய்வதும் அறிவற்றச் செயல் ஆகும்.
எதையும் சிந்தித்துச் சரியா என்று பரிசீலிக்க வேண்டும். பச்சைப் புடவை வாங்க வேண்டும் என்று எவனாவது சொன்னால் உடனே எல்லோரும் வாங்குவது; இன்று நகை வாங்கினால் நல்லது என்று எவனாவது கூறினால் எல்லோரும் அன்றே வாங்க மோதுவது.
அந்தச் சாமியார் சொன்னால் பலிக்கும் என்றால் அங்கே சென்று அலைமோதுவது எல்லாம் அறியாமையின் அடையாளம். எதையும் ஏன்? எப்படி? சரியா என்று சிந்தித்துக் காரணம் அறிந்து சரியென்றால் ஏற்க வேண்டும். எல்லோரும் செல்கிறார்கள் நாமும் செல்வோம் என்றால் நாம் மனிதர்களாக இருக்கும் தகுதியை, பகுத்தறிவின் பயனை இழந்து-விட்டோம் என்று பொருள்.
ஊடகங்கள் அனைத்தும் ஆதிக்க வர்கத்தினரிடம் இருப்பதால், ஊடகங்கள் கூறுவதில் மயங்கி, அவர்கள் காட்டும் வழியில் செல்வதைத் தவிர்த்து அரசியலை, செயல்-பாட்டை, நிருவாகத்தைச் சீர்தூக்கி தொலை-நோக்கோடு, அடித்தட்டுமக்களின் நலன்கருதி வாக்களிக்க வேண்டும். ஊடகச் சதிவலையில் விழக்கூடாது. ஊடகங்கள் உள்நோக்குடையவை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.
நோய் தீர்க்க சாமியாரிடம், மந்திரவாதியிடம் செல்லக்கூடாது
நோய் வந்தால் முடிகயிறு கட்டுவது, தாயத்துக் கட்டுவது, மந்திரம் ஜெபிப்பது, சாமியாரிடம் ஆசி வாங்குவது இவையெல்லாம் செய்யக்கூடாது. காரணம் சாமியாருக்கும், மந்திரவாதிக்கும் நோய் வந்தால் மருத்துவரிடம் தான் செல்கிறார்கள். நாம்தான் அவர்களை நம்பி ஏமாறுகிறோம்.
தடவியே நோய் தீர்ப்பார் என்று பேசப்பட்ட புட்டபர்த்தி சாயிபாபா தனக்கு நோய் வந்தபோது, மும்பை மருந்துவமனையிலே தங்கி சிகிச்சை பெற்றார்.
எனவே, நோய் வந்தால் மருத்துவமனைக்குத்-தான் செல்ல வேண்டுமே தவிர, மந்திரவாதியிடமோ சாமியாரிடமோ செல்லக்கூடாது.
நேர்மையும் திறமையும் அற்றவரை ஆட்சியில் அமர்த்தக் கூடாது
தேர்தலில் வாக்களிப்பது என்பது மக்களால் சரியாகவும், சிந்தித்தும் செய்யப்படுவதில்லை. இதனால்தான் அரசியலில் பல்வேறு அவலங்களும் விளைகின்றன.
வாக்குச் சீட்டு என்பது நாட்டின் வளர்ச்சி, மக்கள் நலன் இவற்றைத் தீர்மானிக்கும் முதன்மைக் கருவி. இதை அறியாது ஜாதிக்-காகவும், நடிப்பிற்காகவும், பேச்சுக்காகவும், இலவசங்களுக்காகவும், கட்சிப் பற்றுக்காகவும், பணத்திற்காகவும், ஊடக முதலாளி சொல்-வதற்காகவும், குறிப்பிட்ட, தனிப்பட்ட காரணங்-களுக்காகவும் வாக்களிப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
எனவே, நேர்மையும், திறமையும், தொண்டுள்ளமும், தூய எண்ணமும் கொண்ட-வர்-களைத் தேர்வு செய்யும் துணிவு, தெளிவு மக்களுக்கு வேண்டும். அதன்படி வாக்களிக்க வேண்டும்.
வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது
பணம் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது-தான், இலஞ்சம் உருவாக அடித்தளம் போடுகிறது. பணம் செலவிட்டுப் பதவிக்கு வந்தேன், அதை மீண்டும் சம்பாதிக்க இலஞ்சம் வாங்குகிறேன் என்று அரசியல்வாதி இலஞ்சத்தை நியாயப்படுத்துகிறான்.
பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தவர்-களுக்குத் தவற்றைத் தட்டிக் கேட்கும் உரிமை போய்விடும். மக்கள்தான் உண்மையான அதிகாரம் படைத்தவர்கள். மக்கள் தரும் அதிகாரத்தாலே ஆட்சியாளர் வருகின்றனர். எனவே, நாம் சரியானவர்க்கு அதிகாரம் வழங்க வேண்டும். நம் உரிமையைப் பணத்திற்கு விற்பது நாட்டிற்குச் செய்யும் துரோகம். அந்த அற்பப் பணம் நமக்கு ஆயுள் முழுவதும் உதவுமா? ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அய்நூறு, ஆயிரம் ரூபாய்க்கும், இலவசம் பெற்றதற்கும் வாக்களிப்பது மக்களுக்குக் கேடு தரும்.