உண்மை சிறப்பிதழுக்கு ஆசிரியர் அய்யாவிடம் அய்ந்து கேள்விகள்! (சிறப்பு நேர்காணல்)

டிசம்பர் 01-15

 

அய்யா, தங்களிடம் கேட்கப்பட இருக்கும் அய்ந்து கேள்விகளில் சில தங்களின் பணிச்சுமையைக் கூட்டக்கூடியவை என்றாலும், தங்களைத் தவிர இவற்றைச் செய்ய – வழிகாட்ட இந்தியாவில் வேறு யாரும் இல்லை என்பதாலே உங்களிடம் கேட்கிறோம்.

கேள்வி:          பேசும் மொழியால் இனமா? இரத்த வழியால் இனமா? இந்தி பேசினாலும் முலாயம்சிங்கும். மாயாவதியும் திராவிடர்கள்; தமிழ் பேசினாலும் சுப்பிரமணியசாமியும், சோ இராமசாமியும் ஆரியர்கள் என்பதுதானே இனக் கணிப்பாகும்? எனவே, இந்தியா முழுமைக்கும் இன அடிப்படையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முயற்சி செய்வீர்களா?

பதில் :               இனம் என்பதற்கு ரத்தப் பரிசோதனையோ, மற்றவைகளோ தேவையில்லை. பண்பாடுதான் முக்கிய அடிப்படை. தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இதைப் பல நேரங்களில் தெளிவுபடுத்தியுள்ளனர். டாக்டர் அம்பேத்கர் நூலில், இந்தியா முழுவதும் நாகர்கள் இருந்தார்கள். (கன்னியாகுமரி -_ நாகர்கோயில் உள்ளதே சான்று) திராவிடர்களுக்குத்தான் நாகர் என்று பெயர் என்று எழுதியுள்ளார்! ஆரியப் பண்பாட்டின் அடிப்படையே மொழித்திணிப்பு _ (சமஸ்கிருதத் திணிப்பு). ஆனால், நீங்கள் கூறும் இந்த இன ஒருங்கிணைப்பு ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில் ஜாதித் தடைகளை அகற்றினால் அது வெகு எளிதில் சாத்தியப்படும்.

கேள்வி:          எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இளைஞர்களில் பெரும்பாலோர் போதை, புகை, கொலை, கொள்ளையென்று பிஞ்சில் பழுத்து, கொள்கை, இலக்கு, பொதுநலம், பகுத்தறிவு வாழ்வு என்றில்லாமல் தறிகெட்டு, நெறிகெட்டுத் திரிவதை மாற்றி பண்பட்டவர்களாய் வளர்க்க, இயக்கரீதியாகத் திட்டமிடுவீர்களா?

பதில் :               இந்த இயக்கத்தின் பணிகளே அந்த இலக்கை நோக்கித்தான். இளைஞர்கள் எடுத்துக்கொள்ளும் 10 உறுதிமொழிகளைப் பாருங்கள்; தெரியும். பயிற்சி முகாம் மூலம் இராணுவக் கட்டுப்பாட்டுடன் நம் இளைஞர்கள் உள்ளனரே! பெரிதும் அது இயல்பாகவே நடைபெறுகிறது.

கேள்வி:          குறுக்குவழியில் இடஒதுக்கீட்டை அகற்றிவிடும் முயற்சியில் மத்திய பா.ஜ.க. அரசு பலவகையில் முயலும் நிலையில், இந்திய அளவில் ஒத்தக் கொள்கை கொண்ட தலைவர்களை ஒருங்கிணைத்து மாற்றுத் திட்டங்கள் வகுத்து, அதன்படிதான் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குதல், பணியிடங்களை நிரப்புதல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டியது கட்டாயம் என்பதால் அதற்கான முயற்சி மேற்கொள்வீர்களா?

பதில் :               காயை நகர்த்திக்கொண்டே வருகிறோம். இடையில் தேர்தல்கள் வந்து குறுக்கீடுகளைச் செய்கிறது; என்றாலும் இப்பணி தொய்வின்றித் தொடரும். தொலைக்காட்சி, சினிமா போன்றவைகள் இதற்குப் பெரிதும் இடையூறுகள் என்றாலும் பணி ஓய்வதில்லை.

கேள்வி:          மதச்சார்பின்மையிலும், சமூகநீதி காப்பதிலும் அக்கறையுடையவர்களை இந்திய அளவில் ஒருங்கிணைத்து, ஒரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தினால், கேடு வரும்போது உடனடியாக எதிர்வினையாற்ற, பலனை விரைந்து பெற உதவியாய் இருக்கும் என்பதால் அதற்கான முயற்சி மேற்கொள்வீர்களா?

பதில் :               அகில இந்திய அளவில் அவர்களை முடிந்த அளவு சமூகநீதிக் களத்தில் ஒருங்கிணைத்துக் கொண்டே வருகிறோம். என்றாலும் அரசியல், அவர்களை ஒன்றுசேர விடாது, துரத்தியடித்துக்கொண்டே உள்ளதோடு, நம் முயற்சிகளில் வெந்நீர் ஊற்றிடும் வேதனை நிகழ்வுகளும் அவ்வப்போது வரவே செய்கின்றன!

கேள்வி:          பார்ப்பனர் 3% மற்றவர்கள் 97%ஆக இருக்கும் பெரும்பான்மை நிலையில் அவர்களோடு தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருப்பதை முடிவிற்குக் கொண்டுவர, பார்ப்பனர்களோடு மணவுறவை அதிகப்படுத்தி பார்ப்பன இனத்தை இல்லாமல் செய்துவிட்டால் நிரந்தர நிம்மதி கிடைக்கும் என்ற தீர்வு சரியா?

பதில் :               மிகவும் ஆபத்தான யோசனை இது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று. தவறிக்கூட இப்படி நினைக்காதீர்கள்! தந்தை பெரியார் சொன்னார். பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்யும் மற்றவர் பார்ப்பனக் கலாச்சாரத்திற்கு அடிமையாகிவிடுகிறார். பார்ப்பன ஆணைத் திருமணம் செய்வோரும் ‘பார்ப்பன கலாச்சாரத்தையே பெரிதும் ஏற்று மாறிவிடுகிறார்கள் என்பது யதார்த்தமான காட்சி அல்லவா? எங்கோ சில அபூர்வ விதிவிலக்குகள் இருக்கலாம்; அப்படிப்-பட்டவைகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது. விலக்குகள் உண்டு என்றாலும் அவை ஒருபோதும் விதியாகா.

– பேட்டி கண்டவர் மஞ்சை வசந்தன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *