சூழும் கேட்டின் சூடு தொடுமுன் வீழும்படி அதை விரட்டி அடிப்பவர்!

டிசம்பர் 01-15

 

– மஞ்சை வசந்தன்

தறிகெட்டு, தரம் இழந்து, மூளை முழுவதும் மூடநம்பிக்கையைப் பதித்து, தன்மானம் பறிக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, சூத்திரர்களாய் தமிழர்கள் ஆக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிந்து, அவர்களை வணங்கி வாழ்ந்து தாழ்ந்து வீழ்ந்து கிடந்த நிலையில் தந்தை பெரியார் வந்தார்.

தொன்மைத் தமிழர், அறிவு வயப்பட்ட, மனிதநேயங் கொண்ட, சமத்தவம் நிலைத்த, பண்பாடும், பல்துறைத் திறனும், மொழிவளமும் மிகுந்த, உலகிற்கே வழிகாட்டி வாழ்ந்த உயர் வாழ்வு இழந்து, இன்றைக்கு அனைத்தும் தொலைத்து அடங்கி வாழும் அடிமை வாழ்வு வாழலாமா? இந்த மண்ணுக்கு உரியவர்கள் மட்டுமல்ல, இன்றைக்குப் பல நாடுகளாக பெயர் கொண்டு விளங்கும் உலகின் பெரும் பகுதிக்கும் உரிய இனம் தமிழினம்.

 

அங்கெல்லாம் வாழ்ந்து பல்வேறு பண்பாடுகளை பதிவிட்ட தமிழினம். உலக மொழிக்கும், அறிவு நுட்பங்களுக்கும் மூலமாக  விளங்கிய தமிழினம், இன்று பிச்சையெடுத்து பிழைக்க வந்த ஆரிய கூட்டத்திற்கு அடிமை-யாகிக் கிடப்பதா? என்று ஆர்த்தெழுந்தார். மீண்டும் தமிழர்களை மானமும் அறிவும் உரிமையும் உடையவர்களாக்க வேண்டும் என்று உறுதிகொண்டார்.

அதுபெரும் வேலை என்பதும், அதை அவ்வளவு எளிதில் சாதித்துவிட முடியாது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். ஆனால், அப்பணியைச் செய்ய எவரும் முன்வராததால் தானே முயன்று முடிப்போம் என்று முனைந்து எழுந்தார்.

“இப்பெரும் பணியைச் செய்ய எனக்குத் தகுதியிருக்கிறது என்பதால் இப்பணியைச் செய்ய நான் வரவில்லை. இதைச் செய்ய யாரும் முன்வராத காரணத்தால் முடிந்த மட்டும் முயற்சிப்போம் என்ற முடிவிலே முயற்சிக்கிறேன். “மாமலையை மயிரைக் கட்டி இழுக்கிறேன்; வந்தால் மலை, போனால் மயிர்!’’ என்று முன்கூட்டியே முடிவு செய்தே அரும்பெரும் பணி செய்ய அடியெடுத்து வைத்தார்.

அவரது பேச்சும், நேர்மையும், தன்னலமற்ற வாழ்வும், அஞ்சாமையும் அறிவுநுட்பமும், தொலைநோக்குப் பார்வையும், ஆளுமைத் திறனும், தலைமைத் தகுதியும் _ பண்பும் தூய்மையும், வாய்மையும் மக்களை ஈர்த்தன. ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வு தமிழரிடையே வளர்ந்தது. ஆரிய ஆதிக்கக் கோட்டை அதிர்ந்து மெல்ல மெல்லத் தகர்ந்தது.

இனஉணர்வு மிக்கத் தமிழர்கள் தந்தை பெரியாரின் பின்னே அணிஅணியாய் பணிசெய்ய வந்தனர். அப்படி வந்தவர்களுள் 10 வயதுடைய சிறுவன் வீரமணியும் ஒருவர்.

ஆம்! வாழ்ந்து நலிந்த எளிய குடும்பத்தில் பிறந்த 11 மாதத்தில் தாயை இழந்து சிற்றன்னையால் வளர்க்கப்பட்ட, தந்தை பெரியாரின் தொண்டர் ஆசிரியர் திராவிட-மணியால் பெரியாரின் பகுத்ததறிவு செறிவூட்டப்-பட்டு, 10 வயதில் தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கினார். இன்றைக்குச் சற்றொப்ப 75 ஆண்டுகள் அப்பணியைத் தொடர்ந்து அய்யாவின் அடியொற்றி, அயராது, அலுக்காது ஆர்வத்துடன், அக்கறையுடன், அச்சமின்றி செய்து வருகிறார்.

தந்தை பெரியார் அடித்து நொறுக்கி செப்பனிட்டப் பாதையில் அவர் பணியைத் தொடர்ந்தார் என்றாலும், அவர் முன்வந்த சவால்கள் வலுவானவை மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவமும், தமிழரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியவைகளாகவும் இருந்தன.

மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்ற தடை, குலக்கல்வி என்ற குழி பறிப்பு இவற்றையெல்லாம் துணிவுடன், ஆற்றலுடன் எதிர்த்துத் தகர்த்து, சமன் செய்து தமிழினத்தின் உரிமைகளை மீட்டு, கல்வி, வேலைகளில் நுழைந்து பெருக வழி செய்தார். பெரியார், காமராசர் போன்றோர் அதற்குத் துணை நின்றனர்.

அய்யா, அம்மாவின் இறப்பிற்குப் பின், பெரும் போராட்டப் பொறுப்பை ஏற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், விழிப்போடும், துடிப்போடும், விடாமுயற்சியோடும் இந்த இனத்தின் நலத்தைக் காத்து வருகிறார்.

தமிழர்க்கு எதிரான கேடு, பெண்களுக்கு எதிரான கேடு, தமிழுக்கு எதிரான கேடு, தமிழ் மரபு, பண்பாடு, தமிழர் உரிமைக்கு எதிரான கேடு, எந்த வடிவில் வந்தாலும் அக்கேடு வந்து தாக்கும் முன்னே, வந்து, நொந்து நோகுமுன்னே, அதை விழிப்போடு தகர்த்து இந்தத் தமிழினத்தின் நலம் காக்கும் நலப்பணியை நாளும் செய்து வருகிறார்.

இயக்கத்தை நடத்தும் பெரும் பொறுப்பை இவர் ஏற்ற ஓரிரு மாதங்களிலே பிற்படுத்தப்-பட்டோருக்கு எதிரான அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவுகள் ஒவ்வொன்றாய் அறிவிக்கப்பட அவற்றை ஆற்றலோடும், நுட்பத்தோடும் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அடுத்தடுத்து வந்து சேர்ந்தன.

13.06.1978இல் அ.தி.மு.க. அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை பிற்படுத்தப்பட் டோருக்கு 60%லிருந்து 70%ஆக உயர்த்தி பெருங்கேட்டினைச் செய்தது.

அதை அறிந்தவுடனே தமிழர் தலைவர் அவர்கள், கொதித்தெழுந்து 14.06.1978 விடுதலை நாளேட்டில், மேற்கண்ட அறிவிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

மதிப்பெண் தகுதி உயர்த்தப்பட்டது எப்படியெல்லாம் பிற்படுத்தப்பட்டோரைப் பாதிக்கும் என்பதை ஆதாரங்களோடும், காரணங்களோடும் விளக்கி எழுதினார்.

அவற்றை ஊன்றிப் படித்த எம்.ஜி.ஆர். தமது அரசின் முடிவை மாற்றி, அந்தப் புதிய அறிவிப்பை விலக்கிக் கொண்டார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு நேரவிருந்த பெரும் பாதிப்பை நீக்கி, பல்வேறு நாடுகளில் பணிகளில் சேரும் வாய்ப்பினை உருவாக்கியதோடு, அக்குடும்பங்களின் உயர்விற்கும் வழிவகுத்தார் தமிழர் தலைவர்.

பிற்படுத்தப்பட்டோருக்குப் பேரிடியாய் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் கொண்டுவந்த 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையின் கேடு பாதிக்கும் முன்னே அதைத் தடுத்து விலக்க தமிழகம் எங்கும் போராட்டங்கள் பல நடத்தினார். கண்டனக் கூட்டங்கள், விளக்கக் கூட்டங்கள், ஆணை எரித்து சாம்பல் அனுப்பும் போராட்டங்கள் என்று அடுக்கடுக்காய் பலவற்றைச் செய்து, எம்.ஜி.ஆர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணை எந்த அளவிற்கு பிற்படுத்தப்பட்டோரை பின்னுக்குத் தள்ளி அழிக்கும் என்பதையும், இடஒதுக்-கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்-படியும், நியாயப்படியும் தவறு என்பதையும், ஜாதியடிப்படை நிலையானது, பொருளாதார அடிப்படைத் தற்காலிகமானது, ஒரு நாளில்கூட மாறக்கூடியது என்பன போன்ற உண்மையை உணரும்படிச் செய்து, அந்த ஆணையை விலக்கும்படிச் செய்ததோடு, பிற்படுத்தப்-பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31%லிருந்து 50% ஆக உயர்த்தித் தரும் உள்ள மாற்றத்தையும் எம்.ஜி.ஆருக்கு ஏற்படுத்தினார்.

9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை நீக்கச் செய்ததும், பிற்படுத்தப்-பட்டோருக்கான 50% ஆக உயர்த்திப் பெற்றதும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் சாதனை என்பதோடு, பிற்படுத்தப்-பட்டோருக்கான பேராபத்தை நீக்கி, பெரும் வாய்ப்பை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெற்றுத் தந்த பெரும் சாதனையாகும்.

அதேபோல், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு தமிழக அரசால் 1979இல் அறிவிக்கப்பட்டபோது, அது ஒடுக்கப்பட்ட மக்களை அந்த இரு கல்லூரி-களிலும் நுழையாமல் செய்துவிடும் என்ற பேராபத்தை உணர்ந்து, உடனடியாகச் செயல்பட்டு, கண்டன அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று பல நடத்தி அரசு அதை விலக்கிக்கொள்ளும்படிச் செய்தார். ஆனால், 1984இல் மீண்டும் தமிழக அரசால் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்-பட்டது. அதுகண்டு கொதித்த ஆசிரியர் கடுமையான போராட்டங்கள் மூலம் 2007இல் நுழைவுத் தேர்வை அகற்றச் செய்தார். அதன் பயன்தான் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு இன்றளவும் நுழைய முடியாமல் தவித்து நிற்கிறது.

மாநில அரசில் உள்ளதுபோல் மத்திய அரசின் பணிகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று பரிந்துரைத்த மண்டல் குழுவின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு பிரச்சாரங்கள், விளக்கக் கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தி, சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் பெற்றுத் தந்தார். அதனால், இந்தியா முழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பயன் பெற்று மத்திய அரசுப் பணிகளில் அமர்ந்து வருகின்றனர். இதன்மூலம் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமையை நிலைநாட்டினார்.

தமிழக அரசு வெளியிட்ட இடஒதுக்கீட்டு அறிவிப்பில் ஓ.சி.(O.C.) என்பதை மற்ற ஜாதியினர் (Other Caste) என்று குறிப்பிட்டிருந்த-போது, உடனடியாக அத்தவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஓ.சி. (O.C.)) என்பது பொதுப்போட்டி அதில் எல்லா ஜாதியினரும் போட்டியிடலாம், அது மற்ற ஜாதியினருக்கு அல்ல என்று தவறு நேராது தடுத்தார். அது மட்டுமின்றி காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, முதலில் பொதுப் போட்டியை நிரப்பிவிட்டு அதன்பின் இடஒதுக்கீட்டை நிரப்ப வேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட பிரிவில் உள்ள உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களைக் கொண்டு இடஒதுக்கீட்டை நிரப்பிவிட்டு, உயர் ஜாதியினர் பொதுப் போட்டியை அபகரித்துவிடுவர். பொதுப் போட்டிதான் முதலில் நிரப்பப்பட்டால் உயர் மதிப்பெண் பெற்ற ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பொதுப் போட்டியில் இடம் கிடைக்க, அதைவிட குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும். அதுவே சரியான சமூகநீதிக் கோட்பாடாகும் என்று எடுத்துரைத்து தவறு நேராது தடுத்துக் காத்தார்.

நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் இடஒதுக்கீட்டு அடிப்படையில் செய்யப்பட, 26.08.1985, 21.11.1986, 02.11.1987, 12.06.1990, 26.04.1994, 26.03.1997 என்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட போராடி ஓரளவு வெற்றி பெற்றள்ள நிலையில் முழு வெற்றி பெற போராடி வருகிறார்.

தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் பெரும் போராட்டங்-களால் 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் தரப்படுகிறது. அதைப் பொறுக்காத ஆரிய பார்ப்பனர்கள் அதைச் சட்டரீதியாக தகர்த்துவிட வேண்டும் என்று பல வழிகளிலும் முயன்றபோது, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொண்டு, 1994இல் அரசியல் சாசனத்தில் 31சி  பிரிவில் சேர்க்கச் செய்து 69% இடஒதுக்கீட்டிற்கு நிலையான பாதுகாப்பை உருவாக்கினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படாத நிலையில், ஒடுக்கப்-பட்ட மாணவர்களை ஆரியப் பார்ப்பனர்கள் தலைதூக்க விடாமல் தடுத்தும், தாக்கியும், தொல்லைகள் தந்தும், உதவித் தொகையை மறுத்தும் கொடுமைகள் செய்த நிலையில் அதற்காகப் பல போராட்டங்களை நடத்தியதோடு, திருச்சிக்கு அருகில் பெரியார் உலகில் உலகம் வியக்க நடந்த ஒப்பற்ற மாநாட்டில், இந்தியா முழுவதிலிருந்தும் ஒடுக்கப்பட்ட மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசச் செய்து, உங்களுக்குப் பின் நாங்கள் இருக்கிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து, நம்பிக்கையும் தெம்பும் ஊட்டினார். அதன் விளைவாய் நாடெங்கும் சமூக நீதிக்கான விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு, தங்கள் உரிமைக்காகப் போராடி, தேவைகளையும், உரிமைகளையும் பெற வழிசெய்தார்.

மத்திய அரசின் “நீட் தேர்வு’’ பாதிப்பை அறிந்து அதை அகற்ற அயராது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புதிய கல்வித்திட்டம் என்ற பெயரில் பழைய குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய பி.ஜே.பி. அரசு தற்போது முயன்று அதற்கான அறிவிப்புகளைச் செய்த நிலையில் இந்தியாவிலே எங்கும் இல்லா கடும் எதிர்ப்பை மத்திய அரசுக்குத் தெரிவித்ததோடு, அதுசார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி நாடெங்கும் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருவதோடு, ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்ற முத்தரப்பு மாநாட்டை டிசம்பர் இறுதியில் நடத்தி மத்திய அரசிற்கு பெரும் எதிர்ப்பைக் காட்டி வருகிறார். ஆசிரியர் ஊட்டிய விழிப்புணர்வு, நாடு முழுவதும் எதிரொலிப்பதால் குலக்கல்வி பாதிப்பு தாக்காமல் தடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இப்படி சமுதாயத்திற்கான கேடு தொடு-வதற்கு முன்னே அதைத் தடுத்துத் தகர்த்து, சமூகநீதி காத்து, ஒடுக்கப்பட்டோரின் உரிமை காத்து, அவர்களின் உயர்விற்கு வழிகாட்டி வருகிறார். அவர்தம் அருந்தொண்டு ஆண்டுகள் பல தொடர, பல்லாண்டு நலமுடன் அவர் வாழ வாழ்த்துகிறோம்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *