தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.G.K.வாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

டிசம்பர் 01-15

 
வாழிய பல்லாண்டு!

வளர்க அவர்தம் பொதுத் தொண்டு!

திராவிடர் கழகத்தினுடைய தலைவர் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஐயா திரு.கி.வீரமணி அவர்களின் 84ஆவது பிறந்த நாள் தொடர்பாக ஓர் சிறப்பிதழ் வெளியிடப்படும் செய்தி அறிந்தேன், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 75 ஆண்டுகாலப் பொது வாழ்க்கைப் பின்னணி இவருக்கு உண்டு என்பதை எவரும் அறிவர். அற்புதமான பேச்சாளர், அறிவார்ந்த எழுத்தாளர், சிறந்த சிந்தனையாளர், செயல்வீரர், சமுதாயப் போராளி, சமரசத்தை கொள்கையில் ஏற்காதவர், தன்னலம் துறந்த பொதுநலவாதி, தமிழர் நலனே தன் நலனாகக் கொண்டவர், தமிழர் தலைவர், ஆசிரியர் _ எனப் பல பரிமாணங்கள் அவருக்கு உண்டு என்பது உண்மையே!

ஆனால், காந்திஜிக்கு வினோபாஜி, அதுபோல் தந்தை பெரியாருக்கு ஆசிரியர் வீரமணி! முக்கியமான ஒற்றுமை: காந்திஜி வழியில் வினோபாஜியும் பதவியை மறுத்தார்; கடைசி வரை காந்தியத்தைப் பரப்புவதையே கொள்கையாகக் கொண்டார். அதேபோல் தந்தை பெரியார் வழியில் ஐயா வீரமணியும் பதவியை மறுத்தார்; அவர்களது கொள்கைகளைப் பரப்புவதையே தன் இலட்சியமாகக் கொண்டு வாழ்கிறார்.

தந்தை பெரியார், ‘இறைமறுப்பு’ _ கொள்கை கொண்டவர். ஆனால் அவரே ஒரு வகையில் ‘சிருஷ்டி கர்த்தாவாக’ இன்று பலர் கண்ணுக்குத் தெரிகிறார். ஆம்! மூன்று கல்வி நிறுவனங்களுக்கு வித்திட்டார் பெரியார்! அவற்றை 50 கல்வி நிறுவனங்களாக வளர்த்து, கல்விச் சாலைகள் கொண்ட கவினுறு சோலையாக, பல்கலைக்கழகமாக மாற்றிய சாதனைச் செம்மல்தான் ஆசிரியர் ஐயா வீரமணி அவர்கள். காற்று உள்ளவரை, கடல் உள்ளவரை அவரது கல்விப்பணி மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டே இருக்கும். சமூக சீர்திருத்தப் பணி தமிழனை தலைநிமிரச் செய்யும்!

வாழிய பல்லாண்டு! வளர்க அவர்தம் பொதுத் தொண்டு! என்று ஆசிரியர் ஐயா அவர்களை மனமாற வாழ்த்துகிறேன்.

                       
அன்புடன், G.K.வாசன்

நாள்: 07.11.2016   
 இடம்: சென்னை

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *