– கவிஞர் கலி.பூங்குன்றன்
திராவிடர் கழகத் தலைவர் _ தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தொடக்கக் காலகட்டத்தில் கடலூர் வீரமணி என்று அறிமுகப்படுத்தப்பட்டவர். திராவிடர் கழகப் பொதுக்கூட்ட சுவரொட்டிகளில் அப்படித்தான் காணப்படும்.
அவர் மேடைப் பேச்சாளராக அறிமுக-மானவரே தவிர, எழுத்தாளராக அறிமுகப்-படுத்தப்பட்டதில்லை. அது உண்மையும்கூட!
‘விடுதலை’ ஆசிரியராக தந்தை பெரியார் அவர்களால் அந்த ஆசிரியர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டபோதுகூட அவருக்குள் ஒரு தயக்கம் இருந்ததுண்டு. இதனை ஆசிரியர் அவர்களே ஒப்புக்-கொண்டுள்ளார்.
அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் அவரின் முயற்சியும், உழைப்பும், முனைப்பும் அவரை ஆற்றல்மிகு எழுத்தாளராக வடித்துத் தந்தது. தந்தை பெரியார் என்னும் தத்துவ ஆசானின் இலட்சிய ஊட்டச்சத்து அவரை மெருகேற்றி, மெருகேற்றி மேல் தளத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தியது. தமிழுக்கு அவர் அளித்த அருங்கொடைகள்தான். “மானமிகு’’, “தொண்டறம்’’, “நினைவிடம்’’ என்பவை. அவர் எழுதிய நூல்கள் என்பவை ஒருபுறம். அவர் உரையாற்றி, நூல்கள் ஆக்கப்பட்டவை மறுபுறம். இரண்டாவது வகையில் வெளிவந்தவைதான் அதிகம்.
பல மாதங்கள் ஆய்வு செய்து வடித்துக் கொடுத்த நூல்தான் கீதையின் மறுபக்கம். அந்த நூலுக்காக தமிழுலகம் மட்டுமல்ல. பார்ப்பன ஆதிக்கத்தால் _ இந்துத்துவாவின் வருணக் கொடூரத்தால் இழிவுபடுத்தப்பட்ட, வீழ்த்தப்-பட்ட கோடானுகோடி பார்ப்பனர் அல்லாதார் _ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த ஒட்டுமொத்த பெண்கள் அனைவரும் “கீதையின் மறுபக்கம்’’ நூலுக்காக அவரவர்களுக்குத் தோன்றிய வகைகளில் எல்லாம் நன்றி சொல்லக் கடமைப்-பட்டுள்ளனர். பாராட்டவும் கடமைப்-பட்டுள்ளனர். (இந்நூல் ஆங்கிலத்திலும் Bhagavad Gita Myth or Mirage என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.)
கீதை எந்த அளவுக்கு விளம்பர யுக்தியால் உச்சத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டதோ அந்த அளவுக்குக் கீழாக _ மனிதத்தைக் காலால் இடரும் கேவலமான ஒன்றே!
இந்து மதத்தில் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றி சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் பல நூல்களை வெளியிட்ட-துண்டு. கீதையைப் பற்றியும் விமர்சித்து ஒரு நூல் வெளிவர வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் உள்ளக் கிடக்கை. அப்படியொரு நூலை எழுத முற்படுபவர்-களுக்குத் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றுகூட தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டதுண்டு. (‘விடுதலை’ 16.11.1973)
யாரும் முன்வராத நிலையில் அய்யாவின் அருமை சீடராம் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் அய்யாவின் அந்தக் கடைசி காலகட்ட வேட்கையையும் நிறைவேற்றிக் கொடுத்தார். (1998)
இந்த நூல் வெளிவந்தபோது ஆரியம் அலறியது. இந்துத்துவா சக்திகள் உறுமின. தடை செய்ய வேண்டும் என்றுகூட கோரிக்கையை முன்வைத்தன. தூதுக்குழுவாகச் சென்று முதல் அமைச்சரைச் சந்தித்ததுண்டு.
இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முதல் அமைச்சர் கலைஞரைச் சந்தித்து “பகவத் கீதை’’ நூல் ஒன்றைக் கொண்டுபோய் மானமிகு கலைஞர் அவர்களிடம் கொடுத்து, படித்துப் பார்க்கச் சொன்னார். ‘குடிஅரசு’ தந்த கருவூலமான மானமிகு கலைஞர் அவர்களோ, திரு.இராமகோபாலனை எதிர்பார்த்திருந்த முறையில் அவருக்கு மற்றொரு நூலை அன்பளிப்பாகக் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னார்.
அந்த நூல் வேறு ஒன்றும் அல்ல. நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதிய, “கீதையின் மறுபக்கம்’’ என்ற நூல்தான் அது. அதனைத் திருவாளர் இராம.கோபாலய்யர்வாள் எதிர்பார்த்திருக்க மாட்டாரே!
குறுகிய காலத்தில் அதிக விற்பனை என்ற சாதனையை அன்று பெற்றது அந்நூல்.
கீதையைப் பற்றி பார்ப்பனர் அவர்களுக்குள்ள பிரச்சார பலத்தால் உலகம் முழுவதும் பரப்பி, அதற்கு மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்கி வைத்துவிட்டார்கள். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு யார் சென்றாலும் குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள், ஆளுநர்கள் என்று மறக்காமல் எடுத்துச் சென்று வெளிநாட்டுப் பிரதமர், அதிபர், பிரமுகர்களுக்கெல்லாம் நினைவுப் பரிசாகக் கொடுப்பது இந்தக் கீதையைத்தான்.
சொன்னால் யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள். கேரள மாநில முதல் அமைச்சராக இருந்த மார்க்ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த ஈ.கே.நாயனார் அவர்களே வாடிகன் சென்று போப்பைச் சந்தித்தபோது இந்தக் கீதையைத்தான் கொடுத்தார்.
‘மனிதன் வறுமைக்கும், கீழ்மைக்கும் காரணம் கர்மபலன்தான். விதியின் விளையாட்டே’ என்று சொல்லும் கீதையை ஒரு கம்யூனிஸ்ட்டாக இருக்கக் கூடியவர் _ அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக ஆனவரே கீதையைத் தூக்கிக்கொண்டு திரிகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல! பி.ஜே.பி. _ மதவாத கட்சி. அதனை வீழ்த்த வேண்டும் என்று வீறுகொண்டு எழுதுவது மிகவும் சரியே! இந்தியாவின் ஒட்டுமொத்தமான சிந்தனை வீழ்ச்சிக்கு வேர்ப்புலமாக இருக்கக் கூடியது _ மக்கள் தங்கள் வீழ்ச்சிக்கு தாங்களே நியாயம் கற்பித்துக்கொள்வது _ அந்த ஆபத்தான மனநிலையை ஊட்டி வளர்க்கும் ஒரு நூல்தான் கீதை. அந்த வகையில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கையாளர்கள்கூட கீதையை ஒழித்திட மிகப் பெரிய போர்க்காலப் பணிபோல செயல்பட வேண்டியது அவசியம்; அதற்கு மின்னோட்டமாக இருப்பதுதான் திராவிடர் கழகத்தின் பணி. அதன் தலைவரின் ஆக்கப்பூர்வமான இந்த நூல் உருவாக்கமும். அதற்காகவே! உண்மையில் கீதை என்னதான் சொல்லுகிறது? ஒன்றை எதிர்ப்பது என்றால் கண்மூடித்தனமாக எதிர்ப்பது பகுத்தறிவாகாது.
தந்தை பெரியார் இராமாயணத்தைப் பற்றிப் பேசுகிறார் என்றால், இந்தியாவில் உள்ள அத்தனை இராமாயணங்களும் அவருக்கு அத்துப்படி. இவை மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளனவே!
தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்னும் நூல் கணக்கற்ற பதிப்புகளைச் சந்தித்து இருக்கிறது! அதில் ஒரே ஒரு வரியை எவராலும் மறுக்க முடிந்திருக்கிறதா?
எல்லாவற்றிற்கும் ஆதாரக் குறிப்புகள் உண்டே! அதுவும் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட பல்வேறு இராமாயணங்களைக் கொண்டே தன் கருத்தை நிறுவி இருக்கிறார் தந்தை பெரியார்.
அந்நூல் ஆங்கிலத்தில் “Ramayana – A True Reading”என்று வெளிவந்தது. ‘சச்சு இராமாயண்’ என்று இந்தியிலும் வெளிவந்துள்ளது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட கீதையின் மறுபக்கம் என்ற நூலில் கண்டுள்ள ஒரு வரிக்காவது மறுப்புரை வந்ததுண்டா? கீதையை விமர்சிப்பதா என்று கீச் கீச் என்று கத்தும் ஆரியப் பூனைகள் இந்நூலைப் படித்துவிட்டு, மறுப்பு இருந்தால் எழுத வேண்டியதுதானே! எழுதவில்லையே. ஏன் எழுதவில்லை? எழுத முடியாது. அதனால் எழுதிடவில்லை என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.
விரிவாக எழுதினால் அதுவேகூட ஒரு தனி நூலாக ஆகிவிடும். ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகள் _ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற முறையில்.
“நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தரும உற்பத்தியாளனாகிய என்னால்கூட முடியாது.’’ (கீதை, அத்தியாயம் 4, சுலோகம் 13)
பிறப்பின் அடிப்படையிலேயே வருணதர்மம் படைக்கப்பட்டது. அதுவும் கடவுள் கிருஷ்ணனாகிய தன்னாலே உண்டாக்கப் பட்டது என்று சொன்னால், இந்து மதத்தின் கடவுள் என்பது எல்லோருடைய மதிப்புக்கும், பக்திக்கும் உரியதல்ல என்பது விளங்கிடவில்லையா?
இன்னும் கொஞ்சம் வெள்ளை வெளேரென விளங்கும்படி எடுத்துக்காட்ட முடியும். ‘பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்’. (கீதை, அத்தியாயம் 18, சுலோகம் 44)
இன்னும் இதுபோல் ஏராளம் உண்டு.
இவ்வளவுக் கீழ்த்தரமாகப் பெண்களையும், ஆண்களையும் குறிப்பிடுகிற ஒரு நூல் கடவுளால் கற்பிக்கப்பட்டது என்று சொல்லி அதனை உலகம் முழுவதும் தூக்கிச் சுமந்து சென்று பரப்புரை செய்கிறார்கள். அப்படிப் பரப்புவதற்கென்றே அறக்கட்டளைகளை வைத்துச் செயல்படும்போது அதன் உண்மைத் தன்மையைத் தோலுரித்துக் காட்டும் ஒரு கடமையை ஒருவர் செய்துள்ளார் என்றால் அவருக்கு மானுடமே தலைவணங்கிட வேண்டும். உலக மனித உரிமை அமைப்புகள் இந்த ஒரு பணிக்காக மட்டுமே பாராட்டும், விருதும் அளித்திருக்க வேண்டாமா?
சங்கராச்சாரியார் யார்?
இந்து மதத்தில் போதகர்களாக இருக்கக் கூடியவர்கள் சங்கராச்சாரியார்கள். ஆதிசங்கரர் இந்தியாவின் நான்கு திசைகளிலும் சங்கர மடங்களை உருவாக்கி இந்து மதத்தை பரப்பவும், கட்டிக் காக்கவும் ஏற்பாடு செய்தவர்.
இதில் காஞ்சி மடம் அடங்காது என்றாலும் அதனை எப்படியோ பொய்யும் புனைசுருட்டும் கொண்டு ஒரு மடமாக நம்பும்படிச் செய்துவிட்டார்கள்.
அது ஒருபுறம் இருக்கட்டும். இந்த சங்கராச்சாரியார்களை லோகக்குரு _ ஜெகத்குரு என்றும் காற்றடித்து வானில் பறக்க விடுகிறார்கள். உண்மையில் இந்த சங்கராச்சாரியார் யார்? அனைத்து இந்து மக்களுக்கும் தலைவர்தானா? அனைத்து இந்து மக்களையும் சரிசமமாக மதிக்கக் கூடியவர் தானா? என்பது அறிவுச் செழுமையான கேள்வியாகும்.
எப்படி கீதை பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்று கூறி, பிறப்பின் அடிப்படையிலேயே பார்ப்பனர்களை முதல் தட்டில் நிறுத்தி, மற்றவர்களை பார்ப்பனர்-களின் அடிமைகளாக நிலைநிறுத்துகிறதோ, அதன் விரிவாக்கத் தூதர்களாக இருந்து செயல்படக் கூடியவர்தான் இந்த சங்கராச்சாரியார். வருண தர்மத்தைக் காக்கக் கூடியவர், இன்னும் சொல்லப் போனால் தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லுபவர்கள் மட்டுமல்ல. நம்புகிறவர்கள் இந்த சங்கராச்சாரியார்கள்.
காஞ்சி சங்கரமடம் குறித்தும், சங்கராச்சாரியார்கள் குறித்தும் சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்து சிறப்புக் கூட்டங்களில் பகுத்தறிவாளர் கழகப் புரவலரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவுமிருந்த ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய பத்து சொற்பொழிவுகளின் திரட்டுதான் “சங்கராச்சாரி _ யார்?’ எனும் நூலாக 1986இல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் Saint or Sectarian என்ற பெயரிலும் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பரவும் வகை செய்யப்பட்டது.
இந்நூலுக்கும் இதுவரை எவராலும் மறுப்பு எழுத முடியவில்லை என்பது இந்நூலுக்குரிய தனி மதிப்பும், சிறப்புமாகும்.
ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்நூலைப் படித்த சிங்கப்பூர் வாசகர் திரு.டி.கோவிந்தசாமி என்ற அன்பர் எழுதிய ஒரு கடிதம், இந்த நூல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கான ஆவணமாகும்.
“திருவாளர் வீரமணியும், திராவிடர் கழகமும் வாழ்க!
தங்களின் ‘துறவியா? வகுப்புவாதியா?’ (Saintor Sectarian? ஆங்கில மொழிபெயர்ப்பு) என்ற நூலைப் படித்த பின்புதான் நான் எவ்வளவு காலம் இருட்டுக்குள் வாழ்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். தங்களுடைய நூல் என் கண்களைத் திறந்துவிட்டது’’ என்று அந்தக் கடிதத்திலே தம் மனதைத் திறந்து காட்டியுள்ளார்.
தந்தை பெரியார் அவர்களின் நூல்களாக இருந்தாலும் சரி, ஆசிரியர் அவர்களின் நூல்களாக இருந்தாலும் சரி, இயக்கம் வெளியிடும் நூல்கள் அத்தனையுமே கொண்டு சேர்க்கும் வரைதான் நமது கடமை. கொண்டு சேர்க்கப்பட்டால் அந்நூல்கள் அவற்றின் வேலையைத் திறம்பட செய்தே தீரும்; சிந்தனையில் மின் அதிர்வை ஏற்படுத்திப் பெரியார் பாதைக்குக் கைபிடித்து அழைத்தே வரும் என்பது பத்தும் பத்தும் இருபது என்பது போன்ற கெட்டியான உண்மையாகும்.
“சங்கராச்சாரி _ யார்?’’ எனும் நூலில் இடம்பெற்ற ஒன்றிரண்டைச் சொன்னாலே _ மற்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினைத் தூண்டும்.
“சில வகுப்பாருக்கு உரியதையும் புறக்-கணித்து சர்க்காரே பிற்பட்ட வகுப்பார்க்கு அதிகப்படி சலுகை காட்டுவதால்தான் இந்த விசயத்தில் மட்டும் நான் கம்யூனல் பேஸிஸில், “வகுப்பு அடிப்படையில்’’, பேசியாக வேண்டி யிருக்கிறது’’ என்கிறார் காஞ்சிமட மூத்த சங்கராச்சாரியாராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
புரிகிறதா? நாட்டில் தாழ்த்தப் பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதாம். அது அதிகப்படியானதாம். அதனால் இந்த விடயத்தில் கம்யூனல் பேஸிஸில் (பிராமணன் என்ற அடிப்படையில்) பேசுகிறாராம்.
ஜெகத்குரு என்று கூறப்படுபவர், எல்லோருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய ஒரு ஜெகத்குரு கம்யூனல் பேஸிஸில் பார்ப்பனர்களுக்காக வாதாடுகிறேன் என்று சொல்லுகிறார் என்றால், ஜெகத்குரு என்ற போர்வையில் அவர்கள் யாருக்காக உயிர் வாழ்கிறார்கள் என்பது விளங்குகிறதா இல்லையா?
சங்கராச்சாரியாரின் “கம்யூனல்’’ வகுப்புரிமை பற்றிய கருத்து என்ற தலைப்பின்கீழ் காஞ்சி சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரல்’’ எனும் நூலிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார் தமிழர் தலைவர்.
அந்த சங்கராச்சாரியாரின் மனிதத் தன்மை எத்தகையது?
“நாஸ்திகனுக்கு வைத்தியம் பண்ணி ஆயுளை நீடிக்கப் பண்ணினால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்துகொள்ள இடம் தருவதாக ஆவதால், அவனுக்கு வைத்தியம் பண்ணாதே!’’ என்று குறிப்பிடுகிறார் ஒரு மனிதர் என்றால், எவ்வளவு மனிதாபிமானமற்ற ஈனப்புத்தி இது! இதுவும் தெய்வத்தின் குரலில் இருந்து வெளிப்படுத்திக் காட்டப் பட்டுள்ளது. இந்த நூலில் உள்ளவற்றை இன்னும் எவ்வளவோ எழுதலாம், சொல்லலாம். திராவிடர் கழகப் பிரச்சாரத் துறையில் நமது ஆசிரியர் படைத்திருக்கும் வெளியிட்டிருக்கும் செயற்கரிய காலத்தை வென்ற கருத்துக்களைப் பரப்பும் பேராற்றல் கொண்ட நூல்கள் பற்பல! நாம் பெருமைப்படுகிறோம். அதைவிடப் பெருமை திக்கெல்லாம் அவற்றைக் கொண்டு சேர்ப்பதே!
வாழ்க பெரியார்!
வாழ்க அவர் வழிவந்த தலைவர் ஆசிரியர்!