பீகார் முதல்வர் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்களின் வாழ்த்துச் செய்தி
ஒடுக்கப்பட்டோர் உயர்விற்காக ஓயாது உழைக்கும் கி.வீரமணி
அவர்கள் வாழ்க பல்லாண்டு!
பெரியார் கொள்கைக் குடும்பம், டாக்டர் கி.வீரமணி அவர்களின் 84ஆவது பிறந்த நாள் விழாவை 02.12.2016 அன்று ‘சுயமரியாதை நாள்’’ ஆகக் கொண்டாடுகையில், சிறப்பிதழ் வெளிவருவது குறித்து உள்ளார்ந்த உவகை கொள்கிறேன்.
திரு.கி.வீரமணி அவர்கள் 10 வயது சிறுவனாக இருந்தபோதே, 1944இல் சேலத்தில் கூட்டப்பட்ட நீதிக்கட்சி மாநாட்டில் திரளாகக் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றியமையால் வெகுமக்களால் அறியப்பட்டவர். திராவிட இயக்கத்தின் தீவிரத் தொண்டராய் அறிஞர் அண்ணாதுரை அவர்களால் பெருமையாய் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கடலூரில் வழக்கறிஞராய் ஓராண்டு பணியாற்றியதை அடுத்து முழுநேர சமுதாயத் தொண்டராய் ஆனார். ஜாதி முறையை எதிர்த்தும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்திற்காகப் பாடுபடும் திராவிடர் கழகத்தின் தலைவராய் உள்ளார்.
திராவிடர் கழகத்தின் மூன்றாவது தலைவரான இவர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். சமுதாயப் பணிகளுக்குத் தன் வாழ்வை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இவர் குறிப்பாக பெண்களின் விடுதலைக்கும், உரிமைக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபட்டு அவர்களின் உயர் இலக்கை எட்ட உந்து சக்தியாக உழைத்து வருகிறார்.
டாக்டர் கி.வீரமணி அவர்களின் இச்சிறப்புக்குரிய நாளில் வெளியிடப்படும் சிறப்பு இதழ் சிறக்கவும், அவர் பல்லாண்டு வாழவும் எனது மரியாதை செறிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பு: 23.11.2016 தேதியிட்டு
‘The Modern Rationalist’ இதழுக்கு மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்கள் ஆங்கிலத்தில் அனுப்பிய வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்.