கருப்புப் பணத்தை ஒழிக்க நவம்பர் 8ஆம் தேதி இரவு 12 மணிமுதல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார் (அமைச்சரவையில் முடிவெடுத்து, குடியரசுத் தலைவர் அவர்களிடம் விளக்கி விட்டு). இதை அறிவித்தபோது, மக்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமலிருக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறி, 4000 ரூபாய் வரையில் வங்கிகளில் வாங்கிக் கொள்ளலாம் _- அடையாள அட்டையைக் காட்டி என்று அறிவித்தார்.
ஆனால், இப்போது நிதித்துறை அதிகாரிகள், நாளுக்கு ஒரு விசித்திரமான அறிவிப்புகளைச் செய்து வருவது, அரசின் நிலைப்பாட்டை கேலிக்குரியதாக்கி வருகிறது!
போதிய முன்னேற்பாட்டினை திட்டமிட்டுச் செய்து விட்டு, அதன் பிறகே இம்மாதிரி அதிரடி அறிவிப்பு, நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கவேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், கடந்த 20 நாள்களுக்கு மேலாக எல்லா தரப்பு மக்களும் -_ பெருமுதலாளிகளைத் தவிர _- அன்றாட வாழ்க்கைக்கான பணப் பரிவர்த்தனையைச் செய்ய முடியாமல், வங்கிகளின் முன்பும், ஏ.டி.எம்.களின் முன்பும் கால் கடுக்க நின்று போதிய பணம் எடுக்க முடியாமல், ஏமாந்தும், எரிச்சலும் கொண்டு, ‘என்று தணியும் இந்தக் கொடுமையின் வேகம்’ என்று சொல்லொணா துன்பத்துடன் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 50 நாள்கள் அவதியுறச் சொல்கிறார்!
மணிக்கணக்கில் வங்கிகளின் முன் வரிசையில் நிற்கும் நிலை ஒருபுறம்; சில முதியவர்கள் மயங்கி விழுந்து மரணமடைந்த கொடுமை மறுபுறம். அன்றாட அழுகும் பொருள் -_ மீன், காய்கறி போன்றவைகளைக் கூட விற்று வாழ்வாதாரத்தை நடத்த முடியாதவர்கள் மிகவும் எளிய நிலையில் உள்ளவர்கள்தான். வியாபார மந்தத்தால் வேதனைப்படுவோர் பலர் _- இப்படி 20 நாள்களாகியும் குறையாத துன்பத்தில் துவண்டுள்ள நிலைதான் நீடிக்கிறது!
புதிய 500 ரூபாய் நோட்டே இன்னமும் வங்கிகளுக்கே வந்து சேராதது, திட்டமிடலில் உள்ள கோளாறை உலகுக்கே பகிரங்கப்-படுத்துவதாக உள்ளது!
இவைகளுக்கெல்லாம் உச்சகட்ட வேதனை பணம் எடுக்க வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் வருவதால், ‘கியூ அதிகம்’ என்ற ‘புதிய கண்டுபிடிப்பை’ சில அறிவு ஜீவி அதிகாரிகள் கண்டறிந்து, அதனைத் தடுக்க விரலில் கருப்பு ‘மை’ வைக்கப்படும் என்று அறிவித்தது -_ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். நொந்த உள்ளங்களை மேலும் நொந்து போகச் செய்யும் முன்யோசனையற்ற தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் மிக மோசமான செயல் இது!
மக்கள் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க, செலுத்த உள்ள உரிமையை இப்படிப் பறிப்பதோடு, அதை ஏதோ கிரிமினல் குற்றம் போல காட்டுவது நியாயம்தானா?
டாட்டா, அம்பானி, அடானிகளின் பிரதிநிதிகளா இப்படி வருகிறார்கள்?
அடையாள அட்டையைக் காட்டித்தான் பணம் வாங்குகிறார்கள்; அங்கே பதிவு உள்ளது. இந்நிலையில், வங்கியில் கருப்பு மை வைப்பது தேவையா? வங்கி அலுவலர்களின் வேலைப் பளு மேலும் சுமையாக ஏறும். வங்கி அலுவலர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்-திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்!
நாணயங்கெட்ட மக்கள் என்று சகட்டு மேனிக்கு அனைவரையும் கூறும் அவலமும், அசிங்கமும் தேசம் முழுவதும் என்றால், உலகோர் கண்ணுக்கு இதைவிட பெருத்த “தேசிய அவமானம்’’ வேறு உண்டா?
ஏற்கெனவே நமது ஜனநாயகத் தேர்தல் முறையில் விரலில் கருப்பு மை வைப்பதே ஒழுக்கமும், நாணயமும் அற்ற வாக்காளர்-களைக் கொண்ட ஒரு நாடு என்று நாமே உலகுக்குச் சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தும் முறையாக உள்ளது. (அதுவே கூட ஆதார் அட்டை, புகைப்படச் சான்று வாக்காளர் அட்டை வந்துவிட்ட பிறகு மை வைப்பது _- நீக்கப்பட வேண்டிய, தேவையற்ற ஒரு சம்பிரதாய நிகழ்வாகும்).
கருப்பு மை வைப்போம் என்பதோ _- வேறு வேறு திடீர் திடீர் அறிவிப்புகளோ சட்டங்கள் ஆகிவிடுமா? இது என்ன? ராஜாக்கள் காலமா? ஜனநாயகக் குடியரசு என்பதில் சட்டப்படித் தானே அரசு இயந்திரங்கள், அதிகாரிகள் (வங்கி அதிகாரிகள் உள்பட) இயங்கவேண்டும் – இயங்க முடியும்? எந்தச் சட்டத்தின்கீழ் வங்கியில் பணம் வாங்க வருவோருக்குக் கருப்பு மை வைக்க முடியும்? வெறும் வாய் ஆணைகளே போதுமா?
‘அவசர சட்டமா?’ அதுவும் நாடாளுமன்றம் கூடிவிட்ட நிலையில், முடியாதே! அரசு விதிகளில் திருத்தம் என்றால், எப்போது? எப்படி?
இதையெல்லாம் ஜனநாயக நாட்டில் தகவல் அறியும் உரிமையின்கீழ் எவரும் கேட்கலாமே! ஆட்சித் தலைமைக்கு முன்யோசனை வேண்டாமா?
எண்ணித் துணிய வேண்டும்
துணிந்தபின் எண்ணுவது இழுக்கு அல்லவா?
குதிரைக்கு முன்னால் வண்டியா?
‘50 நாள்கள் அவதிப்படுங்கள்’ என்று ஹிதோபதேசம் சாமானிய மக்களுக்கு என்றால், அவர்களை வாழ முடியாதவர்களாக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசாங்கம் தெரிந்தே செய்கிறது என்கிற பழிக்கு அது ஆளாகி-யுள்ளது -_ அதன் செயல்திறன். வண்டிக்கு முன்னால், குதிரையா, குதிரைக்கு முன்னால் வண்டியா? என்பதுபோன்று ஆகிவிடாதா?
கி.வீரமணி, ஆசிரியர்