வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

நவம்பர் 16-30

அலாதி

பிறமொழிச் சொல்லன்று. வடசொல்லும் அன்று. அலாதது- – அல்லாதது என்பதன் தொகுத்தல். இருப்பு முறை அல்லாதது, தனி என்பன அதன் பொருள்கள்.

அலாதது என்பதன் மரூஉ அலாதி என்பது.
எனவே, அலாதி தூய தமிழ்க் காரணப் பெயர் என்று தெளிக.

(குயில் : குரல் : 2, இசை : 11, 22-9-1958)

முந்திரிகை – முந்திரி

முந்திரிகை என்பதை வடசொல் என்று நம்பும் தமிழர்களும் இருக்கிறார்கள் இந்த இரங்கத்தக்க தமிழகத்தில்.

இது கீழ்வாய் இலக்கத்துள் ஒன்று, அதாவது ஒன்றை முன்நூற்றிருபது பங்காக்கியதில் அவற்றிலொரு பங்கின் பெயர்.

முந்திரிகை என்னும் தொடர் மொழியில் முந்து இரிகை என்ற இரு சொற்கள் உள்ளன. முந்து என்பது காலமுறையில் வைத்து எண்ணினால், கீழ் என்பது பொருளாகும். இரிதல் சாய்தல், ஒன்று என்பது கீழ் நோக்கிச் சாய்ந்த பகுதி அதாவது கீழ்வா யிலக்கத் தொன்று என்று பொருள் கொள்க.

எனவே, முந்திரிகை தூய தமிழ்க் காணப் பெயர் என்க.

இதுவே முந்திரி என்றும் ஈறு கெட்டு வழங்குவதுண்டு. கீழ் நோக்கிச் சாய்ந்துள்ள முந்திரிப் பழத்தையும் அவ்வழியே அதன் முதலாகிய முந்திரியையும் குறிக்கும் என்பதும் ஈண்டு அறியத்தக்கது.

கதை

இது கதா என்ற வடசொல்லின் சிதைவு என்று வடவர் கூறுவதும், அதைத் தமிழர் நம்புவதும் ஆகிய இரண்டுமே மொழியாராச்சி யில்லாமையினின்று தோன்றியவை.

கதுவல் – -பற்றுவது, தொழிற்பெயர். கது என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதுவே முதனிலைத் திரிந்த தொழிற்பெயராகக் காது என வரும். காது – -ஒலியைப் பற்றுவது. இக் கது- – ஐ தொழிற் பெயர் இறுதிநிலை பெறின் கதையாம். கதையை அனைத்துமொரு முதனிலையாகக் கொண்டு கதைத்தல் என்றும் வரும். கதை – -நடந்த, கேட்கப்பட்ட கருத்தைப் பற்றுவது என்று பொருள் கொள்க.

எனவே, கதை தூயதமிழ் காரணப்பெயர். வடசொல் அன்று, தமிழ்ச் சொல்லையே வடவர் எடுத்தாண்டனர்.
(குயில்: குரல்: 2, இசை: 12, 29-9-1959)

மது

மதுகை எனினும் மடுகை எனினும் பொருள் ஒன்றே. மெய்வழி ஊற்றை அகப்படுத்தலும், வாய் வழிச் சுவையை அகப்படுத்துதலும், கண்வழி ஒளியை அகப்படுத்தலும், மூக்கு வழி நாற்றத்தை அகப்படுத்தலும் ஆகிய ஓர் “ஆற்றல்” மதுகை, மடுகை என்பவற்றின் பொருள்.

மது என்பது மதுகை என்பதன் முதனிலைத் தொழிற்பெயர். அகப்பத்தால் உண்டாகும் இனிமைக்குத் தொழிலாகு பெயர். மடுகை என்பதும் இவ்வாறே. மடுகை மடுத்தல் எனவும் வரும்.

மது, தேன், கள், இனிமை தித்திப்பு முதலியவற்றைக் குறிக்கும்.

மது என்பதை வடசொல் என்று வடவர் கூறிப்  பொய்ப்பார். மொழி ஆராய்ச்சி இல்லாத நம் தமிழர்களிற் சிலரும் ‘ஆமாம் ஆமாம் இதுவடமொழி தான்’ என்று கூத்தாடுவர்.

மது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று கடைப்பிடிக்க. மடுகை மதுகை என்பவற்றில் எது முன்னையது எனின், மடுகையே முன்னதாதல் வேண்டும். எனவே மடுகையே மதுகை ஆயிற்று என அறிதல் வேண்டும்.
(குயில்: குரல்: 2, இசை: 13, 6-10-1959)

அச்சாரம்

ஓர் ஒப்பந்தம் பற்றி எழும் அச்சத்தைத் தீர்த்துக் கொள்வதற்கான முற்பணம் என்பது இதன் பொருள்.

இது முதலில் அச்சவாரம் என இருந்தது. பின்னர் அகரம் கெட்டு அச்சாரம் என்றாயிற்று. அச்சம் – -அஞ்சுதல். வாரம்- – பங்கு பகுதி, அச்சப் பகுதி ஆகிய இது, பணத்திற்கானது ஆகுபெயர் எனவே அச்சாரம் தூய தமிழ்க் காரணப் பெயர் என்க.
(குயில்: குரல்: 2, இசை: 19, 17-11-1959)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *