கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்

நவம்பர் 16-30

தந்தை பெரியார் ஒரு காலகட்டத்திற்கோ, ஒரு நாட்டுக்கோ, ஒரு இனத்துக்கோ உரியவர் அல்லர். அவரது சிந்தனைகள் காலங்களைக் கடந்து வழிநடத்தும் வல்லமை உடையவை. உலக மக்கள் அனைவருக்கும் உரியவை. இதை உறுதிசெய்கிறது இப்பகுதி.

2016 செப்டம்பர் 17ஆம் நாள் சிங்கப்பூர், “பெரியார் சமூக சேவை மன்றம்’’ நடத்திய தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கலந்துரையாடலில் இளைய தலைமுறையினர் பெரியார் பற்றி ஆற்றிய உரைகள், தந்தை பெரியாரைப் பார்க்காது அவர் பற்றி கேட்டும், படித்தும் அறிந்தவற்றால் இளைய தலைமுறை பெற்றுள்ள தெளிவையும் எழுச்சியையும் தெரிவிக்கின்றன. பெரியாரின் தாக்கத்தை உணர்த்துகின்றன.

பள்ளி மாணவி இனியநிலா உரை

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

எனக்கு தெரிந்து எந்த தலைவருக்கும் இப்படி விழா கொண்டாடப்படுவதாக கேள்விப் பட்டதில்லை. நம்மில் எத்தனைப் பேருக்கு தந்தை பெரியார் யார்? அவர் பண்புகள் என்ன? தந்தை பெரியார் என்ற பெயர் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு விடை தெரியும்?

இங்கு அமர்ந்திருக்கும் தமிழ் உணர்வாளர்-களுக்கும் முன்னோடிகளுக்கும் உறுதியாக தெரிந்திருக்கும்.
ஆனால், என் போன்ற மாணவர்களுக்கும் வருங்கால மாணவ_-மணிகளுக்கும் தந்தை பெரியாரை அறிமுகப்படுத்துபவர் யார்?

அவர்களை கேட்டீங்கனா, “நம்ம நண்பர் திரு. கோகுலன்’’ அதாங்க நம்ம google-அய்த் தட்டினா போதும் அக்கு வேறு, ஆணி வேறுனு பிரிச்சி சொல்லிவிடுவார் என்று கூறுவார்கள்.

ஆனால், எனக்கு பெரியாரை அறிமுகப்படுத்தியவர் என் அய்யா (ஆசிரியர் கி.வீரமணி), அந்த வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? என் அய்யா, அவரை தந்தை பெரியாரின் தொண்டன் என்று பெருமையுடன் கூறுவார்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தான் பெரியார்!

என்று நான்கே வரிகளில் தந்தை பெரியாரை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் மட்டும்தான் வர்ணிக்க முடியும்.

அவரைப் பற்றிப் பேச இந்த மூன்று மணி நேரம் போதுமா? போதாது. எனக்கு பிடித்த தந்தை பெரியாரின் ஒரு சில சிந்தனைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என்னைப் பொருத்தவரை இக்கால பெண்கள் நல்லா படித்து சுதந்திரமாக இருக்கிறார்கள்.

ஆனால், நான்கு தலைமுறைக்கு முன்பு இருந்த பெண்கள் வீட்டிலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்தார்கள். படிக்கவே கூடாது என்று சொன்னாங்க என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்று அவர் குரல் கொடுக்காதிருந்தால் நான் உங்கள் முன் நின்று தைரியமா பேசமுடியுமா?

இரண்டாவது, அவர் சொல்ற கருத்தை அப்படியே ஏற்கச் சொல்லவில்லை. உங்க அறிவை பயன்படுத்தி பகுத்தறிந்துப் பார்க்கச் சொன்னார். என்னுடைய கருத்தை மறுக்க எவருக்கும் உரிமை உண்டு. அதேபோல் என் கருத்தை கூற எனக்கும் உரிமை உண்டு என்றார்.

ஒரு முறை அவரை விருந்துக்கு அழைத்து மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கு உணவு பரிமாறப்பட்டது. முகம் சுளிக்காமல் அங்கு அமர்ந்து பெரியார் உணவு உண்டார். இந்த நிகழ்ச்சி அவர் எவ்வளவு சிறந்த பண்பாளர், மனிதநேயர் என்று காட்டுகிறது.

தன்னைச் சந்திக்க வருபவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் அன்புடனும் மரியாதையுடனும் தான் பேசுவார்.

தந்தை பெரியார் புதுஉலகின் தொலைநோக்காளர்

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்

சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை

அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றின் கடும் எதிரி

இவை அனைத்தும் அவர் கூடவே இருந்த என் அய்யாவின் வாயிலாக கேட்டும் படித்தும் தெரிந்து கொண்டேன். உங்களுக்குத் தெரிந்த சிந்தனைகள் அல்லது செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

சிங்கப்பூர் தொழில் நுட்பக் கல்லூரி மாணவி குந்தவி உரை

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் குந்தவி. எனக்குப் பெரியாரிடம் பிடித்தது என்னவென்றால் பெரியாரிடம் தேவதாசியைப் பற்றி ஒரு கேள்வி கேட்ட போது அவர் பதில் அளித்திருந்த முறை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. “இத்தனை நாட்களாக நம்ம பெண்கள்தானே தேவதாசியாக இருந்தார்கள். கொஞ்ச நாளைக்கு உங்க பெண்களை அனுப்புங்க’’ என்று கூரிய பெரியாரின் துணிச்சலும் வேகமான சிந்தனையும் ரொம்பவும் கவர்ந்தது.

எனக்குப் பிடித்த தலைவர்களில் பெரியாரைப் போல் எனக்கு அம்பேத்காரும் ரொம்பவும் பிடிக்கும். பெரியாரைப் பற்றி அவருடைய நூல்களில் படித்திருக்கிறேன். அவருடைய சொற்பொழிவும் கேட்டு இருக்கிறேன். ஆனால் வரும் எதிர்காலத்தில் அவரைப் பற்றி இன்னும் படிக்கவும் கேட்கவும் ஆர்வமாக இருக்கிறேன். நன்றி, வணக்கம்.

கல்லூரி மாணவர் வளவன் உரை

எனக்குப் பெரியாரிடம் பிடித்தது, அவர் ஜாதிக் கொடுமைகளையும் மூட நம்பிக்கை-களையும் பார்த்து; அதன் விளைவுகளைப் பார்த்து மதத்தை எதிர்த்தார். தன் சொந்த அறிவைப் பயன்படுத்தி, எது நல்லது? எது கெட்டது? எது சரி? எது  தவறு? என்று தானாக முடிவு செய்து செயல்பட்டார். நன்றி, வணக்கம்.

கல்லூரி மாணவி வானதி உரை

எனக்குப் பெரியாரிடம் மிகவும் பிடித்தது அவர் மிகவும் சிக்கனமாக இருந்தார். மற்றவர்களையும் சிக்கனமாக இருக்கச் சொன்னார்.

எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அனைவரும் வரும்படிச் செய்தார். மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்க்காமல், பாகுபாடு இல்லாமல் செய்தார். அவர் எந்தக் காரியம் சொன்னாலும் அதைக் கேட்டு சரியென்று பட்டால் பின்பற்றச் சொன்னார். பெண்களும் வேலைக்குச் சென்று அவர்களின் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று போராடினார். இன்னும் இந்தப் பிரச்சினை இவ்வுலகில் இருக்கும் போது அவர் அன்றே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தது மிகப் பெரிய விஷயம். நன்றி, வணக்கம்.

நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழக மாணவி லீதா உரை

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் லீதா. (Nanyang Technological University Student) நான் பெரியாரைப் பற்றி ஒரு Thesis (ஆய்வறிக்கை) செய்துகிட்டுருக்கிறேன். பெரியாருடைய கொள்கைகள் எப்படி 1930ஆம் ஆண்டு காலகட்டங்களில் நம்முடைய சமுதாயத்தை எப்படி மாற்றி இருக்கு என்பதை பற்றி ஒரு ஜிலீமீsவீs (ஆய்வறிக்கை) எழுதிக்-கொண்டு இருக்கிறேன்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள், பெரியாருடைய கொள்கைகளை ரொம்ப ஆதரித்தும், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் அவருடைய தமிழ்முரசு நாளிதழில் எழுதியிருந்தார்.

எனக்கு ஒரு வியப்பான விஷயம் என்ன-வென்றால், அந்தக் காலத்தில் பெரியார் அவர்கள், காந்தியாருடைய காங்கிரசு இயக்கத்தில் இருந்தார்.  காந்தியார் அவர்கள் வகுப்புவாரி உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்,  காங்கிரசு பேரியக்கத்திலிருந்து வெளியேறி,  அவர் திராவிடர் கழகத்தைத் தொடங்கி மக்களுக்கு பல நன்மைகளைச் செய்திருக்கிறார்.

பெரியார் ஒரு சீர்திருத்தக்காரர்! நன்றி, வணக்கம்!

கவிதை

விழாவில் கவிஞர் க.தங்கமணி வாசித்த கவிதை

வினாக்குறிகளை வைத்தே எழுதிய
விளக்கமான கவிதை நீ
இந்தக் கரும்பலகை மட்டும்தான்
கேள்விகளைக் கற்றுத்தந்தது
சுயசிந்தனையால் – பல
பதில்களைப் பெற்றுத்தந்தது
மூடப்பழக்கங்களுக்கு
முடிவுரை எழுத நினைத்த
முன்னுரை நீ
நீ பெரியார் என்று தெரியும்
எப்படி தந்தையானாய்?
பின்புதான் தெரிந்தது
சாதிக் குறியீடுகளின்றி
தமிழக பிள்ளைகளுக்கு
இன்றுவரை பெயர் வைக்கிறாயே
நீ தந்தை பெரியார்தான்.
பகுத்தறிவுப் பகலவா
நீ சிறியாருக்கும் உரியார்
அதனாலே நீ பெரியார்
இன்றுனை எதிர்க்கும் சிலரை விட்டுவிடலாம்
அவர்கள் உன்னைப் பற்றி அறியார்

சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அதிகாரி திருமதி. புஷ்பலதா அவர்களின் உரை

அனைவருக்கும் வணக்கம். சிங்கப்பூரில் பெரியார் விருது முதலில் கிடைத்தது எனக்குத்-தான். அந்தச் சமயத்தில் எனக்குப் பெரியாரைப் பற்றி நிறைய தெரியாது. ஏனென்றால், படித்தது கிடையாது; ஆனால், கேள்விப் பட்டிருக்கிறேன்.

இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் ஈரோட்டிற்குச் சென்று பெரியார் இல்லத்தைப் பார்த்தேன். அங்கே நிறைய புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு பெரியாரைப் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்தேன்.

பெரியாரிடம் பிடித்தது என்னவென்றால், அவர் சமூக சீர்திருத்தவாதி. ஜாதிகளை ஒழிப்பது என்பது மிகப்பெரிய காரியம். அதனை செய்திருக்கிறார் பெரியார்.

பாரதியாரும் சொல்லியிருக்கிறார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று. ஆனால், பெரியார் அவர்கள்தான் அதனை பெரிய அளவில் கொண்டுசென்று, இந்தியா முழுவதும்  எல்லோருக்கும் புரியும்படி அதனைச் செய்தார்.

அது மட்டுமல்ல,  பெண் உரிமைகளுக்காக நிறைய போராடியிருக்கிறார் பெரியார். அப்படி இருந்தும், பெண்கள் பணிக்குச் செல்வதை பெரும்பாலோர் வரவேற்கக் கூடியவர்களாக இல்லை; அதனை ஆதரிக்க பெரும்பாலான ஆண்கள் முன்வருவதில்லை. இப்போது மறுபடியும் நாங்கள் அதனை மறுபரிசோதனை செய்யவேண்டிய காலகட்டம் இது.

பெரியார் ஏன் பிராமணர்களை எதிர்த்தார் என்றால், எல்லா மக்களையும் விட அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பிராமணர்கள் நினைத்தார்கள். அதனால்தான், பெரியார் பிராமணர்களை எதிர்த்தார்.

ஆனால், இன்று தமிழ்நாட்டில் பார்க்-கிறோம், பிராமணர்களும், மற்றவர்களும் சமமாகத்தான் பழகுகிறார்கள், உரையாடு-கிறார்கள்.

பெரியார் அவர்கள் எதற்காகப் பாடுபட்டாரோ அதனை இன்று மக்கள் உணர்ந்து கொண்டனர்.  பெரியார் அவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று. நன்றி, வணக்கம்!

தமிழ்ச்செல்வி உரை

அனைவருக்கும் வணக்கம்.

இப்போது தங்கமணி கவிதை வாசித்ததில்,  மூடநம்பிக்கை-களுக்கு முடிவுரை எழுதிய முன்னுரை நீ என்று சொன்னார். என்ன ஒரு அருமையான வரி அது.

பெரியார் அவர்கள் செல்வந்தராகப் பிறந்திருந்தாலும், மக்களிடம் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்று தெரிந்தவுடன், அந்த மக்களுக்காக பணி செய்ய ஆரம்பித்தார்.

மானமும்,  அறிவும் மனிதனுக்கு அழகு என்று அவர் சொன்னாலும், அந்தப் பணி செய்யும்பொழுது,  எவ்வளவு அவமானப் பட்டாலும்,  அவருடைய குறிக்கோளிலிருந்து மாறவேயில்லை.

அந்தக் குறிக்கோளை அடைய வேண்டும் என்கிற ஒரு மனதிடம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

கடவுள் இல்லை என்று பெரியார் அவர்கள் சொன்னாலும், திரு.வி.க. அவர்கள், பெரியார் அவர்களின் வீட்டிற்கு வருகை புரிந்து தங்கியிருந்தபோது,  அவர் குளித்துவிட்டு வந்தவுடன், திரு.வி.க. அவர்களுக்குத் திருநீறு எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

அப்பொழுது சிலர் பெரியாரிடம் கேட்டிருக்கிறார்கள், நீங்கள் இதுபோன்று செய்கிறீர்களே? என்று.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஆனால், நம் வீட்டிற்கு வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்றால், அவரை உபசரிப்பது என்பது நம்முடைய கடமை என்றாராம்.

தமிழர்களுக்கு விருந்தளிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.

ஒரு நிகழ்ச்சிக்குப் பெரியார் அவர்கள் சென்றிருந்தபோது, அவருக்கு குங்குமம் கொடுத்தபோது அதனை அவர் மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டாராம். அதனை அவர் மறுக்கவில்லையாம்.

இதுபோன்ற நிறைய நிகழ்வுகள், பெரியாருடைய கொள்கைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி, வணக்கம்!-

முருகு. சீனிவாசன் அவர்களின் மகள் திருமதி குறிஞ்சிச்செல்வி உரை

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முருகு.சீனிவாசன் அவர்களின் மகள் திருமதி குறிஞ்சிச்செல்வி உரை. அனைவருக்கும் வணக்கம்.

நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். பெரியாரைப் பார்க்கின்ற-பொழுது மிகவும் எளிமையாக இருப்பார். அவரைப் பற்றி என் அப்பா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

பெண்கள் உரிமைகளுக்காக அவர் நிறைய பாடுபட்டிருக்கிறார். அவருடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அவர் வெங்காயம், வெங்காயம் என்று பேசுவார், அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பெரியார்  திரைப்படத்தில் நான் பார்க்கின்ற பொழுது, மேல்ஜாதியை சேர்ந்தவர்கள் ரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்த பெரியார் மீது செருப்பைத் தூக்கி வீசுவார்கள். ஒரு செருப்பை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று நினைத்த பெரியார் அவர்கள், ரிக்க்ஷாவைத் திருப்பச் சொல்லி, மீண்டும் அதே இடத்திற்கு வரும்பொழுது, இன்னொரு செருப்பும் அவர் மீது வீசப்பட்டதாம். அந்த செருப்பையும் எடுத்துக் கொண்டு பெரியார் அவர்கள் வந்தாராம்.

ரயில் நிலையத்தில் வந்த பெரியார் அவர்கள், தன் தொண்டர்களிடம் ஏன் வண்டியைத் திருப்பச் சொன்னேன் தெரியுமா? ஒரு செருப்பை என் மீது வீசினார்கள்;  ஒரு செருப்பை வைத்துக்கொண்டு நானும், மற்றொரு செருப்பை வைத்துக்கொண்டு வீசியவரும் என்ன செய்யமுடியும்? அதனால் தான் வண்டியைத் திருப்பச் சொன்னேன்; மற்றொரு செருப்பும் வந்து விழுந்தது. – இதோ இரண்டு செருப்பும் இருக்கிறது என்றாராம்.

இதுபோன்ற குணம் பெரியாரிடம் மட்டும்தான் இருக்கு. இதுபோன்ற குணத்தை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை.

பெரியார் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நான் ஆசைப்-படுகிறேன். நன்றி, வணக்கம்!-

முருகு. சீனிவாசன் அவர்களின் மகள் திருமதி மலையரசி உரை

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முருகு.சீனிவாசன் அவர்களின் மகள் திருமதி மலையரசி உரை. அனைவருக்கும் வணக்கம்.

எனக்குப் பெரியாரை அறிமுகப்படுத்தியதே என்னுடைய அப்பா முருகு.சீனிவாசன் அவர்கள்தான்.
பெரியாருடைய அனைத்துக் கொள்கைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நான் மிகவும் விருப்பப்படுவது, புராண, இதிகாச கதைகளில் இருந்த புரட்டுகளை நமக்குச் சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.

அதேமாதிரி சூத்திரன் என்ற வார்த்தைக்கும் சரியான அர்த்தத்தை சொல்லிக் கொடுத்தவரும் தந்தை பெரியார் தான். அப்படி அவர் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று சொல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் சூத்திரன்  என்பது நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு சர் பட்டம் என்று இருந்திருப்போம். அதற்கு உரிய அர்த்தத்தை சொல்கிற துணிச்சல் தந்தை பெரியாரை தவிர வேறு யாருக்குமே வராது.

அது எனக்கு பெரியாரிடம் ரொம்ப பிடித்த விசயம். நன்றி, வணக்கம்!

சிங்கப்பூர் தமிழர் இயக்க சொத்து பாதுகாவலர் குழு உறுப்பினர் திருமதி வே.தவமணி உரை

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிங்கப்பூர் தமிழர் இயக்க சொத்துப் பாதுகாவலர் குழு உறுப்பினர் திருமதி வே.தவமணி உரை.

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் தவமணி. நான் சிறிய பிள்ளையாக இருக்கும் பொழுதே நான் பெரியாரைப் பற்றி அறிந்து கொண்டேன்.

ஆனால்,  அவர் மிகவும் பச்சை பச்சையாகப் பேசுவார் என்று சொன்னதினால், எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் எனக்கு பிடிக்கவில்லை..

பிறகு இப்பொழுது தான் தெரிகிறது. நான் சிறிய பிள்ளையாக இருந்ததினால் அன்றைக்கு அவரைப் பற்றி எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய  கணவரும் ஒரு பெரியார் தொண்டர்தான். அவரும் பச்சை பச்சையாக ராமாயணத்தைப் பற்றியும்,  பெரிய புராணத்தைப் பற்றியும்,  கடவுளர்களைப் பற்றியும் பேசுவார். முருகக் கடவுள் இரண்டு பெண்டாட்டிக்காரனாயிற்றே, அது போன்று நான் கட்டிக் கொள்ளக் கூடாதா என்று கேட்பார்.

அவர் கூடவே இருந்து பெரியாரை பற்றி தினமும் தெரிந்துக் கொண்டதால் எனக்குப் பெரியாரை மிகவும் பிடிக்கும். அவருடைய பிறந்த நாள்களை  சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

இன்னும் பல பெரியார்கள் பிறக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *