Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இதோ ஒரு மக்கள் பிரிதிநிதி

விந்தன்

நள்ளிரவு; மனிதர்களுடன் பழகிய பாவத்தாலோ என்னவோ, ‘நமக்கேன் வீண் வம்பு?’ என்று நாய்கள் கூடக் குரைப்பதை நிறுத்திவிட்டிருந்தன.

அந்த நிசப்தமான வேளையிலே, திடீரென்று ஒர் அலறல்!

“அய்யோ, போச்சே! ஒரு மாதச் சம்பளம் பூராவும் போச்சே!’’

கேட்போரின் நெஞ்சைப் பிளக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவனின் இந்த அலறல் மாடி அறையில் உட்கார்ந்து, அடுத்தாற்போல் தம் கட்சி பதவிக்கு வந்தால், அப்போது ‘அமைச்சர்’ பதவியை அடைவதற்கான வழி வகைகளைப் பற்றி இப்போதே யோசித்துக் கொண்டிருந்த தியாகி தீன தயாளரின் காதில் விழுந்தது _-ஆம், அவர் இப்பொழுது எம்.எல்.ஏ.; அதாவது, மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதி.

“கத்தாதே! இதோ பார், கத்தி, -குத்திவிடுவேன்!’’ வழிப்பறிக்காரனின் மிரட்டல் இது!

இந்த மிரட்டலைத் தொடர்ந்து என்ன கனவு கண்டாளோ என்னவோ, “அய்யோ! என்னைக் குத்துகிறனே!’’ என்று அலறி எழுந்தாள் அவருக்குப் பக்கத்தில் படுத்துத் தூங்கிக்-கொண்டிருந்த அவருடைய மனைவி திலகம்.

“உன்னை யாரும் குத்தவில்லை; தெருவில் யாரையோ, யாரோ குத்துகிறார்கள் _ -நீ தூங்கு!’’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து சென்று, மின்சார விசிறியின் ‘ஸ்விட்ச்’சைப் போட்டார் தீனதயாளர்.

“ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது! யாரையோ, யாரோ குத்துகிறார்களாம்; நாளைக்கு அவர்கள் நம்மையும் குத்த வந்துவிட்டால்…?’’

“பைத்தியக்காரி! நாம் என்ன, நடந்தா போகிறோம்? நடந்தா வருகிறோம்? நமக்குக் கார் இருக்கிறது; கார் டிரைவர் இருக்கிறான்; போலீஸ் இருக்கிறது; போலீசைக் கூப்பிட ‘போன்’ இருக்கிறது.’’

“அதையாவது செய்யுங்களேன், உங்களுக்குப் பக்கத்தில் தானே ‘போன்’ இருக்கிறது?’’

“அதுதான் கூடாது! இந்தத் தெருவிலே ‘போன்’ உள்ள வீடு நம்ம வீடு ஒன்றுதான். இது அந்த வழிப்பறிக் காரர்களுக்கும் ஒரு வேளை தெரிந்திருக்கலாம். நாளைக்கு அவர்-களால் நமக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்…?’’

“அதற்காக நம் கண்ணுக்கு முன்னால் ஒருவன் கொள்ளையடிக்கப்படுவதை நாம் பார்த்துக்-கொண்டா இருப்பது?’’

“கவலைப்படாதே! இப்பொழுதெல்லாம் குறைந்த பட்சம் ரூபாய் இரண்டாயிரத்துக்-காவது ஒவ்வொரு தொழிலாளியின் உயிரும் ‘இன்ஷ்யூர்’ செய்யப்படுகிறது!’’

“எல்லாம் அந்தப் படுபாவியால் வந்த வினை! உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதே, உணர்ச்சிக்கு இடம் கொடுக்-காதே! என்று அவன் தன் கதைக்குக் கதை, நாவலுக்கு நாவல் எழுதியதை விழுந்து விழுந்து படித்து விட்டு.’’

“அது எந்தப் படுபாவி?’’

“அவன் தான்! வள்ளுவனுக்குப் பின்னால் வந்த கிள்ளுவன் என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டிருக்கிறானே, அவன் தான்!’’

“பிழைப்பின் ரகசியத்தையே கண்டுபிடித்து-விட்ட பேராசிரியரல்லவா, அவர்? அவருடைய வாக்கு நமக்கு வரப்பிசாரம்; வாழ்வு வழிகாட்டி!’’

“யாருக்கு? உணர்ச்சியைப் பொருட்படுத்தாத கொலைக்காரர்களுக்கு! கொள்ளைக்காரர்-களுக்கு! எத்தர்களுக்கு! ஏமாற்றுக்காரர்களுக்கு!’’

“அவர்களுக்காவது சட்டத்தைப் பற்றிய அச்சம் ஓரளவாவது இருக்கலாம்; நம்மைப் போன்றவர்களுக்கு அதுகூட அவசியமில்லையே, அவருடைய அறிவுரைகளைக் கேட்டால்…?’’

“மகிழ்ச்சி; அவருடைய அறிவுரை-களைக் கேட்பதற்-கென்றே நீங்கள் அறிவில்லாமல் இருப்பது பற்றி!’’

இந்தச் சமயத்தில், “ஏண்டா சோம்பேறிப் பயல்களா! எவனாவது மாதம் பூராவும் உழைத்துச் சம்பளம் வாங்கிக்கொண்டு வரவேண்டியது! அதை நீங்கள் எந்தவிதமான உண்ர்ச்சிக்கும் இடம் கொடுக்காமல் அடித்துப் பிடுங்கிக் கொள்ள வேண்டியது! இது ஒரு பிழைப்பா, உங்களுக்கு? வெட்கமில்லை? மானமில்லை? மரியாதையாய் அவன் சம்பளத்தை அவனிடம் கொடுத்துவிட்டுப் போங்கடா’’, என்று யாரோ ஒரு மூன்றாவது மனிதன் குறுக்கிட்டு மிரட்ட, “நீ யார் அதைக் கேட்க?’’ என்று வழிப்பறிக்காரர்களில் ஒருவன் அவன்மேல் பாய, இருவரும் கட்டிப் புரளும் சத்தம் அவர்கள் காதில் விழுந்தது.

அவ்வளவுதான்; அவசர அவசரமாக எழுந்து ஜன்னல் கதவுகள் அத்தனையையும் “படார், படார்’’ என்று சாத்திவிட்டு “அமைதியைக் குலைக்-கிறார்கள்!’’ என்றார், அவர் -_ அமைதியாகவும் அதே சமயத்தில் “வெட வெட’’ வென்று நடுங்கிக் கொண்டும்.

“அட, சிங்கத் தமிழா! நீயா சீறிப் பாயும்  வேங்கையின் கொடியை இமயமலையின் சிகரத்திலே பறக்கவிட்டு வந்தாய்? பொய், சுத்தப் பொய்!’’ என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

“சிரிக்காதே! இப்போது எனக்கு வேண்டியது உன்னுடைய சிரிப்பல்ல. அமைதி, அமைதி’’ என்றார் அவர், மீண்டும் அமைதியாக.

“அடுத்தவன் வீட்டில் அமைதி நிலவாத-போது உங்களுடைய வீட்டில் மட்டும் எப்படி அமைதி நிலவுமாம்? ஒரு எம்.எல்.ஏ.வான உங்களுக்கு இந்தச் சாதாரண அறிவாவது இருக்க வேண்டாமா?’’

“தனிப்பட்டவன் கவனிக்க வேண்டிய பிரச்சினை அல்ல அது; அரசாங்கம் கவனிக்க வேண்டிய பிரச்சினை!’’ என்றார் அவர், எதிலிருந்தும் நழுவுவது போல் அதிலிருந்தும் நழுவி.

“அடியார்கள் தங்களுடைய தற்காப்புக்கு ஆண்டவனை இழுப்பதுபோல நீங்கள் ஏன் உங்களுடைய தற்காப்புக்கு அரசாங்கத்தை இழுக்கிறீர்கள்?  தனிப்பட்டவன் வேறு, அரசாங்கம் வேறு? அரசாங்கத்தின் ஓர் அங்கம் தானே தனிப்பட்டவன்? தனிப்பட்டவனாகவே இருந்துவிட்டால் சமூகம் ஏது, சமுதாயம் ஏது? அரசியல் ஏது? அரசாங்கம் தான் ஏது?’’

“பேசாதே! தனிப்பட்டவன் என்ன செய்ய முடியுமோ, அதை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன்!’’

“எதைச் சொல்லுகிறீர்கள்? மின்சார விசிறியைச் சுழல விட்டதையா, ஜன்னல் கதவுகள் அத்தனையையும் சாத்தி அடைத்து விட்டதையா?’’

இந்தச் சமயத்தில் கீழே போராடிக் கொண்டிருந்த மூன்றாவது மனிதன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சொன்னான்:

“இந்தா தம்பி, உன் சம்பளம்! எடுத்துக்கொண்டு போ! சீக்கிரம்!…..ம், சீக்கிரம்!’’

அதைப் பெற்றுக்கொண்டு அவன் நாத்தழுதழுக்கச் சொன்னான்:

“இன்றுதான் நான் கடவுளைக் கண்ணாரக் காண்கிறேன்; உங்களுக்கு என் நன்றி!’’

இதைக் கேட்டதும், “நல்ல வேளை! எல்லாரும் உங்களைப் போலவே இருந்து-விட்டால் அந்த ஏழையின் கதி என்ன ஆகியிருக்கும்? அவன் சம்பளத்தை நினைத்து வீட்டில் காத்திருக்கும் அவனுடைய மனைவி மக்கள் என்ன ஆகியிருப்பார்ககள்?’’ என்றாள் திலகம்.

“நான் மட்டும் சும்மாவா இருந்துவிடப் போகிறேன்?’’ என்றார் தியாகி தீனதயாளர், தெருவில் நடந்த ‘கலவரம்’ ஒருவாறு தீர்ந்துவிட்டது என்ற நிம்மதியில்!

“வேறு என்ன செய்யப் போகிறீர்கள், சட்டசபையில் கேள்வி கேட்பதைத் தவிர! ‘’என்றாள் அவள்.

“அதை இப்போது சொல்வாவேனேன்? நாளைக்குப் பார், பத்திரிகையை!’’ என்றார் அவர்.

மறுநாள் காலை……..

“ஆசிரியர்க்குக் கடிதங்கள்’’ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவதற்காக ‘நகரவாசி’ என்ற புனைபெயரில், நாளுக்கு நாள் நகரில் பெருகிவரும் வழிப்பறிக் கொள்ளைகளைப் பற்றியும், அவற்றைத் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடாமல் இருக்கும் ஆளும் கட்சியாளரின் பொறுப்பற்ற தன்மையைப் பற்றியும், காரசாரமாக ஒரு கடிதம் எழுதிக்கொண்டு, அதைத் தபாலில் சேர்ப்-பதற்காக ‘டிரைவரை’த் தேடிக் கொண்டு கீழே இறங்கி வந்தார் தீனதாயாளர்.

“அய்யா, ‘நகரவாசியாரே!’ ஏன் டிரைவரைத் தேடுகீறார்கள்? நீங்கள் நேரில் கொண்டுபோய்க் கொடுத்து, ‘தப்பித் தவறிக்கூட என் பெயரை, அந்தக் கடிதத்திற்குக் கீழே போட்டுவிடாதீர்கள், சார்! இதில் சம்பந்தப்பட்டவர்களால் என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் வந்துவிடும் _ -சார்! என்று “கெஞ்சோ கெஞ்சு’’ என்று கேட்டுக்கொண்டு, உங்கள் ‘வீர’த்தையும் ‘தியாக’த்தையும் அங்கேயும் கொஞ்சம் காட்டிவிட்டு வரக்கூடாதா?’’

“அது எனக்குத் தெரியும்; நீ சும்மா இரு!’’ என்றவர், “கோபாலா, கோபாலா!’’ என்று குரல் கொடுத்தபடி, வாசலுக்கு வந்து நின்றார்.

பதிலைக் காணோம்,

ஷெட்டுக்குச் சென்றார்.

அங்கே கார் இருந்தது; டிரைவர் இல்லை.

“கோபாலா, கோபாலா!’’ என்றார் மீண்டும்.

‘தோட்டத்துப் பக்கம் போயிருப்பானோ?’ என்று நினைத்த அவர் அங்கே போய், “கோபாலா, கோபாலா!’’ என்றார் மீண்டும்.

பதில் இல்லை.

“பொழுது விடிந்ததோ இல்லையோ, டீ குடிக்கப் போய்விட்டார் போலிருக்கிறது, துரை!’’ என்று கருவிக் கொண்டே தெருவுக்கு வந்தார்.

அங்கே அவர் கண்ட காட்சி…

‘கீச்’சிட்டுக் கத்தினார் தீனதயாளர், இரத்த வெள்ளத்திலே மார்பில் பாய்ந்த கத்தியுடன் கீழே விழுந்து கிடந்த கோபாலனின் உயிரற்ற உடலைப் பார்த்து!

‘ஆமாம், நானேதான்!’ என்பது போலிருந்தது, அந்த நிலையிலும் மலர்ந்திருந்த அவன் முகம்.

“பிழைக்கத் தெரியாதவன்; பேராசிரியரின் புத்தகங்களைப் படிக்காததால், பிழைப்பின் ரகசியத்தை அறியாமற் போனவன்!’’ என்றார் அவர் பெருமூச்சுடன்.

அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர், “ஏன் என்ன நடந்தது?’’ என்று கேட்டுக்கொண்டே வத்தார். “ஒயின் மெர்ச்சென்ட்’’ உரிமத்துக்காக அவருடைய ‘ஒத்துழைப்பை’ நாடி.

நடந்ததைச் சொன்னார் தியாகி தீனதயாளர்,

“கிடக்கிறான், விடுங்கள்! இப்படி ஏதாவது செய்துவிட்டால் இவனுக்காக்க யாராவது வெண்கலச்சிலை செய்து வைத்து விடுவார்களா, என்ன? அப்படி ஏதாவது செய்து வைப்பதாய் இருந்தால் தங்களைப் போன்ற ‘தியாக சிகர’ங்களுக்கெல்லவா செய்துவைக்க வேண்டும்’’ என்று சொல்லிக்கொண்டே, அவருடைய கழுத்தில் அய்ந்து சவரன் சங்கிலி யொன்றைப் போட்டுவிட்டு “அடடா, என்ன அழகு! என்ன அழகு!’’ என்றார் அவர்.

“அய்யோ வேண்டாம்! ஏற்கெனவே நாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையில் ‘ஊழல், ஊழல்!’ என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தச் சமயத்தில் இதை யாராவது பார்த்துவிட்டால் வம்பு’’, என்று தம் கழுத்தில் விழுந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றப் போனார் அவர்.

உள்ளூர்க்காரர் அதைத் தடுத்து விட்டுச் சொன்னார்.

“உங்களுக்கென நான் லஞ்சமா கொடுக்கிறேன்? இதெல்லாம் அன்பளிப்பு சார், அன்பளிப்பு?’’

“இத்தனை அன்பு நீங்கள் என்மேல் வைத்திருக்கும் போது உங்களைக் கவனிக்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? ஆகட்டும்; சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி உங்களை நான் அவசியம் கவனிக்கிறேன், போய் வாருங்கள்!’’ என்று அவரை அனுப்பிவிட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘போன்’ செய்யப் போனார் அவர். -பிழைக்கத் தெரியாத _ கோபாலனின் பிணத்தை அந்தத் தெருவிலிருந்து அப்புறப் படுத்துவதற்காக!