செய்யக் கூடாதவை

நவம்பர் 16-30

 

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது

குழந்தைகள், சிறுவர்கள் அவரவர் செய்ய வேண்டியதை அப்பருவத்தில் செய்ய அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் விருப்பம் போல் விளையாடி மகிழ்ந்து, அன்பும் பாசமும் பெற்று வளர வேண்டியவர்கள். சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று ஆடிப்பாடி, மகிழ்ந்து படிக்க வேண்டியவர்கள். இந்தப் பருவத்தில் அவர்கள் இவற்றை மட்டுமே செய்து, தன் தனித் திறமைகளையும் கூடவே வளர்த்துக்கொள்ள வேண்டியவர்கள். இப்படிப்பட்ட நிலையில் 10 வயதிலும் 15 வயதிலும் ஏன் ஆறு, ஏழு வயதில்கூட சிறுவர்களைக் கூலி வேலை செய்ய அனுப்புவதும், அனுமதிப்பதும் மாபெரும் குற்றமாகும். சாதிக்க வேண்டிய அவர்களைத் திசை திருப்புவதாகும். இயல்பாக அவர்களின் போக்கு மாற்றப்பட்டு, கூலிகளாக அனுப்பப்படும்போது சுற்றுசுழல் பழக்கங்கள் அவர்களைத் தடம் மாற்றிக் காலிகளாக மாற்றி சமூக விரோதிகளாய் வளர்த்துவிடுகின்றன. எனவே, எந்த ஒரு சிறுவனும் தடம் புரளாமல் சரியான வழியில் செலுத்தப்பட பெற்றோரும், அரசும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

என்ன  வறுமையிருந்தாலும், இயலாமை இருந்தாலும் சிறுவர்கள் கல்வி கற்றே ஆக வேண்டும். இதையே பிச்சைப்புகினும் கற்றல் நன்று என்றனர். கல்வி உரிமைச் சட்டம் மட்டும் போதாது, ஒவ்வொரு சிறுவனும் கண்காணிக்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும். வீட்டுச் சூழல் சரியில்லையென்றால் விடுதியில் சேர்க்க வேண்டும் இதற்கான செலவுகளை அரசு செய்ய வேண்டும்.

இலவசங்களை ஏழை பணக்காரர் வேறுபாடின்றி எல்லோருக்கும் வழங்காது ஏழைகளுக்கு மட்டும் இலவசங்களை வழங்கி, அதில் மீதி வரும் தொகையை ஏழைப் பிள்ளைகளைப் படிக்கச் செய்ய செலவிடலாம்.

இல்லையென்றால், படிக்காது திரியும் சிறுவர்கள் எதிர்காலத்தில் சமூக எதிரிகளாய் மாறி கேடு செய்வதை யாரும் தடுக்க இயலாமல் போய்விடும். இது அரசுக்கும் கேடு; சமுதாயத்திற்கும் கேடு தரும்.

சட்ட விதிகள் சமூகத்திற்கு எதிராய் இருக்கக்கூடாது

சில நேரங்களில் மக்களைப் பெரிதும் பாதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்போது, தீர்வு காண உரிய அலுவலர்களை நாடும்போது, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சட்டத்தில் இடமில்லையே என்பர்.

சட்டம் என்பது யார் இயற்றியது? நாம் இயற்றியதுதானே! அது மக்கள் நலனுக்கு எதிராய் இருந்தால் மாற்றிவிட வேண்டாமா? அதைக் காட்டி நியாயத்தை மறுப்பது அநீதியல்லவா? சரியில்லாத சட்டத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்து மாற்ற வேண்டியது அலுவலர் கடமையாகும்.

சட்டமும், நீதியும், விதியும் மக்கள் நலத்திற்குத்தானே தவிர, அவற்றிற்காக மக்கள் அல்ல.

எனவே, எந்தச் சட்டமும், விதியும் மக்கள் நலத்திற்கு எதிராய் இருக்கக் கூடாது. இருப்பின் அதை உடனே மாற்ற வேண்டும், சரியான சட்டம் இயற்ற வேண்டும். சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

விழிப்புள்ளவர்கள் வழிகாட்டத் தவறக்கூடாது

படித்து, சிந்தித்து விழிப்புப் பெற்றவர்கள், தானும் விழிப்போடு நடந்து, மற்றவர்களுக்கும் விழிப்பூட்ட வேண்டும். நமக்கேன் வீண் வேலை என்று இருப்பது படித்ததற்கும் அழகல்ல, விழிப்புப் பெற்றதற்கும் அழகல்ல.

எல்லோரும் நமக்கென்ன என்று இருந்துவிட்டால், நாளைக்கு எவருக்கும் பாதுகாப்பு இருக்காது. தட்டிக் கேட்க ஆள் இல்லை என்ற நிலை வந்தால், தடியெடுத்தவன் எல்லாம் ஆதிக்கம் செலுத்துவான்.

எனவே, தவற்றைத் தட்டிக் கேட்கும் துணிவை ஒவ்வொருவரும் பெற வேண்டும். தனியாக நிற்பதைவிட கூட்டாகக் குரல் கொடுக்க வேண்டும். கூட்டாகச் சென்றால் தனி நபருக்கு பாதிப்பு வாராது; வலிமையும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *