கர்ப்பகாலத்தில் அடிக்கடி வாந்தியால் தொல்லைக்கு ஆளாகிற பெண்கள், மருந்து _ மாத்திரை எடுத்துக் கொள்ளாமலேயே இயற்கை வழியில் வாந்தியைக் கட்டுப்படுத்த முடியும். அதுதான் சிறந்த முறையும்கூட. அதற்கான சில யோசனைகள்.
1. உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். ஆனால், அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள். தினமும் தயிர்சாதம், மாவடுதான் பிடிக்கிறது என்றால் அதையே சாப்பிடுங்கள்.
2. வாந்தி வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சைப் பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். எலுமிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தியையும், குமட்டலையும் தடுங்கள். வைட்டமின் _ ‘சி’ கர்ப்பிணிகளுக்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக நல்லது.
3. குமட்டலைத் தரும் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவது நல்லது. இது அஜீரணத்துக்கும் நல்லது. தலை குளிக்கும்-போது ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.
4. சாப்பிட்டதும் சிறிது நேரம் நடப்பது ஒன்று. பொரியல் பிடிக்காவிட்டால், எல்லா காய்கறிகளையும் போட்டு சூப் போட்டு சாப்பிடுங்கள். தக்காளி சூப் கூட வாந்தியைக் கட்டுப்படுத்தும்.
5. எந்தக் காரணத்தைக் கொண்டும் வாந்தியை நிறுத்த லெமன் சோடா சாப்பிடாதீர்கள். அது உடல் நலத்திற்கும் நல்லதல்ல.
6. அதேபோல் உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களை சாப்பிடாதீர்கள். பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்.
7. தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள். வாந்தி, குமட்டலுக்கு தண்ணீர்தான் சிறந்த மருந்து. ஒரு மணி நேரத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். வாந்தியும் குமட்டலும் குறைவதை உணர்வீர்கள். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க இது உதவும்.
8. புதினாவை ஒரு கப் வெந்நீரில் போட்டு 5_10 நிமிடம் மூடி வையுங்கள். பின் அதை வடிகட்டி அதனுடன் சர்க்கரை அல்லது தேனைக் கலந்து காலையில் எழுந்தவுடன் பருகுங்கள். வாந்தி மட்டுப்படும்.
சில பெண்களுக்கு புதினாகூட குமட்டலை ஏற்படுத்தும். அவர்கள் புதினாவை தவிர்த்து விடுங்கள்.
9. குமட்டல் வாந்தி ஏற்படும் போதெல்லாம் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுங்கள். வாந்தி எடுக்கும் உணர்வைக் குறைக்கும். அதோடு இது வயிற்றுக்கும் நல்லது.
10. ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கப் வெந்நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறவிட்டு, வடிகட்டி, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனைச் சேர்த்து தினமும் காலையில் குடியுங்கள். குமட்டல், வாந்தி கட்டுப்படும்.
11. பீட்ரூட், எல்லா வகையான கீரைகள், சூப், பாதாம் பால் என்று சாப்பிடுவது நல்லது. காய்கறி பிடிக்காதவர்கள் கறி, சிக்கன், இறால் அளவாக சேர்த்து சாப்பிடுங்கள்.
12. எதுவாக இருந்தாலும், மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் வாந்தி, குமட்டல் போன்றவற்றை வராமல் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும்.
13. சில பெண்களுக்கு தொடர்ந்து வாந்தி, குமட்டல் வரும். எதைச் சாப்பிட்டாலும் நிற்காது. இவர்கள் உடல்நிலை பாதிப்பதற்குள் மருத்தவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.