வேலைவாய்ப்பு
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கீழ் இயங்கும் (SEBI), தேசிய பங்குச் சந்தை கழகத்தின் (NISM) ஓர் அங்கமான நிதிக் கல்விக்கான தேசிய மையம் (NCFE) என்ற அமைப்பு தேசிய நிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வை நடத்துகிறது.
நிதிக் கல்விக்கான இந்த தேசிய அளவிலான தேர்வை மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே எழுத முடியும். இதற்கான பதிவு இணையம் வழியாக மட்டும் அக்டோபர் 15ஆ-ம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் மத்திய, மாநில அரசுகளில் அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். என்எப்எல்ஏடி ஜூனியர் 2016_17 என்ற பிரிவில் 6, -8 வகுப்பு மாணவர்களும், என்எப்எல்ஏடி 2016_-17 என்ற பிரிவில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதலாம்.
இந்த இரண்டு பிரிவுத் தேர்வுகளையும் பங்கேற்கும் பள்ளிகள் தங்கள் வளாகத்திலேயே நடத்திக் கொள்ளலாம். போதுமான கணினிகள், இணையதள இணைப்பு உள்ள பள்ளிகள் ஆன்லைன் தேர்வை நடத்தலாம். இந்தத் தேர்வை பள்ளிகள் நவம்பர் 25ஆ-ம் தேதி தொடங்கி, 2017, ஜனவரி 7ஆ-ம் தேதி வரை 45 நாட்களுக்குள் தங்களுக்கு வசதியான வெவ்வேறு நாட்களில், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் நடத்தலாம். ஆன்லைன் தேர்வை நடத்துவதற்குத் தேவையான உதவிகளை நிஸம், என்சிஎப்இ அமைப்பு வழங்கும். மாணவர்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஒரு மாணவருக்கு ரூ. 10 வீதம் இந்த அமைப்பு வழங்கும்.
தேர்வுக்குப் பதிவு செய்த மாணவர்களுக்கான தேர்வு நாள், நேரத்தை அந்தந்தப் பள்ளிகளே மாணவர்களுக்கு வழங்கும். தேவைப்படும் மாணவர்களுக்கு தேர்வு நாள், நேரத்தை பள்ளிகளே மாற்றிக்கொடுக்கலாம்.
கணினி, இணைய வசதி இல்லாத பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தங்களையும், மாணவர்களையும் பதிவு செய்துகொண்டு ஆப்லைனில் எழுத்துத் தேர்வை நடத்தலாம். இதற்குத் தேவையான கேள்வித்தாள்கள், விடைத்தாள்களை (ஓஎம்ஆர் சீட்) நிஸம், என்சிஎப்இ அமைப்பு வழங்கும். ஆப்லைன் தேர்வு வரும் டிசம்பர் 1ஆ-ம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதிக்குள் நடைபெறும்.
தேர்வில் பங்கேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மண்டல, தேசிய அளவிலான போட்டிகள் 2017, பிப்ரவரி 1 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு: www.nflat.com