ஹால்மார்க் [சுத்தத்] தங்கம் கண்டுபிடிப்பதெப்படி?

நவம்பர் 16-30

 

சுத்தமான தங்கம் என்பதன் அடையாள-மாகக் காட்டப்படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 14, 10, 9, 8 காரக்ட்கள் உள்ளன. இவற்றில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்-படுகின்றன. 24 காரட் என்பது 99.9% சுத்தமான தங்கம்.

முதலீடு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். 24 கேரட் தங்கத்தின் விலை 22 காரட் தங்கத்தைவிட சற்றுக் கூடுதலாகும்.

இந்தச் சுத்தச் தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 காரட் மற்றும் 18 காரட்களில் நகை செய்கிறார்கள். இதைத்தான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவு உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்து விடுகிறது.  வாங்கும்போது 22 காரட் என நம்பி அதற்கான விலையைக் கொடுத்து வாங்கிவிட்டு, பின்பு அதே நகையை விற்கும்போது அது 18 காரட் நகைதான் என்று தெரியவரும்போது நாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறோம்.

இதைத் தவிர்க்க, நகைகள் வாங்கும்போது நாம் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.அய்.எஸ்.) என்கிற அமைப்புதான் ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது.

ஹால்மார்க் முத்திரை வழங்கும் முகவர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.அய்.எஸ். அமைப்பு இவர்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது. இந்த உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தங்களுக்குத் தேவையான நகைகளை, பொற்கொல்லர்களை வைத்துச் செய்வதுதான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத்துக்கு ஒருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் முகவரிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்-கின்றனர்.

இப்படித் தரம் பரிசோதிக்கப்பட்ட நகைகள் 22 காரட் எனில் 91.6 சதவிகிதம் ஹால்மார்க் முத்திரையை வழங்குகின்றனர். 18 காரட் நகை எனில் 75 சதவிகிதம் ஹால்மார்க் முத்திரை. நாம் நகை வாங்கும்போது அது 91.6 சதவிகிதமா 75 சதவிகிதமா என கட்டாயம் பார்க்க வேண்டும்.

நகை வாங்கும்போது 22 காரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் எனத் தெரியவந்தால் உடனடியாக பி.அய்.எஸ். அலுவலகத்தில் புகார் செய்யலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது.

தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய முகவரின் உரிமம் ரத்து செய்யப்படும். எந்தக் கடையில் வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு தர வேண்டும்.

ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு முகவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய முகவரை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். தரத்துக்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால் நகை வாங்கும்போது ஏமாற வாய்ப்பில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *