ஓரடியில் உலகே அளக்கப்பட்டபின் மாவலியும் அதில் அடக்கமில்லையா..?
ஒளிமதி
பார்ப்பனர்கள் தங்கள் பண்பாட்டைத் திணிக்கவும் மேலாண்மையை நிலைநிறுத்தவும் புராணங்களைப் படைத்தார்கள் என்பதால், எந்தப் புராணக் கதையும் அவர்களுக்குச் சிறப்பையும் மற்றவர்களுக்கு இழிவைத் தருவதாயும் இருக்கும். புராண அடிப்படையில் கொண்டாடப்படும் பண்டிகைகளும் அப்படியே!
அதில் விதிவிலக்காக மலையாள நாட்டு ஓணம் பண்டிகை என்பது திராவிட அரசன் மாவலிக்குச் சிறப்பு சேர்ப்பதாய் இருந்து வருகிறது. இதுகூடப் பொறுக்க முடியாத ஆரிய பார்ப்பன ஆதிக்கக் கூட்டம் அச்சிறப்பையும் ஒழித்துத் தங்கள் மேலாண்மையை, சிறப்பை எப்படியாவது அதிலும் கொண்டுவந்து விட வேண்டும் என்று பல ஆண்டுகளாய் முயன்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான அமித்ஷா வழி அது செய்யப்பட்டது.
பல நூற்றாண்டுகளாய் கேரளாவில் ஓணம் பண்டிகை என்பது, மாவலியின் வருகையைக் கொண்டாடுவதாய், அவனது கொடைச் சிறப்பை பறைசாற்றுவதாய் இருந்து வருகிறது. ஒரு திராவிட அரசன் சிறப்புப் பெறுவதை சகிக்க முடியாத ஆரிய ஆதிக்க நரிகள் சூழ்ச்சியாக ஒரு செயலைச் செய்தன அமித்ஷா மூலம்.
ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறும் சாக்கில், மாவலிக்காகக் கொண்டாடும் அப்பண்டிகையை மகாவிஷ்ணுவுக்குப் பெருமை சேர்க்கும் பண்டிகையாக மாற்ற சூழ்ச்சி செய்து, வாழ்த்தும் சாக்கில் அதற்கு முயன்றனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையான “தி ஆர்கனைசர்’’ இதழில் ஓணம் பற்றி அமித்ஷா எழுதிய கட்டுரையில், ஓணம் பண்டிகையை இனி “வாமன ஜெயந்தி’’ என்று கொண்டாட வேண்டும் என்றும், மாவலி ஒரு கொடிய அசுரன் என்றும் அவனது வருகை என்பது கட்டுக்கதை’’ என்றும் எழுதியுள்ளார்.
ஆனால், மாவலி ஒரு சிறந்த அரசன் என்றும்; கொடையாளியான அவன் ஆட்சியில் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்தார்கள் என்றும், அவனை சூழ்ச்சிக் கூட்டம் சூதாக அழித்தது என்றும் நம்பும் கேரள மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை மாவலி தங்களைக் காண வருவதாக நம்பி அவனை வரவேற்க ஓணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். இதைத்தான் வாமன ஜெயந்தியாக மாற்ற முயற்சிக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்.
அதற்கு அமித்ஷா கூறும் காரணம், மாவலி ஆண்டுதோறும் வருவதாகக் கூறுவது கட்டுக்கதை என்கிறார். இது கட்டுக்கதை என்று அறியும் அளவிற்கு ஆராய்ச்சி செய்த அமித்ஷாவிற்கு, புராணங்கள், கடவுள்கள் எல்லாமே கட்டுக்கதை என்பதை ஆராய்ச்சி மூலம் அறிய முடியவில்லையா?
தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட அவர்கள் எப்படியெல்லாம் பித்தலாட்டம் பேசுவார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
மாவலி ஆண்டுதோறும் வருகிறார் என்பது கட்டுக்கதை என்றால், உலகை ஓரடியில் அளந்தான் என்பது அறிவியல் உண்மையா? அல்லது வரலாற்று நிகழ்வா?
அப்படியே அவர்கள் கதைப்படியே பார்த்தாலும், வாமனன் கேட்டது மூன்றடி. மூன்றடி என்பது பூமியில்தான் கேட்டான், மாவலியும் பூமியில்தான் முன்றடி கொடுப்பதாகச் சொன்னான். அப்படியென்றால் மூன்றடியும் மண்ணில்தானே அளந்து எடுக்க வேண்டும்?
ஓரடி வைத்ததும் பூமி முழுவதும் அடைந்துவிட்டது என்கிறது கதை. அடுத்த அடி எங்கே என்பதற்கு ஆகாயத்தில் என்று காட்ட ஆகாயம் இரண்டாவது அடி வைத்ததும் அடைந்துவிட்டது.
மூன்றாவது அடி எங்கே என்றதும் மாவலி தலையைக் காட்ட, மூன்றாவது அடியை அவன் தலையில் வைத்தான் என்கிறது கதை! இது மட்டும் கட்டுக்கதை இல்லையா?
மூன்றடி மண் மாவலியால் பூமியில்தான் கொடுக்கப்பட்டது என்னும்போது ஆகாயத்தில் அளந்தது அசல் பித்தலாட்டம். அதைவிடப் பித்தலாட்டம் மாவலி தலையில் மூன்றவது அடியை வைத்தது!
முதல் அடி பூமியில் வைத்தபோது, பூமி முழுவதும் அடைந்துவிட்டது என்றால், பூமியிலுள்ள மாவலியும் அதில் அடக்கம். அப்படியென்றால், மாவலி உட்பட எல்லாம் முதல் அடியில் அளந்து முடிக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க மூன்றாம் அடியை மாவலி தலையில் வைத்தான் என்றால் அது மோசடியா இல்லையா?
நரகாசுரன் கதையில் பூமியை பாயாய் சுருட்டினான் என்றால், எங்கு நின்று சுருட்டினான் என்ற கேள்விக்கு இன்று வரை மோசடிக்காரர்களிடம் பதில் இல்லையே!
அப்படித்தான் இதுவும்? மூன்றடி மண் கேட்டான் என்பதே சூழ்ச்சியின் உள்ளடக்கம் தானே? மூன்றடியில் என்ன செய்ய முடியும்? ஒரு மனிதன் நிற்கத்தானே முடியும்! அப்படியிருக்க மூன்றடி கேட்டான் என்பதன் நோக்கமே சரியில்லையே!
இக்கதையின் உண்மைத் தத்துவம் என்ன? திராவிடர்கள் இந்த நாட்டு மண்ணின் மக்கள். ஆரியர்கள் வந்தேறிகள். அவ்வாறு பிழைக்க வந்த ஆரியர்கள் முதலில் பிச்சையெடுத்து வாழ்ந்தனர். அதன் பின் மெல்ல மெல்ல செல்வந்தர்களையும், மன்னர்களையும் அண்டி அவர்கள் கொடுத்ததைக் கொண்டு வாழ்ந்தனர்.
மெல்ல மெல்ல அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்தனர். ஆக, ஒண்ட வந்த கூட்டம், உரிமையாளனை வீழ்த்தி அபகரித்தது என்பதன் கற்பனை வடிவந்தானே வாமன அவதாரக் கதை.
சுருங்கச் சொன்னால், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பறித்தான் என்ற அபகரிப்புதானே ஆரியர்களின் ஆக்கிரமிப்பு வரலாறு.
மொழியை அபகரித்தார்கள்; சிந்தனைகளை அபகரித்தார்கள். அதேபோல் மண்ணையும் அபகரித்தார்கள்.
அதிலும் ஆரிய பார்ப்பனர் ஊடுருவல் கேரளப் பகுதியில்தான் அதிகம் நிகழ்ந்தது. அங்கு மொழி, கலாச்சாரம், அதிகாரம் என்று எல்லாவற்றிலும் அவர்கள் நுழைந்து முழுமையாகக் கைப்பற்றினர்.
சிறு கூட்டம் ஒண்ட வந்து ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியது என்ற உண்மை, வரலாற்றின் கற்பனை வடிவமே மூன்றடி மண் கேட்டவன் முழுவதையும் பெற்றான் என்ற கதை!
அதிலும் குறிப்பாக நம் திராவிட மன்னர்கள் ஆரியர் சூழ்ச்சியில் வீழ்ந்து, அனைத்தையும் இழந்தனர் என்ற உண்மையையும் இக்கதை வெளிப்படுத்துகிறது.
ஆக, தேவ அசுர போர் என்பதை ஆழமாக மனதில் கொண்டே திராவிட மக்கள் புராணங்களைப் பார்க்க வேண்டும்.
மலையாள மக்கள் இதில் விழிப்போடு இருந்து ஆரிய சூழ்ச்சியை முறியடித்தது பாராட்டுக்குரியது மட்டுமல்ல. அமித்ஷாவை மன்னிப்புக் கேட்க வைத்தது சாதனையாகும்!
மலையாள மக்களுக்கு உரிய விழிப்பை உண்டாக்கி, ஆரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்தி, “வாமன ஜெயந்தி’’ என்பது ஆரிய பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு முயற்சி என்பதை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வின் விளைவு ஆகும் அது.
கேரள முதல்வர் மாண்புமிகு விஜயன் அவர்களும் தன் கண்டனத்தை வலுவாகப் பதிவு செய்து, “நூற்றாண்டுகளாக ஓணம் கொண்டாடி வரும் மக்களின் வழக்கத்தை மாற்றி, பொய்யான புதிய ஒன்றை புகுத்த முயன்றதற்கு பா.ஜ.க.வும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைத்தார்.
இந்த மான உணர்வுடன் திராவிட மக்கள் உணர்வு கொண்டால், ஆரிய ஆதிக்கமும், இன இழிவும் ஒழிந்து, மூடத்தனங்களும் விலகும். அடுத்த இதழில் இன்னொரு மோசடியை ஆராய்வோம்.
(தொடரும்)