அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி வெள்ளை வெறித்தனத்தின் வெற்றி!

நவம்பர் 16-30

 டிரம்ப் நினைப்பதையெல்லாம் சாதிக்க முடியாது என்பதே உண்மை நிலை!

அமெரிக்கத் தேர்தல் ஓர் அதிர்ச்சியைத் தந்துள்ளது. அமெரிக்கா எப்போதுமே வேகமாக ஆடும் ஊஞ்சல்  போலத்தான் ஊசலாடும்!

எட்டு ஆண்டுகட்கு முன்னர் ஒரு கருப்பரைத் தேர்ந்தெடுத்தது. சமுதாயத்தின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் அரசு தங்களுடையது என்று நம்பினர். இது மேல் மட்டத்தில் இருந்தவர்களுக்கும் வெள்ளை கிருத்துவ மத நம்பிக்கையாளர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. கருக்கலைப்புக்கு ஆதரவும், ஓரினச் சேர்க்கை மக்களின் துணிவான நடவடிக்கைகளும் வெள்ளைக் கிருத்துவர்களை உசுப்பிவிட ஒரு பெரும் பணக்காரர் டிரம்ப், அமெரிக்க அரசை, ஒபாமாவை,  மற்றும் அவருடையக் குடியரசுக் கட்சித் தலைவர்களையே எதிர்த்தும் வெறியூட்டி வெற்றிபெற்று விட்டார்!

இது ஒரு வெள்ளை வெறித்தனத்தின் வெற்றி தான்! அமெரிக்க வெள்ளை வெறிபிடித்த அமெரிக்கா, ஒரு கிருத்துவ நாடு, வெள்ளை ஆண்கள்தான் ஆளவேண்டும் என்ற கோட்பாடுதான் வெற்றி கண்டுள்ளது.

அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு; சீனா அமெரிக்காவின் வேலைகளைப் பிடுங்கிக் கொண்டுவிட்டது; உலக அரசியலில் அமெரிக்கா மற்ற நாடுகளின் பாதுகாப்பிற்காகச் செலவு செய்யக் கூடாது; மெக்சிகோவிலிருந்து அமெரிக்கச் சட்டத்தை மீறி குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும்; அரசு மருத்துவத்திற்காகச் செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்; அனைவருக்கும் முக்கியமாக பெரிதும் சம்பாதிப்பவர்களின்

1% வரியைக் குறைக்க வேண்டும்; உச்சநீதி-மன்றத்தில் பிற்போக்கான நீதிபதிகள்தான் வரவேண்டும் என்பன டிரம்பின் கொள்கைகள்.

ஆனால், அமெரிக்காவில் தலைவர் நினைக்கும் அனைத்தையும் சாதித்துவிட முடியாது. ஒபாமா நினைத்ததில் ஒரு சிறு அளவுகூட சாதிக்க முடியவில்லை. அவருக்கு எதிராக அமெரிக்க மேல்சபையும், கீழ்சபையும் இருந்தன. இப்போது டிரம்பின் கட்சியே இரு சபைகளிலும் பெரும்பான்மை-யில் இருந்தாலும் அவர்கள் டிரம்ப் சொல்லும் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. மேல்சபையில் 100 உறுப்பினர்கள். அதில் 60 பேர் வாக்களித்தால் தான் முக்கிய சட்டங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வு நடக்க முடியும். அங்கே மக்கள் கட்சி 47 பேர் உள்ளனர். ஆகவே ஊசல் ஒரு பக்கமாக டிரம்ப் பக்கம் சாய்ந்திருந்தாலும் ஒரேயடியாக அவரது அதிரடிக் கொள்கை-களை நிறைவேற்ற முடியாது. தேர்தல் பேச்சு நமது ஊர் தேர்தல் அறிவிப்புக்கள்-போல் வாக்குகளைப் பெறத்தானே தவிர அவை நடைமுறைக்கு வரும் என்று நம்ப முடியாது. இப்போதே டிரம்ப் அனைவருடனும் ஒத்துழைப்பேன் என்று சொல்லி தன் நிலையை மாற்றிக்கொண்டு விட்டார்.

தமிழரில் வெற்றி பெற்றோர்

மேல்சபையில் கமலா ஃகேரிசு என்ற பாதித் தமிழ் அம்மையாரும், கீழ்சபையில் சிகாகோ அருகேயுள்ள ராஜா கிருட்டிண-மூர்த்தியும், வாசிங்டன் மாநிலத்தில் பிரமீள் ஜெயபாலும் தமிழர்-கள், மக்கள் கட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

– மருத்துவர் சோம.இளங்கோவன், அமெரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *