- சமா.இளவரசன்
சமச்சீர் கல்வி முறையை மாற்ற முடியாதபடி அமைந்துவிட்டது உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு! அதனால் தான் 1, 6- ஆம் வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்ட நூல்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிற வகுப்புகளுக்கான பாடங்கள் சரியில்லை என்று தமிழக அரசு சொல்வதால் அவற்றை ஆராயக் கல்வியாளர் களைக் கொண்ட குழு அமைத்து அதன் அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றோர் யார் தெரியுமா? அத்தனையும் அவாள்கள் _- அரசு அதிகாரிகள் இருவரைத் தவிர! மத்திய பாடத்திட்டக் குழுவில் இருந்து இடம்பெற்றோரில் ஒருவர் பார்ப்பனர். மற்றொருவர் மதத்தையும், கல்வியையும் பிரிக்கக்கூடாது என்று கட்டுரை எழுதிய அனில் சேத்தி என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். சரி, கல்வியாளர்களைக் கொண்ட குழு என்று இவர்கள் சொன்ன பட்டியலில் இருந்தவர்கள் பிரபலமான கல்வி வியாபாரிகளே அன்றி கல்வியாளர்கள் அல்லர். ஒன்பது பேர் கொண்ட குழுவில் ஒரே ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் கூடக் கிடையாது. ஏன், அரசு ஆசிரியர்கள் யாருக்கும் இந்தக் குழுவில் இடம்பெறும் தகுதி கிடையாதா? தனியார் பள்ளி முதலாளிகள் எல்லாம் நெய்யில் பொரித்தவர்கள்.. நாங்கள் என்ன குருடாயிலில் பொரித்தவர்களா? என்று எந்த அரசு ஊழியர் – ஆசிரியர் கூட்டமைப்பும் கேட்கவில்லை. அத்தனை லட்சம், இத்தனை லட்சம் ஆசிரியர்கள் என்றெல் லாம் கூட்டம் போடுவது பஞ்சப் படி, பயணப் படிக்குத்தானா என்று தெரிய வில்லை.
வெட்கம்..வெட்கம்! ஆக மொத்தம் அக்கிரகாரக் குழு கூடி, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பற்றி ஆராய்ந்தது… நரிகள் கூடி நண்டு நல வாரியம் அமைத்தது போல! நான்கு வருணத்துக்கும், நான்கு பாடத்திட்டம் என்பது போல ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மெட்ரிக், மாநிலப் பாடத்திட்டம் என இருந்ததை மாற்றியாகி விட்டது. அதை ஒன்றும் செய்ய முடியாது. கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்ற பதட்டத்தில் இருந்தவர்கள், பாடத்திட்டத்தில் சமூக அக்கறையோடு இருக்கும் பகுதிகளை அனுமதிப்பார்களா?
கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்தில் படிப்பவனும், என் பிள்ளையும் ஒரே பாடத்தைப் படிப்பதா என்ற மேட்டிமைத் திமிர், பார்ப்பனத் தனம், ஏற்கெனவே இருக்கும் பிரிவினைகளைத் தகர்த்துவிடுமோ என்று இவர்களின் கோபங்களைக் கிளறியிருக்கிறது. இதுவரை வரலாற்றுப் பாடத்தில் சேர, சோழர், பாண்டியர் காலத்துக்குப் பிறகு தமிழகத்துக்கென்று வரலாறே இருக்காது. நீதிக் கட்சி என்ற வார்த்தையை பாடத்தில் பார்க்கவே முடியாது. சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் பட்டியலில் ஆரிய சமாஜத்தின் பெயர் தான் இருக்கும். பூலேவும், சாகுமகராஜும், நாராயணகுருவும், அம்பேத்கரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரையும் சேர்த்து தந்தை பெரியாரின் பெயரையும் வேறு சமச்சீர் கல்வியில் சேர்த்துவிட்டால் பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு!
பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, தியாகராயர், டி.எம்.நாயர், முத்துலெட்சுமி ரெட்டி இன்னும் சமூக சீர்திருத்தத் தலைவர்கள் பற்றிய பாடங்களைத் தூக்க பரிந்துரைத்துள்ளது அக்கிரகாரக் குழு! பாடத்திட்டத்தில் தரம் இல்லை என்று சொல்லும் இவர்கள், பெரு வெடிப்புக் கொள்கை போன்றவற்றை கிராமப்புற மாணவர்கள் எப்படிப் படிப்பார்கள்? அவர்களின் தரத்துக்கு மிஞ்சியதாக இருக்கிறது என்று நீலிக் கண்ணீரும் வடித்துள்ளது.
ஒருபக்கம் பாடத்திட்டத்துக்குத் தரமில்லை என்பது…! இன்னொரு பக்கம் பாடத்தைப் படிக்க மாணவர்களுக்குத் தரமில்லை என்பது! எத்தனை திமிர்? எத்தனை வேடம்? கிராமப்புற மாணவர்களுக்குப் படிக்கத் தகுதியில்லை என்று சொல்லுவதற்கு எவ்வளவு ஜாதித் திமிர் இருக்க வேண்டும்?
இதைக் கண்ட திராவிடர் கழக மாணவரணி கொதித்தெழுந்தது.
தமிழக அரசு அமைத்த அக்கிரகாரக் குழுவின் அறிக்கையை, எந்த அண்ணாவையும், பெரியாரையும் மறைக்கத் துணிந்தார்களோ, அதே அண்ணா பெயரிலமைந்த சாலையில், பெரியார் சிலையருகே கொளுத்தி முழக்கமிட்டனர் திராவிட மாணவர்கள். உடனடியாகக் கூடி அக்கிரகாரக் குழு அறிக்கையைக் கொளுத்திய நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் மு.சென்னியப்பன், வை.கலையரசன், பரந்தாமன், விஜயகுமார், கார்த்திக் ஆகிய 5 பேர் மேல் மட்டும் வழக்குத் தொடுத்து 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைத்திருக்கிறது தமிழக அரசு.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உடனடியாகப் பரவிவிட்டது தீ!
தஞ்சை, உரத்தநாடு என்று பல்வேறு நகரங்களிலும் மாணவர்கள் அக்கிரகாரக் குழுவின் அறிக்கையைத் தீக்கிரையாக்கினர்.
இன்னும் பரவும் இந்தத் தீ! அன்று குலக்கல்விக்கு எதிராக பெரியார் பரவ ஆணையிட்ட தீ, இன்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாய்ப் பரவட்டும்!
கல்வியில் கைவைத்த யாரும் தமிழ்நாட்டில் நிலைத்ததாய்ச் சரித்திரமில்லை!
குல்லூகப்பட்டர் ராஜாஜி ஓடி ஒளிந்த சரித்திரம் பாடப் புத்தகங்களில் இடம் பெறவில்லை. ஆனால், மக்கள் மனங்களில் அழியாமல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், பாடப் புத்தகத்தில் வருணபேதம் உண்டாக்கும் ராஜாஜியின் வாரிசுகள் ஒழிந்த வரலாறு நாளை வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெறும்.
அதற்கான தீ பரவட்டும்! பரவட்டும்!!