அன்றே வளர்ந்திருந்த அறிவியல்

ஜனவரி 16-31

தொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைமைகள், இன்றைக்கும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு, ஒரு சில; நவீனப் புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் ஒத்து வர இயலாத நிலையுடைய-தாயினும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் பெருமிதம் கொள்ளும்போது அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
அய்ந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா:27)

இதன் பொருள் விளக்கம்: ஓரறிவுள்ள உயிர் உடம்பினால் அறியக்-கூடியது. ஈரறிவுள்ள உயிர் என்பது உடம்-பினாலும் வாயினாலும் அறியக்கூடியது.  மூவறிவுயிராவது உடம்பினால் – வாயினால் – மூக்கினால் என மூன்றினாலும் அறியக்கூடியது.  நாலறிவுயிராவது உடம்பு, வாய், மூக்கு, கண் ஆகியவற்றால் அறியக்கூடியது.  அய்யறிவு உயிர் என்பது உடம்பு, வாய், மூக்கு, கண், செவி ஆகியவற்றால் அறியக் கூடியது. இவைக-ளேயன்னியில் ஆறாவதாக மனத்தினாலே அறியக் கூடியதே ஆறறிவு எனப்படும்.  இவ்வாறு உயிர்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி, ஓரறிவு முதல் ஆறு அறிவு வரை பெற்றுள்ள உயிரினங்கள் எவை எவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகிற பாங்கினை மரபியல் உணர்த்தும்போது எந்த அளவுக்கு மிகப் பழங்காலத்திலேயே அறிவியல் அடிப்படையில் வாழ்க்கை இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது என்ற மலைப்பு ஏற்படத்தான் செய்கிறது.

உலகில் வாழும் எல்லாவுயிர்களையும், அவற்றின் உடலில் அமைந்துள்ள அய்ம்பொறி-களையும் உய்த்துணரும் உட்கருவியாகிய மனத்தினையும் கொண்டு அவ்வுயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவீறாகப் படிப்படியே அறிவினாற் சிறந்து விளங்குந் திறத்தினை நமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே வாழ்ந்த நுண்ணுணர்-வாளர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

உயிர்கள் தாம் பெற்றுள்ள மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் அய்ம்பொறிகளின் வாயிலாகவும், அகக்கருவியாகிய மனத்தின் வாயிலாகவும் முறையே ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி என்னும் அய்ம்புலவுணர்வுகளையும் உய்த்துணர்வினையும் பெற்று அறிவினால் வளர்ச்சி பெற்றுள்ள திறத்தை நுனித்துணர்ந்து அவற்றை அறுவகையுயிர்களாகப் பகுத்துரைக்கும் இவ்வுயிர்ப் பாகுபாடு பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும்.

புல்லும், மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா:28)

எனும் நூற்பா; புல்லும் மரமும் எனும் இருவகைத் தாவரங்களும் உடம்பினால் அறிந்து கொள்ளக் கூடிய ஓரறிவுடைய உயிர்களாகும் என்பதைக் குறிப்பிடுகிறது.  பிறவும் என இந்த இரண்டிலும் அல்லாத பிற உயிர்கள் என்றும் உணர்த்தப்படுகிறது. அவற்றுக்கும் உடலால் அறிந்து கொள்ளக் கூடிய ஓரறிவுதான்.  தாவரங்கள்பற்றியும் இரண்டாயிரம் ஆண்டு-கட்கு முன்பே தமிழன் பெற்றிருந்த அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்பதற்கு இதைவிடச் சான்று எதுவும் தேவையா? உடம்பால் உணர்ந்து கொள்ளக் கூடிய புழுக்கள், புற்கள், மரங்கள், கொடிகள், செடிகள் எனப்படும் ஓரறிவுடைய பட்டியலுக்கு அடுத்து; நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா: 29)

சங்கு, நத்தை, கிளிஞ்சல் போன்றவையும் ஈரறிவு உயிர்களாம்.  தாக்கப்படும்போது அறியும் உணர்வும், இரை கொள்ளுவதால் வாயுணர்வு மென இரு அறிவு கூறப்படும்.

* * * *

சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
(பொருளதிகாரம் – மரபியல் – நூற்பா: 30)
ஈசல், எறும்பு, கறையான் இவற்றுக்கும் இவற்றையொத்த பிற உயிர்க்கும் மூவறிவு.

உடலால், வாயால், மூக்கினால் அறியக் கூடிய உயிரினங்கள் இவை.

நண்டும் தும்பியும் நான்கறிவுடையவை எனவும், விலங்குகளும், பறவைகளும் அய்ந்தறிவுடையவை எனவும் மரபியல் விளக்குகிறது.

மக்கள் ஆறறிவுடையோராவர் – ஆறில் ஒன்றிரண்டு குறைவதற்கும், நிலையாக இருப்பதற்கும்; இந்த இலக்கணம் பொறுப்பல்ல!  நன்றி: தொல்காப்பியப் பூங்கா

– கலைஞர் மு. கருணாநிதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *