தமிழ்நாட்டைக் கடந்து வெளிமாநிலங்-களிலும், வெளிநாடுகளிலும் சுயமரியாதைக் கொள்கைகளை விதைக்க, ‘ரிவோல்ட்’ (Revolt) இதழ் ஆங்கிலத்தில் ‘குடிஅரசு’ ஏட்டின் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு வார ஏடாக கொண்டு வரப்பட்டது. இதன் கொள்கைகளாக தந்தை பெரியார் 11.11.1928 ‘குடிஅரசு’ இதழில் எழுதியவை.
“ரிவோல்ட்’’ என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடிஅரசு’’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு நாம் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது, அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.’’
‘ரிவோல்ட்’ வெளியிடுவோராகவும் பதிப்பாளராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்துகொள்ள அன்னை நாகம்மாள் 19.04.1928 அன்று கோர்ட்டுக்குப் போனார். அப்போது போலீசாரிடம் ரிப்போர்ட் கேட்டிருப்பதாகவும், அது வந்ததும் பதிவு செய்து கொள்வதாகவும் கூறிவிட்டனர்.
07.11.1928ஆம் தேதியிட்ட இதழ் 06.11.1928 அன்று வெளியிடப்பட்டது. விழா கோவை ரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. WPA சவுந்தரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார்.
‘ரிவோல்ட்’ முதலில் புதன்கிழமைதோறும் வெளிவந்து, பின்னர் ஞாயிற்றுக்கிழமைதோறும் வெளிவந்தது. முதலில் ஈரோட்டிலிருந்தும், சில காலம் சென்னையில் இருந்தும் பின்னர் மீண்டும் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது.
இதன் ஆசிரியர்களாக ஈ.வெ.ராமசாமி அவர்களும் எஸ்.இராமநாதன் அவர்களும் விளங்கினர். பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக ஸ்ரீமதி நாகம்மாள் அவர்கள் விளங்கினார்.
ரிவோல்ட் இதழின் முகப்பு பக்கத்தில் இருந்த எழுத்துகளே கவர்ச்சியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்-திருந்தது. “REVOLT” என்று முழுமையாக பெருத்த எழுத்திலோ, அல்லது ‘Revolt’ என்று முதலெழுத்து பெரு எழுத்திலோ மற்றவை சிறு எழுத்திலோ இல்லாமல், முற்றிலும் சிற்றெழுத்துக்–களைக் கொண்ட கூட்டெழுத்-தாக ‘Revolt’ வரையப் பெற்றிருந்தது. அப்பெயர் மட்டும் சிவப்பு வண்ணத்தில் அச்சிடப்-பட்டிருந்தது.
தொடர்ந்து எழுதியவர்கள் பெரியார் ஈ.வெ.ரா., எஸ்.இராமநாதன், நாகர்கோயில் வழக்கறிஞர் பி.சிதம்பரம்பிள்ளை, செல்வி ஞானம். அடிக்கடி எழுதியவர்கள்: வழக்கறிஞர் லட்சுமிரதன்பாரதி, ஜி.சுமதிபாய், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி, இந்திராணி, ஆர்.கே.சண்முகம், கே.எம்.பாலசுப்பிரமணியம், விஸ்வநாதன்.
எப்போதாவது எழுதுபவர்கள்: எஸ்.கே. நாயர், எஸ்.எஸ்.பாரதி, செல்வி குஞ்சுதம், கே.சிவஞானம், ஏ.உத்தண்ட நாடார், நைனா, ரைட்டஸ், திரிகூட சுந்தரம், எஸ்.எம்.மைக்கேல். இதில் தொடராக நாகர்கோயில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளையால் எழுதப்பட்ட “The Right of Temple Entry” கட்டுரைத் தொடர் புகழ் பெற்றதாகும்.
டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் 01.09.1929 ஏட்டில் எழுதிய ‘A Heartrending Rape’ என்னும் கட்டுரை சாரதா சட்டம் விரைவாக அமலுக்கு வர காரணமாக இருந்தது.
‘Revolt’ இதழ் பற்றி லாகூர் ‘ஜட்பட் தோரட் மண்டல்’, ‘பாம்பே கிரானிக்கல்’, நியூயார்க் உண்மை நாடும் அமைப்பான ‘Truth Seeker’ போன்ற அமைப்புகள் வெகுவாகப் பாராட்டின.
– வை.கலையரசன்