– கெ.நா.சாமி
சென்னை அய்.அய்.டி. மனுதர்ம மகுடம் சூட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாதவாத அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது பலமுறை பல நிகழ்வுகளால் வெளிப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் அம்பேத்கார், பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடைவிதித்து பின் அந்த தான்தோன்றித்தனத்திற்கு எதிராக மாணவ அமைப்புகளிடமிருந்தும், அரசியல் கட்சிகளிட-மிருந்தும் எழுந்த எதிர்ப்பினை சமாளிக்க இயலாமல் மூக்குடைபட்டு முடாக்கு போட்டு நின்ற கதை நாடறிந்த ஒன்றாகும்.
பார்ப்பனர் மற்றும் பனியாக் கூட்டம் தவிர்த்து மிகச் சிலராகவே அங்கு பணியாற்றும் இதர ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கொடுக்கப்படுகின்ற இடுக்கண்கள் எண்ணிலடங்கா.
அப்படிப் பாதிக்கப்பட்டு, வழக்கு மன்றம் வரை சென்று போரிட்டவர்தான் W.B.வசந்தா என்னும் பேராசிரியர்.
அவர் 110 புத்தகங்களுக்கு மேல் எழுதி-யுள்ளார். அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் (Research Papers) உலகிலுள்ள பல பல்கலைக்-கழகங்களின் நூலகங்களில், தகவல்கள் தேடுபவர்களுக்காக பெரிதும் பயன்படும் தகுதி பெற்றவையாகும்.
30 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர். அப்படி அவர் பணியாற்றிய காலத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகளை முறையாக வழங்காமல் பல முறைகேடு-களையே முதன்மைப்-படுத்தி உயர் ஜாதியினருக்கு அப்பதவிகளை வழங்கியது நிர்வாகம்.
சமூகநீதிக்கு எதிரான இந்த நிர்வாகச் சீர்கேட்டை, நேர்மையற்ற நிலையை ஜாதி ஆதிக்கத்தை அந்த அம்மையார் கடுமையாக எதிர்த்ததுடன், நீதிமன்றம் சென்று வழக்காடினார்.
1995இல் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் (Interview) அவரை அசோசியேட் புரபொசர் பதவிக்குத் தேர்வு செய்யவில்லை. மீண்டும் 1997இல் நடைபெற்ற புரொபசர் (Post of Professor) பதவிக்கும் தேர்வு செய்யாமல் அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற ஒருவரை அவருடைய மதிப்பெண்ணை 59.6% என்பதிலிருந்து முழுமையாக்கி (Round of) 60% என மாற்றி அவரைத் தேர்ந்தெடுத்தனர். மற்றொருவர் அப்பதவிக்குத் தேவையான கல்வித் தகுதியே பெறாதவர். அவரையும் தேர்ந்தெடுத்தனர்.
இந்த அநியாயத்தை உயர்நீதிமன்றம் இந்த நேர்முகத் தேர்வுகளில் அளவிலா முறை-கேடுகள் (Gross Irregularities) நடந்துள்ளன என்று கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததோடு இந்த அம்மையாருக்கு 1997ஆம் ஆண்டு முதல் அவர்கள் பணி ஓய்வு பெற்ற காலம் வரை அவர் பணியாற்றிய பதவிக்கும் முறையாக அவர் பெற்றிருக்க வேண்டிய பதவி உயர்வு பணிக்கும் இடைப்பட்ட ஊதிய விகிதத்தை தற்போது மொத்தமாக வழங்கிட வேண்டும் என்று ஆகஸ்டு 22ஆம் நாளன்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 1995 ஆண்டு மற்றும் 1997ஆம் ஆண்டுகளுக்கிடையில் அவர் பெற்றிருக்க வேண்டிய பதவி உயர்வு பற்றியும் பரிசீலிக்க வேண்டும் என மண்டையில் அடித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பணி ஓய்வு பெற்றுவிட்ட அம்மையாரை தற்போது நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ள அவலம் கண்டு உலகமே சிரிக்கிறது!