தந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் தலைவர்கள் சிறப்புரை

நவம்பர் 01-15

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையில்,

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் நேரப் போக்குப் பிரச்சாரமாக நடந்து வந்திருந்த போதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது ஏன்? சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகாபண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது; தோழர் காந்தியாரை பல கரணங்கள் போடச் செய்துவிட்டது.

 

பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பிவிட்டது. கீழ்சாதி, மேல்சாதி என்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும், குர்-ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். காங்கிரஸ் தொல்லை இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு, பார்ப்பனீயம் அடியோடு மாண்டிருக்கும் என்றே சொல்லலாம்.

கருநாடகத்தில் இன்னமும் எச்சில் இலைகளில் உருண்டு கொண்டிருப்பார்களா? அதனை நியாயப்படுத்துவார்களா? அதனை கண்டித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்-கிறது என்றால், கரூரில் இருக்கின்றவர்கள் மீண்டும் அதனை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்கிறார்கள்; எந்த தைரியத்தில்? கலைஞர் ஆட்சி இருந்தால் இதுபோன்று நடக்குமா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தால் இது போன்று நடக்குமா? அல்லது காமராஜர் ஆட்சி இருந்தால் இதுபோன்று நடக்குமா? பகுத்தறிவு ஆட்சி, ஒரு மானமுள்ள ஆட்சி – அதனை விரும்பக்கூடிய ஆட்சி இருந்தால் நடக்குமா? இதனை நியாயப்படுத்துகிறார்கள்.

உலகில் உள்ள மற்ற சமுதாயத்தை நான் பார்க்கிறேன். அவர்கள் எல்லாம் மானத்தோடு வாழ்கிறார்கள், அவர்கள் அறிவோடு வாழ்கிறார்-கள். அப்படி என்னுடைய சமுதாயம் இல்லை. என்னுடைய மக்கள் உடலால் மாறுபட்டிருக்-கிறார்கள்; படிப்பால் உயர்ந்திருக்கிறார்கள்; பணத்தால் உயர்ந்திருக்கிறார்கள். பதவியால் பெருமை அடைந்திருக்கிறார்கள். மானமும், அறிவும் – அதுதானே மிக முக்கியம்.  மானத்தால் உயர்ந்திருக் கிறார்களா?

மனிதன் என்பவனுக்கு மானமும், அறிவும்-தான் அழகு என்று சொன்னவர் தந்தை பெரியார்.

எனவே, அந்த மானமும், அறிவும் என்-பதையே அவர் வற்புறுத்துகிறார். என்னுடைய சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கவேண்டும்.

நம்மைவிட அவர்களிடம் எவ்வளவு மாறுதல்; அக்கிரகாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப்பற்றி இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

இந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு பரிசை அறிவிக்கலாமே! -அக்கிரகாரத்தில் யாராவது விதவை-களான சகோதரிகள் – பார்ப்பனப் பெண்கள் எங்கேயாவது இன்றைக்கு வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு – மொட்டைப் பாப்பாத்திகளாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கலாம்.

அப்படி யாராவது இருக்கிறார்களா? அப்படி இருந்தால், அப்படி யாராவது சொன்னால், அவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கலாம்.

ஒரு நிகழ்வை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன். சென்னை காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் அவர்கள் இருந்தார். பிறகு அவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவருடைய இல்லத் திருமண வரவேற்பிற்கு அன்னை மணியம்மையார் கலந்துகொண்டுவிட்டு, திரும்பும் பொழுது, எங்களை வழியனுப்ப வந்தார்.

அப்பொழுது அவர் சொன்னார், அம்மா, அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய சீர்திருத்தங்கள் மற்றவர்களுக்கு அதிகம் பயன்பட்டதோ இல்லையோ, எங்களுக்குத்தான் அதிகம் பயன்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்-தான், நாங்கள் எத்தனையோ சம்பிரதாயங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டிருக்கின்றோம். அய்யா அவர்கள் மனித குலத்திற்கே சொல்லி-யிருக்கிறாரே தவிர, ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொல்லியிருக்கிறார் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் சமுதாயத்தில், எங்கள் ஜாதியில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொன்னார்.

அதேபோன்று, அக்கிரகாரத்திலுள்ள தாய்மார்களை எடுத்துக்கொள்ளுங்கள். மறுமணம் அங்கே நடைபெறுகிறதா இல்லையா? அதுமட்டுமல்ல, விதவைத் தன்மை என்பதையே அவர்கள் ஒழித்துவிட்டார்கள்.

ஒரு அம்மையார் மிகவும் பிரபலமானவர், எழுத்தாளர். என்னை பேட்டி கண்டவர் என்கிற அடிப்படையில் அறிமுகமானவர். அவர் கணவர் இறந்தவுடன், இரங்கல் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன்.

அவருடைய தாயார் என்னிடம், நீங்கள் வந்ததற்கு மகிழ்ச்சி; ஆறுதலாக இருந்தது என்று சொன்னார்.

நான், ஆறுதல் சொன்னதற்காக நன்றி சொல்லவேண்டிய தில்லை. அறிமுகமானவர்கள் என்ற அடிப்படையில், மனித நேய அடிப்படையில் உங்களுடைய துயரத்தில் பங்கேற்கிறோம் என்று சொல்வதற்காக வந்தோம். ஒரே ஒரு வேண்டு கோள், அவர்கள் ஏற்கெனவே எந்த உருவத்தோடு இருந்தார் களோ, அதே போன்று இனியும் இருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னேன்.

நிச்சயமாக; அதைப்பற்றி யோசிக்கிறேன் என்று சொன்னார்.

அதற்குப் பிறகு, அந்த அம்மையாரை ஒரு நிகழ்ச்சிக்காக பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றோம். ஓரிடத்தில் காரை நிறுத்தி, அந்த அம்மையார் இறங்கிச் சென்று பூ வாங்கிக் கொண்டு, தலை நிறைய பூ வைத்துக் கொண்டுதான் வந்தார்கள். விதவைக்குப் பூச்சூட்டிய இயக்கம் தந்தை பெரியார் இயக்கம்தான்.

நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு, ‘பெரியார் தந்த புத்தி போதும்; எனக்கு சொந்த புத்தி தேவையில்லை’ என்று சொல்லும் பொழுதுகூட பலர் என்னை கேலி செய்தார்கள். ‘பெரியார் தந்த புத்தி போதும்; எனக்கு சொந்த புத்தி தேவையில்லை’ என்று நான் சொன்னேன்.

பகுத்தறிவுவாதி இப்படி சொல்லலாமா? என்று கேட்டார்கள். இது நியாயம்தானா? இப்படி சொல்லலாமா? என்று ஒரு செய்தியாளரும் கேட்டார்.

ஆம்! என் சொந்த புத்திக்கு சபலங்கள் உண்டு. என் சொந்த புத்திக்குக் குறைபாடு உண்டு. என் சொந்த புத்திக்கு ஆசாபாசங்கள் உண்டு. பெரியார் தந்த புத்திக்கு ஒரு சபலமும் கிடையாது. ஒரு ஆசாபாசமும் வராது. எல்லாவற்றிலும் தெளிவு.

மருந்து வாங்கும்பொழுது, கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வந்துவிடுவோமோ? அது மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று பார்ப்பதைவிட, அது காலாவதியான மருந்தா? என்பதைத்தானே பார்ப்போம். காலாவதியான மருந்தைக் கொடுத்துவிட்டால் -_ 20 ரூபாய் மதிப்புள்ள மருந்திற்கு _- காலாவதியானதைக் கொடுத்துவிட்டாயே என்று கேட்கிறோம் – அது நியாயம்தான். ஆனால், காலங்காலமாக 2000 ஆண்டுகளாக காலாவதியான கருத்துக்களையே வைத்துக் கொண்டு நாம் மாரடித்துக் கொண்டிருக்கின்-றோமே – இது நியாயமா? என்று தந்தை பெரியார் கேட்டார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்-களுக்காக வைக்கத்தில் போராட்டம் நடத்தினார் தந்தை பெரியார் அவர்கள். அந்த வைக்கத்தைச் சார்ந்த நாராயணன் அவர்கள், குடியரசுத் தலைவராகவே அமர்ந்தார். ஆனால், பெரியார் மகிழ்ந்தாரா? என்று சொன்னால், அதுவரையில் மகிழ்ச்சிதான். அடுத்த கேள்வியை கேட்டார், தாழ்த்தப்பட்ட சகோதரர்களை குடியரசுத் தலைவராக்கி விட்டோம், முதலமைச்சராக ஆக்கிவிட்டோம், நீதிபதியாக ஆக்கிவிட்டோம் – சந்திர மண்டலத்திற்கும் இன்றைக்கு நம்மாட்கள் செல்கிறார்கள்.

கர்ப்பகிரகத்திற்குப் போக முடிகிறதா? என்று கேட்டார் பெரியார்?

எனவே, இந்நிலையை மாற்ற நாம் சூளுரைப்போம்’’ என்று தன் உரையை நிறைவு செய்தார்.

மேனாள் மத்திய அமைச்சர் அ.இராசா அவர்கள் பேசுகையில்,

 

செம்மொழி மாநாட்டிற்காக நான் அப்பொழுது வகித்த அமைச்சர் பதவியின் காரணமாக, அஞ்சல் துறையின் சார்பில், ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிட்டபொழுது, அந்தத் தபால் தலையைப் பெற்றுக் கொண்டவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அந்த மேடையில் சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் இருந்தார்கள்.

அப்பொழுது நான் ஒன்றை சொன்னேன், நான் இந்தத் தபால் தலையை வெளியிடுவதில், அதிலேயும் தலைவர் கலைஞர் அவர்களுடைய முன்னிலையில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இங்கே பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார் என்று நான் குறிப்பிட்டேன்.

இந்தியாவினுடைய அரசியல் நிர்வாகம் சமூகத்தைப் பற்றிய வெள்ளையறிக்கை – ஒயிட் பேப்பர் வெளியிடப்பட்டது.

அந்த ஒயிட் பேப்பரில் ஓரிடத்தில் _- இந்தியாவில் ஜாதியினுடைய தாக்கம் எப்படி இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒரு கிராமத்தில் ஒரு தபால்காரன் போனால் – அப்பொழுதெல்லாம் தபால் காரர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருப்பார்கள். அக்கிர காரத்திற்கு நேரடியாகச் சென்று கொடுப்பார்.

சூத்திரர்களுக்கு வந்தால், வீதியில் நின்று தூக்கி எறிந்துவிட்டு, சோலை மலை, லட்டர் வந்து இருக்கிறது, தூக்கிப் போட்டு இருக்கிறேன் எடுத்துக் கொள் என்று திண்ணையில் போடுவாராம்.

அதற்குப் பிறகு பஞ்சமன் வீட்டிற்குப் போனால் – தபாலே வராதாம். அதிகப்படியாக பஞ்சமனுக்குத் தபாலே வராது.  ஒருவேளை அவர்களின் வீட்டிற்கு தபால் வந்தால், அந்தத் தபாலை, சேரிக்குப் பக்கத்தில் ஒரு கல்லை நட்டு, எல்லா தபாலையும் அந்தக் கல்லின்மேல் கட்டி வைத்துவிட்டு, டேய், பசங்களா, வந்து இந்த லெட்டரையெல்லாம் எடுத்துக்கோங்கடா என்று சொல்வாராம்.

எந்தத் தெருவுக்குள் தபால் கார்டை கொண்டு செல்லக்கூடாது என்று அஞ்சல் துறையை ஒரு காலத்தில் ஆட்டி வைத்தார்-களோ, எந்த வெள்ளை அறிக்கை சொன்னதோ, அந்த சமூகத்தில் பிறந்த இராசாவை- பெரியாரும், கலைஞரும் அந்தத் துறைக்கே அமைச்சராக்கி இருக்கிறார்கள்.

சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன?

அய்யா சொல்கிறார், “இது மற்ற அரசியல் கட்சிகள் போல அல்ல; எங்களு டைய நோக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிற, அடைக் கப்பட்டு இருக்கிற அறிவுக்கு விடுதலை கொடுக்கின்ற இயக்கம். அதனால் இந்த மண்ணில் மனிதர்களுக்கும் – பெண்களுக்கும்- எல்லோருக்கும் சமத்துவம் வரவேண்டும் என்பதற்கான இயக்கம்.’’

தமிழர்களே, பெரியோர்களே, நமக்கு இருக்கிற ஜன சமுத்திரத்தில், ஜன எண்ணிக்-கையை கணக்குப் பார்க்கின்றபொழுது, இந்தப் போராட்டத்தில் ஒரு ஆயிரம் பேர் செத்தால், தலைவாரிக் கொள்கிறபொழுது, நாலு முடி விழுந்தால், எதற்குச் சமமோ, அதைப்போல ஒரு ஆயிரம் பேர் சாகலாம் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

எழுத்தாளர் பழ.கருப்பையா அவர்கள்,

 

மாவலி என்கிற அசுர மன்னன், திராவிட மன்னன் அந்த மக்களால் கொண்டாடப்-படுவதும், அவன் ஒரு நாள் தன் மக்களைப் பார்க்க வருவான் என்று ஓணம் விழாவில் அவர்கள் நினைவு கூர்வதும் இன்றைக்கும் நடந்து வருகிறது.

இந்த விழா மாவலி விழா; இந்த விழா ஓணம் விழா; இந்த விழா திராவிட மன்னனின் விழா; ஒரு அசுர மன்னனின் விழா.

இந்த விழாவை நம்முடைய அமித்ஷா – _ பிஜேபியினுடைய பொதுக் காரியதரிசி அமித்ஷா – நம்முடைய மலையாள மக்களுக்கு வாழ்த்து கூறுகிறார். வாழ்த்துக் கூறுகிற-பொழுது, ஓணத்திற்கு நான் வாழ்த்தைச் சொல்கிறேன், மாவலிக்கு வாழ்த்து சொல்-கிறேன் – உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன் என்றால் முடிந்து போய்விட்டது. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்கிறேன் என்று, நபிகள் நாயகத்தை மறுத்து பக்ரீத் பண்டிகைக்கு எதற்காக வாழ்த்துச் சொல்லவேண்டும். அதுபோல, வாமனன் பெயராலே அந்த விழாவிற்குச் சொல் படைக்கிறார்கள். அந்த விழா வாமன ஜெயந்தியாம்! வாமன ஜெயந்திக்கு உங்களுக்கு நல் வாழ்த்து கூறுகிறேன் என்று சொன்னவுடன், மலையாளிகள் கொதித்துப் போய்விட்டார்கள்.

வாமனன் கடவுள் என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமல்ல. நமக்கிடையே வாழ்ந்த நம்முடைய மூதாதையர்களில் ஒருவன், நெறி மிகுந்த ஒரு மன்னனின் நினைவை நாம் கொண்டாடுகிறபொழுது, அதனை மறுத்து, வாமன விழாவாகக் கொண்டாடப்படுவது என்ன நியாயம் என்று அவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அதற்கு அவுட் லெட்டாக நம்முடைய ஆசிரியர் வீரமணி அறிக்கை வெளியிட்டார்.

அப்பொழுது அவர்கள் கருதுகிறார்கள், தங்களுடைய விழாவை இவ்வளவு அசிங்கப்-படுத்தி, வாமன விழா என்று, – கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; கடவுள் தவறு செய்தவன். கேவலமான அவதாரம் அவன். நெறிமிகுந்த மன்னனை அழுத்திக் கொன்றவன் அவன். செய்தவன் கடவுளாக இருந்தாலும், மக்கள் தகுதி வாய்ந்தவனைக் கொண்டாடுகிற-பொழுது, அந்தத் தகுதி வாய்ந்தவன் பெயரில் இருக்கும் புகழை எடுத்துவிட்டு, அதை வாமன ஜெயந்தியாக- அதாவது நெறியோடு வாழ்ந்த-வனை -குறளன் வடிவம் எடுத்து, பாதாளத்தில் அழுத்திய அயோக்கியத்தனமான ஒரு கடவுளை அவனுடைய விழா என்று பேசுகின்ற அளவிற்கு,- நான் கடவுள் நம்பிக்கை உடையவன்தான் அது வேறு. ஆனால், இதுதான் கடவுள் என்றால், நானும் திராவிடர் கழகத்தின் கருத்தைத்தான் பேசவேண்டும்.

ஆகவே, சொல்கிறேன், அதனைப் பார்த்து கேரள மக்கள் கொதித்தார்கள். அப்பொழுது-தான் நம்முடைய ஆசிரியர் வீரமணி ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அந்த அறிக்கை மிக விரிவாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  அந்த அறிக்கையில்,

ஒரு பார்ப்பனச் சதி — இதுபோல, மாவலியின் பெயரால் கொண்டாடப்படுகின்ற விழாவை- வாமன ஜெயந்தி என்று கடவுளின் பெயரால் மாற்றுவதும், அயோக்கியத்தனம் செய்த கடவுளைப் புகழ்வதும், நெறியாக வாழ்ந்த மன்னனை தாழ்த்துவதும்! என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதியிருக்கிறார்.

அந்த அறிக்கையை அளித்ததன்மூலம், பாரதீய ஜனதாவினுடைய அமித்ஷா வாமன ஜெயந்தி என்று சொன்னதற்குப் பதிலாக, அது அசுர மன்னனின் ஜெயந்திதான், அவன் வருகை நாள்தான் என்று நிலைநாட்டிய அவர், காலத்திற்கு ஏற்றவாறு, பெரியார் செய்த பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். இது காலத்தின் தேவை.

ஆகவே, நான் சொல்கிறேன், பெரியாரால் தமிழினம் நிமிர்ந்தது; பெரியாரால் தமிழினம் வாழ்ந்தது. எவ்வளவோ காலமாகப் பாடினார்கள், பாடினார்கள், பேசினார்கள், பேசினார்கள், சிந்து சமவெளிக் காலத்திலிருந்து – ஆரியத்திற்கும் – திராவிடத்திற்கும் நடந்த போர் – சிந்து சமவெளி நாகரிகத்தை அவர்கள் அழித்த காலத்திலிருந்து – அவர்களுடைய வேத நாகரிகம் ஓங்கிய காலத்திலிருந்து இடையே எவ்வளவு போராட்டங்கள் நடந்தன. என்றாலும் பெரியாரின் இயக்கம்தான் சாதித்தது.

மானமிகு சுப.வீ. அவர்கள் உரையாற்று கையில்,

 

நான் இப்பொழுது சொல்லப் போகின்ற நூலை உங்களில் எத்தனைப் பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.

அந்த நூலின் தலைப்பே நமக்கு வியப்பாக இருக்கும் அக்கிரகாரத்தில் பெரியார் என்பது அந்நூலின் தலைப்பு. யார் எழுதியிருக்கிறார் அந்த நூலை என்றால், அக்கிரகாரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் எழுதியிருக்கிறார், அவருடைய பெயர் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் என்பது.

அவருடைய பெயர் அனந்தகிருஷ்ணன் என்பது. அக்கிர காரத்திலே பிறந்து வளர்ந்தவர். மத்திய அரசுத் துறையில் பணியாற்றியவர்.

இவருக்குப் பெரியார் அவர்களுடைய எழுத்தின்மீது, பேச்சின்மீது ஒரு ஈர்ப்பு வந்திருக்கிறது. அவரே எழுதுகிறார், பெரியாரு-டைய பேச்சை ஒருமுறை நான் மறைந்து இருந்து கேட்டேன். அவருடைய பேச்சை போல, அவ்வளவு நகைச்சுவையும், அவ்வளவு எதார்த்தமும் இருக்கிற பேச்சை அதற்குமுன் நான் கேட்டதில்லை என்று அவர் எழுதுகிறார்.

பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பெண் விடுதலையைப்பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகிறபொழுது, அவருடைய அம்மா அவரை அழைத்து, ஏண்டா, பொம்பள விடுதலை என்றெல்லாம் பேசினாயாமே, நாங்கள் எல்லாம் சிறையிலேயா இருக்கிறோம்? என்று.

இவர் திருப்பிச் சொன்னாராம், ஏன் பாரதியார் மட்டும் சொல்லியிருக்கிறாரே, பெண் விடுதலையைப்பற்றி என்று.

பாரதியார் சொல்லலாமடா; பாரதியாரைப் போய் இந்த சிசுபாலனோட சேர்த்து வைத்திருக்கிறாயே என்று அந்த அம்மா சொன்னாராம்.

அவர் எழுதுகிறார், உங்களுக்குத் தெரியாது, எங்கள் அக்கிரகாரத்தில் பெரியாருக்கு நாங்கள் வைத்திருக்கின்ற பெயர் சிசுபாலன் என்பது.

சிசுபாலன் யார்? என்று இப்பொழுது கண்டிப்பாக நாம் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா!

மகாபாரதத்தில் சபா பருவத்தில், ராஜசூயம் நடப்பதற்கான அந்த யாகம் நடக்கின்ற நேரத்தில், கண்ணனுக்கு எப்படி முன்னுரிமை கொடுப்பது சரியாக இருக்கும் என்று தருமரிடம் சண்டை போட்டவர் சிசுபாலன்.

எதற்காக சண்டை போட்டான்? இந்த கிருஷ்ணனுடைய யோக்கியதை என்ன? என்று கேட்டான். கிருஷ்ணனின் யோக்கியதையை தெரிந்துகொள்வதற்கு, பாகவதம் படித்தாலும் போதும், மகாபாரதம் படித்தாலும் போதும். இந்த சபா பருவத்தில் சிசுபாலன் பேச்சு மட்டுமே போதுமானது.

அவன் சொன்னான் எனக்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணை, இந்தக் கண்ணனும், அவனுடைய அண்ணனும் சேர்ந்துதானே தூக்கிக் கொண்டு போனார்கள். அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் பெண்களை மணந்து கொண்டான். ஏழு மனைவிகள்,  அதற்குப் பிறகு கோபிகள் -இத்தனையும் போதாது என்று அவன் ராதாகிருஷ்ணன் என்றால், இவனுக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்களே என்ன நியாயம் என்று சிசுபாலன் கேட்டான்.

சிசுபாலனைப் பாராட்டி ஒருவர் எழுதியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை – அண்ணல் அம்பேத்கர் அவர்கள்தான்.

நான் நினைத்துப் பார்த்தேன், அம்பேத்கர் அவர்களால் பாராட்டப்பட்ட சிசுபாலன் என்று நம்முடைய அய்யா பெரியாரை சொல்வார்களானால், அதைவிட வேறு மகிழ்ச்சி நமக்கு இருக்க முடியாது. எனவே, அவர்கள் சிசுபாலன்  என்றுதான் பெரியாரை சொல்லியிருக்கிறார்கள். பிறகு அவருடைய அப்பா சொன்னாராம்.

கொஞ்சம் கொஞ்சமாக நீ திராவிடர் கழகம் பக்கம் போகிறமாதிரி தெரியுதுடா? திராவிடர் கழக சகதி கிட்டே போனின்னா, பிறகு அந்த கம்யூனிஸ்ட் குட்டை ரொம்ப தூரம் இல்லை என்பதைத் தெரிந்து கொள் என்றாராம்.

அவருடைய அப்பா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நீ இந்த சகதிக்கிட்டே போனால், அந்தக் குட்டை பக்கமாகிவிடும் என்று. திராவிடர் கழகமும் – பொதுவுடைமை இயக்கமும் நெருக்கமானது என்று அவர் களுக்குத் தெரிந்திருக்கிறது. தெரிய வேண்டியவர்-களுக்குத் தெரியவில்லையே என்பதுதான் நமக்கு வருத்தம்.

பிறகு அவருடைய அப்பா இன்னொரு செய்தியை சொல்லியிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கடைசியாக ஒரு வரியை சொல்லி, நான் என் உரையை நிறைவு செய்வேன்.

அவர் வைத்தியநாதய்யர் தலைமையில், 1939 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்-கிறார் – பி.ஏ.கிருஷ்ணனுடைய தந்தையார்.

பேனா அப்புசாமி என்கிற எழுத்தாளருக்கு அவர் மிக நெருக்கமானவர். இவர், அந்தப் போராட்டத்தில் ராஜாஜி யினுடைய கட்டளையை ஏற்று, தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே போயிருக்கிறார். அப்பொழுது நடந்த ஒரு செய்தியை இதுவரையில் படித்த தில்லை. இந்தப் புத்தகம் ஒரு புதிய செய்தியை தருகிறது.

தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே போன போது, அவர்கள் வீட்டு மனைவியர்கள், அதனை எதிர்த்து தங்களின் தாலிகளை அறுத்துப் போட்டு இருக்கிறார்கள். அப்பொழுது இந்த அம்மா சொல்லியிருக்கிறார், வைஷ்ணப் பெண்களின் தாலியை அறுத்தப் பாவிகளடா என்று அந்தப் பார்ப்பனர்களை சாபமிட்டிருக்-கிறார்கள்.

நான் நினைத்துப் பார்த்தேன், தாலி அறுப்புப் போராட்டத்தினை, ஆசிரியர் அவர்களே,  நமக்கு முன்னாலேயே, அவர்கள் நடத்தி விட்டார்கள் என்பது ஒரு புதிய செய்தியாக இருக்கிறது. அதையும் அவர்கள்தான் முதலில் செய்திருக் கிறார்கள்.

நீ தாழ்த்தப்பட்டவனை அழைத்துக் கொண்டு கோவிலுக் குள் போனால், எனக்கு நீ  புருஷன் இல்லை என்று சொல்லி, தாலியை அறுத்துப் போடுகின்ற அளவிற்கு, அந்த ஜாதியப் பற்றில் அவர்கள் ஊறித் திளைத்திருக்-கிறார்கள்.

நண்பர்களே! பெரியாரின் பிறந்த நாளில் வாழ்த்துகளைச் சொல்லாமல், யாரோ எழுதிய வசைகளையெல்லாம் பேசுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? அய்யா பெரியார் அவர்கள் வாழ்த்துகளைக் கண்டு மயங்கியதும் இல்லை – வசவுகளைக் கண்டு மருண்டதுமில்லை.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *