காளஹஸ்தி என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர்; திருப்பதிக்கு 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. அங்குள்ள பார்வதி_பரமசிவன் கோயிலுக்கு, வருமானம் 100 கோடி ரூபாய்!
திருப்பதிக்கு அடுத்தபடி, மிக அதிக கட்டணம் வசூலிக்கும் ‘பூஜை, கடவுள் தரிசன முறை இந்த காளஹஸ்தியில்தானாம்!
மக்களின் மூடத்தனத்தைச் சிறந்த மூலதனமாக்கி – முதல் போடா வியாபாரமாக்கி _ பக்தியினால் பகற்கொள்ளை நடக்கிறது என்பது சில நாள்களுக்கு முன் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி கூறுகிறது!
பிள்ளை இல்லாத தம்பதியருக்குப் பிள்ளை பெற, “நாக பிரதிஷ்ட பூஜா’’, மற்றும் பொதுவான துன்பங்களிலிருந்து விடுபட “ராகு கேது பூஜா’’ _ இவைகளைச் செய்தால் உடனே சக்திவாய்ந்த பலன் கைமேல் கிட்டுமாம்!
அதன் அறங்காவல் குழுத் தலைவர் அள்ளி விடுகிறார்; நல்ல முகவர்கள் எப்படி, தங்கள் பொருள்களை விற்பனை செய்ய _ பிரமாதமாகப் பேசுவார்களே _ “கேன்வாஸ் செய்வார்கள்’’ அப்படிக் கூறுகிறார்.
இந்த மாதிரிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க இந்தியாவில் மஹாராஷ்டிராவில் _ நாசிக்கில் ‘டிரிம்பகேஸ்வர் கோயில்’ உள்ளது; கர்நாடகத்தில் சுப்ரமணி சுவாமி கோயில் இருக்கிறது என்றெல்லாம் கூறிவிட்டு, (போட்டியில்) அவைகளுக்கெல்லாம் இல்லாத சக்தி காளஹஸ்தி பார்வதி _ சிவன் கோயில் கடவுள்களுக்குத்தான் உள்ளதாம்!
‘கடவுள்களுக்கேகூட பல்வகையான தரம் பிரிப்புகள் பார்த்தீர்களா? அதே பார்வதி_பரமசிவன் மற்ற இடங்களில் இருந்தால் அதே சக்தி இல்லையாம்! “பவர் கட்’’ கடவுள்கள் மற்ற இடங்களில் அல்லது “பவர் குறைந்த கடவுள்கள்’’ என்ன மடமை!
காளஹஸ்தி கோயில் அர்ச்சகர்கள் வெளியே சென்று வீட்டில்கூட இதே ‘நாக பூஜை’ செய்தால் 20 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பார்களாம்!
இங்கே இவரது கோவிலில் வெறும் 15 ஆயிரம் தானாம்! இப்படிக் கூவிக்கூவி அழைக்கிறார்!
பக்தி வியாபாரம் எப்படி தழைத்தோங்கி நிற்கிறது பார்த்தீர்களா?
அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்தில் கருத்தரிப்பு முறையில் மருத்துவம் புரட்சி செய்கிறது!
தந்தை பெரியார் முன்னோக்கியே கூறிய பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள் ஏராளம் பிறக்கத் துவங்கிவிட்டன!
பெற்ற தாய், வளர்ப்புத் தாய் என்ற வரிசையில் புதிய சொல்லாக ‘வாடகைத்தாய்’ என்றொரு சொற்றொடரும் புழக்கத்தில் வந்துவிட்டது!
இந்நிலையில் இப்படி மூடநம்பிக்கை, பக்தி வியாபாரம் தங்கு தடையின்றி செழித்தோங்கி, மக்களின் அறியாமைக்கு உரம்போட்டு வளர்க்கின்றனர்!
இந்த காளஹஸ்தி கோயிலுக்கு வந்து பூஜை, புனஸ்காரம் செய்ய அழைக்கும் நகைக் கடைக்காரர்கள் ‘சினிமா ஸ்டார்களை’ வைத்து தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வதுபோல்,
இந்தக் கோயில்களில் ராகு கேது பூஜை செய்த பெரிய மனிதர்கள் யார் யார் தெரியுமா?
1. பிரதமர் நரேந்திர மோடி
2. சச்சின் டெண்டுல்கர்
3. மற்ற பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள்
4. பாட்மிட்டன் வீரர்களில் பதக்கம் வென்ற சிந்து.
இப்படி நீளப் பட்டியல் கொடுத்து ‘உடனே வாருங்கள்’ என்று அழைப்பு விடுகிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர் என்ற பார்ப்பனரை மாநிலங்கள் அவைக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்த பிறகு, பல ஆண்டுகள் அங்கே அவர் ‘பேசா மடந்தை’யாக இருந்தது
விமர்சனத்திற்குள்ளாகியது. ராஜினாமா செய்து பதவி விலகினார்.
அப்படிப்பட்டவர் ராகு _ கேதுவை நம்பி பூஜை செய்கிறார்! அது போகட்டும்!
பிரதமர் இந்திய அரசியல் சட்டப்படி பதவிப் பிரமானம் எடுத்தவர் இல்லையா?
அதில் உள்ள 51ஏ அடிப்படைக் கடமைகள் என்று பட்டியல் இட்டு, அவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
1. அறிவியல் மனப்பான்மை (ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு ஆராயும் தன்மை, மனித நேயம், சீர்திருத்தம்)
இவற்றிற்கெல்லாம் ‘ராகு _ கேது பூஜை’யை நடத்துவது, ராம் லீலாவில் ‘ஜெய்ராம்’ என்று பிரதமர் முழங்குவதும், அரசியல் சட்ட முரண்கள் அல்லவா?
தொன்னைக்கு நெய் ஆதாரமா?
நெய்க்குத் தொன்னை ஆதாரமா?
என்று ஒரு பழமொழி உண்டு. அது மாதிரி பக்திக்கு அரசியலா? அரசியலுக்கும் பக்தி மூடநம்பிக்கை பரப்பி வாக்கு வங்கியைப் பெருக்கும் உத்தியா?
நாடு எங்கே போகிறது? பாபாக்களும், சாமியார்களும் பல்லாயிரக்கணக்கில் சுரண்டும் நவீன ‘அய்டெக்’ (High Tech) சாமியார்களாய்த் திரியும் நிலையில், கடவுள் _ பக்தி வியாபாரமும் போதிய விளம்பரத்தைத் தேடினால்தானே போட்டி வியாபாரத்தில் முந்த முடியும்!
இது மிகப் பெரும் வெட்கக் கேடு அல்லவா? வெட்கம்! மகா வெட்கம்!! வேதனை!!!
கி.வீரமணி,
ஆசிரியர்