வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

அக்டோபர் 16-31

 

காவிரி (காவேரி)

இது வடமொழி தந்திதப் பெயர் என்று கூறி, அதற்காகவே ஒரு பொய்க் கதையும் கட்டிவிட்டனர். கவேரன் மகள் ஆதலின் காவிரியாயிற்றாம். இது மட்டுமன்று. அகத்தியன் தூக்குக் குவளையில் இருந்த நீரை, இந்திரன் வேண்டுகோளால், யானைமுகன் காக்கை உருக்கொண்டு கவிழ்க்க, அது ஆற்றின் உருவாய்ப் பரவிற்றாம். இவ்வாறு அதன் தோற்றத்தைக் கூறி-தமிழகத்தின் நாகரிகத்துக்கே அகத்தியன் காரணம் என்ற பொய்ம் மூட்டைக்கு அரணாக்குவர்…. காவிரி, காவேரி என்பன தூய தமிழ்க் காரணப் பெயர்கள்.

கா– – -சோலை, விரி– – –விரிந்தது. சோலை சூழ்ந்து கா– – –ஏரி சோலையின் வளமுள்ள ஏர் போன்ற மற்றும் பல பொருளில் வரும் காவேர் காவிரி என்ற சொற்களில் குறிக்கப்படும் ஆறானது. ஆரியரும் ஆரியமும் இத்தென்னகத்தில் கால் வைக்குமுன் – பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னமே இருந்ததென்று தமிழ்த் தொன்னூல்களால் அறிகின்றோம்.

ஆதலின் காவிரி, காவேரி தூய தமிழ்க் காரணப்பெயர்கள்.

(குயில்: குரல்: 2, இசை: 6, 14-7-1959)

ஆலாபனம் – ஆலாபனை

என்பவை வடசொற்கள் அல்ல, தமிழ்ச் சொற்களே ஆளத்தி என்பது ஆலாபனம் ஆலாபனை என மருவிற்று.
ஆளத்தி- – இசைகளை ஆளும் முறை, காரணப் பெயர். ஆளத்தியை வக்காணம் என்றும் கூறும். வக்கணை இழி வழக்கு.

உவணம்

அவண் இவண் உவண் என்பவற்றில் உவண் என்பது உயரத்தைக் குறிப்பதோர் சுட்டுப் பெயர். இது அம்சாரியை பெற்று உவணம் என வழங்கும். உவணம் உயரத்திற்குப் பெயராகவே பின் அது உயரத்திற் பறக்கும் பருந்துக்கும் ஆகு பெயராயிற்று. உவணம்- – உயரம், பருந்து.

இதை வடவர் வடமொழி என்று ஏமாற்றுவர். தூய காரணப் பெயராதல் அறிந்து உவக்க.

சமம்

இது தமிழ்ச் சொல், வடசொல் அன்று. இது ஈம் எனவும் தொல்காப்பியத்தில் வந்துள்ளது. ஈமம் – சுடுகாடு.

ஏமம்

இது வடசொல் அன்று, தூய தமிழ்ச்சொல். ஏமம் – நள்ளிரவு. பொன், இன்பம், காலல், பொருள். ஏமம் என்பதை ஹேம ஆக்கி அதைப் பொன்னுக்கு இட்டழைத்தார்கள் சொல்லறியராகிய வடவர்!

தடம்

இதை வடசொல் என்று புளுகினர் வடவர். இது தூய தமிழ்ச் சொல்லாதனை – -தடவும் கயவும் நளியும் பெருமை என்ற தொல்காப்பியத்தாலறிக. தடம் – குளம். கயம் – குளம். தடம் – அகலமுடையது.
(குயில்: குரல்: 2, இசை: 8, 1-9-1959)

உமை

இது உமா என்ற வடசொல்லின் திரிபு என்பர் தமிழின் தொன்மைநிலை தோன்றப் பெறாதவர். அம்மை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே உமை என்பது.

ஆணவம்

வடசொல் அன்று, தூய தமிழ்க் காரணப் பெயர். அது ஆளுதல் என்பதன் அடியாகப் பிறந்தது. உயிரைத் தன் வழிப்படுத்தி ஆளுவதோர் ஆற்றலின் பெயர் ஆட்சி. ஆளுதல், ஆண்மை, ஆட்கொளல் ஆகியவற்றை

நோக்குக.

ஆணவம் என்னும் சொல்லுக்கும், ஆணவ மலம் என்னும் பொருள் பழைய வடநூல்களில் யாண்டும் வழங்கப்படவில்லை என்ற பன்மொழிப் பேராசிரியர் மறைமலையடிகள் அருளிச் செய்தமையும் இங்கு நோக்கத்தக்கது. ஆண்+அ+அம்=ஆண் – -ஆள். அ சாரியை. அம் பண்புப் பெயர் இறுதிநிலை.
(குயில்-, குரல்: 2, இசை: 9, 8-9-59)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *