மனிதத் தன்மை, மனித உரிமை போதித்த பெரியாரைப் பாராட்டுவதைவிட மகிழ்ச்சி வேறில்லை எம்.ஜி.ஆர். உணர்ச்சியுரை

அக்டோபர் 16-31

‘குடிஅரசு’ மூலமே பகுத்தறிவு, அரசியல், சீர்திருத்த இயல் படித்தறிந்தேன்.
கலைஞர்களுக்கு மதிப்பைத் தேடித்தந்தவரும் அய்யாவே!
தவறு செய்தால் துணிந்து கண்டித்து திருத்துவார்

கொள்கைக்கே வெற்றி!

கொள்கையை எந்தெந்த வகையில் யார் யார் எப்படி எப்படி ஏற்கிறார்களோ, எந்த எந்த நிலையில் அதனைத் தனது உடைமையாக்கிக் கொள்கிறார்களோ, அதைப் பொறுத்துத்தான், அவர்களுடைய செயல்களும் வெற்றிகரமாக முடியுமென்பதைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல்வேறு நடைமுறைகளிலே கண்டு அனுபவித்திருக்கிறோம்.

அய்யா அவர்களைப் பாராட்டிப் பேச எனக்கு வயதுமில்லை; தகுதியும் இல்லை; அனுபவமும் இல்லை; ஆனால் எங்களுக்கு அய்யா அவர்கள் தந்த கொள்கை இணைப்பு இருக்கிறதே அதனால் நிச்சயமாகப் பாராட்டத் தகுதி படைத்தவன்.

மனிதத் தன்மையை நாட்டுக்கு அளித்தவர் அய்யா

மனிதனாக வாழ்வதற்குச் சில கொள்கைகள் தேவை. மனிதன் என்று சொல்வதற்குரிய தகுதியைப் பெற வேண்டுமானால் என்னைப் பொறுத்த வரையில், நல்ல கொள்கைகள் வேண்டும்; நல்ல பண்பு வேண்டும்; அவையடக்கம் வேண்டும்; நாட்டுப் பற்று வேண்டும்; மொழிப் பற்று வேண்டும்; பகுத்தறிவு வேண்டும். இவை அத்தனையையும் இந்த நாட்டுக்குத் தந்தவர் அய்யா அவர்கள்தான்.

அய்யாவைப் பாராட்டுவதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறில்லை

என் வாழ்க்கையில் நான் இரண்டு தலைவர்களைப் பெற்றிருக்கிறேன். ஒருவர் கலைவாணர் அவர்களும், இன்னொருவர் அறிஞர் அண்ணா அவர்களும். இவர்கள் இருவரையும் எனக்குத் தந்தவர் அய்யா அவர்கள்தான். இவரைப் பாராட்டுவதைவிட எனக்கு மகிழ்ச்சிக்குரிய வேறு செயலோ, நிலையோ இருக்க முடியாது. இதனை நான் மனப்பூர்வமாகக் கூறுகிறேன். நான் சமுதாய நிலையிலே அறிஞர் அண்ணா அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ளேன். கலையிலே, கலைத்துறையிலே என் பணியைச் செவ்வனே நான் செய்வதற்குக் கலைவாணர் அவர்களைத் தலைவராகக் கொண்டிருக்கிறேன்.

‘குடிஅரசு’ தந்த பகுத்தறிவுக் கொள்கை

கலைவாணர் அவர்களை, 1935_36ஆம் ஆண்டில் நாடகக் கம்பெனியிலிருந்து வெளிவந்து மனித சமுதாயத்திலே எப்படிப் பழக வேண்டும் என்ற பண்புகூட தெரியாத அந்த நேரத்தில், முதல்முறையாக சந்தித்தபோது, என்னிடத்தில், “நீ பத்திரிகைப் படிக்க வேண்டும். அதுவும் சாதாரணப் பத்திரிகை படித்தால் போதாது. உன்னை மனிதனாக்கக் கூடிய பத்திரிகை படி என்று சொல்லி ‘குடிஅரசு’ப் பத்திரிகையைத்தான் எனக்கு அறிமுகப்-படுத்தினார்.

1936ஆம் ஆண்டு, அய்யா அவர்களின் சீடனாகியுள்ள கலைவாணர் அவர்கள் எனக்கும் அந்த வழியைக் காட்டினார். நான் கலை உலகிலே நாடகத் துறையிலிருந்து சினிமாத் துறையிலே பிரவேசித்த நேரம். அந்த முதல் நேரத்திலேயே, நான் தெரிந்து கொண்ட, தெரிந்து கொள்ள வாய்ப்பு பெற்ற கருத்துக்கள் எவையென்றால் அய்யா அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான்.

ஆனால், அதனால் ஒரு விபரீதம் நிகழ்ந்தது. நான் அதைப் படித்த மூன்றாவது நாளே நான் என் அன்னையிடம் சண்டைக்கும் போய்விட்டேன். “ஏன் இந்த நாட்டில் விதவா விவாகங் கூடாது? ஏன் இந்த நாட்டிலே தீண்டாமை இருக்க வேண்டும்?’’ என்று சண்டைக்குப் போய்விட்டேன். என்னுடைய தாய் தீண்டாமையை அறவே எதிர்ப்பவர். அந்த வழியிலேயே அவர் வளர்ந்தவர்.

மனித உரிமை தேடித்தந்தவர் அய்யாவே

என் அன்னையை நான் கடவுளாக மதிப்பவன். ஆனால், முதன்முறையாக என் அன்னையை எதிர்த்தது அய்யா அவர்களின் பத்திரிகையைப் படித்துவிட்டுத்தான். இதைப்போன்ற பல்வேறு செயல்களை, கருத்துக்களை, மக்கள் மனதிலே பதியச் செய்து, இன்றைய தினம் தாழ்த்தப்பட்ட நிலையிலே உள்ள தமிழக மக்கள், திராவிட மக்கள், நானும் மனிதன்தான்; நானும் வாழத் தகுதி உள்ளவன்தான்; எனக்கும் வாழத் தகுதி இருக்கிறது; உரிமை இருக்கிறது என்பதைத் திறமையோடு, துணிவோடு, தைரியத்தோடு ஏன் அகம்பாவத்தோடு கூடச் சொல்லத் துணிந்த நிலையை அய்யா அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

 அரசியல் – சீர்திருத்தஇயல் இண்டும் படித்தறிந்தேன்

இன்னொரு பக்கத்திலே அரசியல், சமுதாய சீர்திருத்தம் படித்தேன். கலைவாணர் அவர்களின் அறிவுரைப்படி. ஆனால், செயல்பட எனக்கு நேரமில்லை; வாய்ப்புங் கிட்டவில்லை. நான் காங்கிரசிலே அங்கத்தினராக இருந்த-போதுகூட எனக்கு அந்த வாய்ப்புக் கிட்ட-வில்லை. நான் அதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தகுதியைப் பெற்றேனோ என்பதே சந்தேகத்திற்குரியது. ஆனால், வாய்ப்புக் கிட்டவேயில்லை.

ஆனால், பிறகு அறிஞர் அண்ணா அவர்களுடைய “பணத்தோட்டம்’’ என்ற புத்தகத்தை படித்தபிறகு கதர் வேண்டுமா? வேண்டாமா? விஞ்ஞானரீதியில் மக்கள் வாழ வேண்டுமென்று சொல்லுகிற நேரத்தில்கூட கதரை ஆதரித்து பிறகுதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கத்தினன் ஆனேன்.

எனக்கு கிடைத்த அறிவுரை

நான் பலமுறை அண்ணா அவர்களிடம் பேசியதுண்டு. அய்யா அவர்களைப் பற்றி அவர் சொல்லும்போதெல்லாம் ஒரே ஒரு எச்சரிக்கையை, நான் கவலைப்படும் நேரத்தில் சொல்வதுண்டு.

“நீ அய்யா அவர்களைப் பார். அவருடைய துணிவை நீ பெற வேண்டும். என்ன நினைக்கிறாயோ நீ அதைச்சொல். அதனால் வரும் துன்பங்களை ஏற்றுக்கொள்ள நீ தயாராகி விடு. நீ மனிதனாகி விடுவாய்’’
என்பதுதான் அறிஞர் அண்ணா எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடம்.

அந்த வகையிலே நான் செயல்படும்போது எனக்கு எதிர்ப்பு வந்தபோது எனக்குத் துன்பம் வரும்போது, தொல்லை வரும்போது நான் பலமுறை அய்யா அவர்களை நினைத்ததுண்டு. நான் அதை ஏற்பதிலே கூடத் தவறில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மேடையிலே கூற விரும்புகிறேன். காரணம் மனிதன் துணிந்து வாழ்ந்து தீரவேண்டிய காலமிது.

எதிர்ப்பில் வளர்ந்தது பெரியார் சமுதாய சீர்திருத்தம்

சமுதாயத்தில் இன்றைய தினம் சீர்திருத்தக் கொள்கைகளைப் பேசுவதற்கு மேடையிலே வருகின்றவர்களுக்கு மலர் மாலை கிடைக்கின்றது. ஒருவேளை பொன்னாடையும் கிடைக்கும். ஆனால், அய்யா அவர்கள் சொல்ல நேர்ந்த காலத்தில் என்ன துன்பங்களை ஏற்றிருக்கிறார்கள் என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும்;  புரிந்தவர்களுக்குப் புரியும், மறந்தவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

ஓர் உதாரணம் நான் இதே சென்னையில் ஒற்றைவாடைக் கொட்டகையில், 1943 என்று நினைக்கிறேன். ஒரு நாடகத்தில் சீர்திருத்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன். வேறு குற்றம் செய்யவில்லை. அந்தக் கதாநாயகன், பதிவுத் திருமணங்கூட அல்ல, சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். திருமண வாழ்க்கை ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும், அதுதான் நீதியே தவிர நியாயமே தவிர, மற்றபடி புரோகிதர் திருமணம் கூடாது என்று சொல்லுகிற கதாபாத்திரம். அதுவும் எங்கே சொல்லுகிறானென்றால் ஒரே ஒரு காட்சியிலே அதற்கு எனக்கு கிடைத்த அவமரி யாதைகள், தொல்லைகள் அநேகம். நான் அனுபவித்தேன் மேடையில்.

கலைஞர்களுக்கு மதிப்பு தேடித்தந்தவர் அய்யா

ஏ! கலைஞனே! நீயும் மக்கள் மத்தியில் ஒருவன்தான். மக்களுக்காகத் தொண்டு செய்யக் கடமைப்பட்ட ஒருவன்தான். மக்களுக்குச் சொல்லுகிற கருத்துக்களை நீ கடைப்பிடித்தாக வேண்டிய மனிதனாக இருக்க வேண்டியவன் என்பதையெல்லாம் எடுத்துக் காட்டி _ கூத்தாடிகள் என்று கேலி பேசிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் கலைஞர்களிடமிருந்து, பணத்தையும், உழைப்பையும், சூழ்நிலைக்கேற்ப வசதிகளையும் பெற்றுக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அந்தக் கலைஞனைக் கூத்தாடிகள் என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்திலெல்லாம் மக்கள் மத்தியிலே கொண்டு வந்து நிறுத்தி, “கலைஞனைப் பார்! அவனும் உங்களில் ஒரு மனிதன்தான்’’ என்று கலைஞர்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்தித் தந்தவர் அய்யா அவர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கலைவாணர் அவர்கள் சிறைப்பட்டபோது முதல் முறையாக அய்யா அவர்களுடைய பத்திரிகையில், “அய்யோ கிருஷ்ணா! உனக்கா 14 ஆண்டு கடின காவல் தண்டனை’’ என்ற தலைப்பிலே தலையங்கம் எழுதிய முதல் பத்திரிகையும், முடிவான பத்திரிகையும் அதுதான். கிரிமினல் கேசிலே தண்டனை அடைந்த ஒரு கைதியைப் பற்றித் துணிந்து அனுதாபத்தோடு மக்கள் மத்தியிலே சொல்லத் துணிவு பெற்றவர்கள் அய்யா ஒருவர்தான் என்றால் அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றுகின்ற அறிஞர் அண்ணா அவர்களின் வழியிலே இருக்கின்ற நாங்கள் அய்யா அவர்களைப் பாராட்டுவதைத் தவிர வேறு எந்த வேலையைச் செய்யப் போகிறேன்.

எங்களுக்கு சுயஉணர்வு ஊட்டியவரை நாங்கள்தான் பாராட்ட உரிமை உண்டு

எங்களுக்குத் தந்திருக்கிற சுயமரியாதை, எங்களுக்குத் தந்திருக்கிற சுயஉணர்வு எங்களுக்குத் தந்திருக்கிற பகுத்தறிவுக் கொள்கை, எங்களுக்குத் தந்திருக்கிற வாழும் வகையுரிமை இவைகளைத் தெரிந்து கொண்டிருக்கிற நாங்கள் எங்களை வாழவைக்க வேண்டுமென்பதற்காக இத்தனை ஆண்டுக்காலம் உழைத்து ஓடாகி என்று சொல்லும் அளவுக்குத் தன்னை வயதாக்கிக் கொண்டு இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்லவரை, பெரியவரை, அய்யா அவர்களை நாங்கள் பாராட்டித்தான் தீர வேண்டும். அதுவும் குறிப்பாக சொல்லுகிறேன். நாங்கள்-தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால், எங்களுக்குத்தான் உரிமை அதிகமாகக் கூடும். நண்பர் வீரமணி அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் உடனிருக்கிறோம்; அவர்களை பாராட்டுவதிலே எங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமிருக்கிறதென்று. உண்மை! ஆனால், எங்களுக்கு உரிமை இருக்கிறது.

எங்கிருந்தாலும் பாராட்டுவோம்

நாங்கள் தூரத்திலிருந்தாலும், எங்கிருந்தாலும் உரிமையோடு பாராட்டியே தீருவோம். நாங்கள், பாராட்டுவோர்களை வாழ்த்துவோம். பாராட்டாதவர்களை இழுத்து வந்து பாராட்டச் செய்வோம். எங்களை அழைக்கவில்லை. நாங்கள் வரவில்லை என்று சொல்வதோடு என் பேச்சை நிறுத்திக்கொள்ள நான் தயாராயில்லை. எனக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணத்தால் அய்யா அவர்களைப் பாராட்டும் நிலையை நான் பெறவில்லை; அவ்வளவுதான். இன்றைய தினம் அழைக்கப் பெற்றேன்; வந்தேன்; பாராட்டுகிறேன்; மகிழ்கிறேன்; பாராட்டுச் சொற்களைக் கேட்கிறேன்; பூரிப்படைகிறேன்; ஒருவேளை எனக்கு இன்னும் 25 வயது குறைந்து போய்விடுமோ என்று எதிர்பார்க்கிறேன்.

என் எதிர்கால உழைப்பு அய்யா அவர் களிடமே உள்ளது

காரணம் மனிதன் வாழத்தான் பிறந்திருக்கிறான் என்ற அய்யா அவர்கள், வாழத் தகுதியோடு வாழ அவனுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்ன அய்யா அவர்கள்; உன் மொழியைக் காத்து, நாட்டைக் காத்து, உன் பண்பைக் காத்து, உன் பகுத்தறிவுக் கெள்கையால் நாட்டை வாழ வை என்று சொன்ன அய்யா அவர்கள் இன்றைய தினம் இந்த அளவுக்குப் பாராட்டப்படுகின்றவர் என்றால் நாங்கள் எப்படிப் பெருமைப் படாமலிருக்க முடியும்? என்னுடைய கடமை எவ்வளவோ இருக்கிறது அய்யா அவர்களுக்கு! சூழ்நிலை எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்து என்னுடைய உழைப்பும், என் உண்மையான பகுத்தறிவுக் கொள்கையும் நிச்சயமாக அமையும், எதிர்காலம் அய்யா அவர்களிடத்தில்தான்; இப்போதே அய்யா அவர்களிடந்தான்.

பெரியார் கொள்கை வீரர்

நினைத்துப் பார்க்கிறோம். காங்கிரசில் அய்யா அவர்கள் இருந்தபொழுது காங்கிரசுக்காக என்னென்ன உழைத்தார். சொல்லலாம். இந்த காலத்தில் 5,000 கொடுப்பது, 15,000 கொடுப்பது, 20,000 கொடுப்பது ஒருவேளை சர்வ சாதாரணமாக இருக்கலாம், அல்லது கடமை என்ற பேரில் எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், அய்யா அவர்கள் பகுத்தறிவுக் கொள்கை தேவை என்று அவர் உணர்ந்த நேரத்தில் தன்னுடைய தோட்டத்திலே இருந்த தென்னை மரங்களை வெட்டியெறிந்தா ரென்றால் அந்த ஆர்வத்தை, கொள்கையை எப்படிப் போற்றாமலிருக்க முடியும். எந்த ஒரு மனிதனுக்கும் மற்றவர் வீட்டிலே இருந்தால் இடிக்கலாம் என்று சொல்வோமே தவிர, தன் வீட்டில் இடிபாடு ஏற்பட வேண்டும் என்று விரும்புபவன் யாருமே இருக்க முடியாது. வளர்த்த தென்னையை வெட்டுவது என்றால், அதுவும் கொள்கைக்காக, லட்சியத்திற்காக தன்னுடைய உள்ளத் திருப்திக்காக செய்கிறார் என்றால், செய்தார் என்றால், அப்படிப்பட்ட தலைவரை எப்படிப் பாராட்டாமலிருக்க முடியும். அவரிடம் எப்படி இந்த நாடு தன்னுடைய எதிர்காலத்தை ஒப்படைக்காம லிருக்க முடியும்? சிலர் சிலகாலம் இருக்கலாம்; ஒரு வேளை பலகாலமிருக்கலாம். ஆனால், நமக்கு எப்பொழுதுமிருக்க வேண்டியவர் சிலர் இருந்தே தீரவேண்டும். அவர்களிலே ஒருவர்தான் அய்யா அவர்கள். அவரும் நமக்குக் கிடைத்திருக்கிறார். அப்படிப்பட்டவர் வாழட்டும்; வாழட்டும் என்று கூறி எனது பாராட்டுரையை முடிக்கின்றேன்.

(21.11.1964  தந்தை பெரியாருக்கு
நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆற்றிய உரை
விடுதலை : 01.12.1964)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *