ஜாதி அளவுகோல் நிலையானது பொருளாதார அளவுகோல் நிலையற்றது

அக்டோபர் 16-31

நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரபல திரைப்பட பின்னணி இசை புகழ் கங்கை அமரன் குழுவினர் தந்தை பெரியார் அவர்கள் பற்றி இசைத்தேன் மழை பொழிந்து பொதுமக்களை மெய்மறக்கச் செய்தனர். கங்கை அமரனுக்குப் பொன்னாடை போர்த்தி, “இயல் இசைவாணர்’’ என்ற பட்டம் பொறிக்கப்பட்ட கேடயத்தையும் வழங்கி, தனது அரிய பாராட்டுதல்களை நான் அன்புடன் வழங்கினேன்.

அதனைத் தொடர்ந்து இலங்கை ‘பாப்’ இசை மன்னன் ரமேஷ் _ வைகுந்தநாதனின் பாப் இசை சிறப்பாக நடைபெற்றது.

“பெரியார் பெருந்தொண்டர்’’ என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்தது, தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது என்றாலும் முற்றுப் பெற முடியாத அளவுக்குப் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இயக்கத்தை நோக்கிச் சிறகடித்து வரும் புதிய வரவுகளை அடையாளங்காட்ட, இளைஞர் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்டத் திராவிடர் கழக மாணவரணித் தலைவர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்திட, மாநில மாணவரணிச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டினன் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றார். மண்டல மாணவரணிச் செயலாளர்கள் வழக்கறிஞர் எஸ்.இன்பலாதன், துரை.சந்திரசேகரன் பி.ஏ., மற்றும் ச.இராசசேகரன் எம்.எஸ்ஸி., ஞானசேகரன் எம்.ஏ., எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எம்.ஏ., பி.எட்., கோவிந்தசாமி எம்-.ஏ. ஆகியோர் உணர்ச்சிப் பெருக்கு உரை நிகழ்த்தினர்.

இறுதியாக “பணி முடிப்போம்’’ நிகழ்ச்சி துவங்கியது. விழாக்குழுத் தலைவர், கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா-.குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். என்னை நிகழ்ச்சிக்குத் தலைமையேற்குமாறு சென்னை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.பி.தெட்சிணாமூர்த்தி, செங்கற்-பட்டு மாவட்ட தி.க. தலைவர் சி.பி.இராச-மாணிக்கம், புதுக்கோட்டை மாவட்ட தி.க.தலைவர் அடைக்கலம், திருச்சி மாவட்ட தி.க. தலைவர் டி.டி.வீரப்பா, நெல்லை மாவட்ட தி.க. செயலாளர் டி.ஏ.தியாகராசன், கிழக்கு முகவை மாவட்ட தி.-க. தலைவர் வழக்கறிஞர் இரா.சண்முகநாதன், வ.ஆ. மாவட்ட தி.க.தலைவர் ஆம்பூர் ஏ.பெருமாள் ஆகியோர் உரையாற்றினர்.

அய்யா அவர்களின் அன்புக்குப் பாத்திர-மானவர்களும், அய்யாவின் புகைப்படக்-காரர்களாகத் திகழ்ந்து, அப்படிச் சொல்லிக்-கொள்வதில் பெருமை கொள்பவர்களுமாகிய எம்.குருசாமி, ஏ.சுந்தரம் ஆகியோர்க்கு நான் பொன்னாடை போர்த்திச் சிறப்பித்தேன். அதன் பின் முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாராயணசாமி உரையாற்றினார்.

புகைப்பட நிபுனர் ஏ.சுந்தரம்

தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது நிகழ்ச்சியில், தாலியைக் கழற்றி, நிதியாகத் தந்த சென்னை மாவட்ட மகளிர் அணித் துணை அமைப்பாளர் குஞ்சிதம்  நடராசனின் உருக்கமிகு பேச்சில், சுயமரி-யாதைக்கு இத்தாலி எதிராக இருப்பதாலும், தந்தை பெரியார் பெயரில் கல்லூரி அமைப்பதற்கு இந்தத் தாலி உதவுவதைவிட வேறு நல்ல காரியத்திற்கு உதவிட வாய்ப்பு இருக்காது என்று நாங்கள் உறுதியாகக் கருதுவதாலும்  என்னுடைய தாலியை தஞ்சைக்கு அருகில் உருவாக இருக்கும் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன் என்று கூறினார்கள்.

இதேபோன்று ஈரோடு மகாலட்சுமி அவர்களும், அவரது கணவரும் மேடைக்கு வந்தார்கள். “இந்த மூன்று நாள் நிகழ்ச்சி-களையும் நாங்கள் கவனித்துக் கொண்டிருந்-தோம்; தாலி என்ற இந்த அடிமைச் சின்னத்தை அறுத்து, பெண்கள் பாலிடெக்னிக்கிற்கு அன்பளிப்பாக வழங்குமாறு செய்து விட்டோம் என்று பலத்த கரவொலிக்கிடையே அறுத்து மேடையிலே வழங்கினார்கள்.

அதேபோன்று, சென்னையைச் சார்ந்த அமிர்தவல்லி குருசாமி தம்பதிகளும் தங்கள் தாலியை அகற்றும் அறிவிப்பை வெளி-யிட்டார்கள்.

பெரியார் பெரும் படையின் இந்த மவுனப் புரட்சியைக் கண்ட தஞ்சை வியப்பிலே ஆழ்ந்தது!

அடிமைச் சின்னங்களை புனிதங்களாக்கு-வதை எதிர்த்து _ அவைகளை புறக்கணித்து ஒதுக்கும் துணிவு, பெரியாரின் பெருங்-குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்?

இத்தகைய அமைதிப் புரட்சியை உள்ள உறுதியோடு மேற்கொள்ளும் சாதனை பெரியார் உருவாக்கிய இந்த தமிழ்நாட்டில் அல்லாமல், வேறு எந்த மாநிலத்தில் நடக்கும்? என்ற வியப்பு எல்லோர் முகத்திலும் தெரிந்தது.

விழாவில் சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும், ஒரே இயக்கம்தானே என்று எண்ணலாம்; தி.மு.கழகம் பெரியார் பெற்ற பிள்ளைதானே அந்தப் பிள்ளையை பெரியார் எதிர்க்கலாமா என்று தி.மு.கழகத்தில் உள்ள என்னைப் போன்றவர்கள் உள்ளம் எல்லாம் துடித்தது.

காங்கிரஸ் கட்சியிலே காமராசருடைய கரம் வலுப் பெறுமேயானால், அது தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்; பிற்படுத்தப்-பட்டவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற அந்த ரீதியில்தான் காமராசரை வளர்ப்பதற்காக _ காமராசரை வளர்ப்பதின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களை வளர்ப்-பதற்காக அன்றைக்கு பெரியார் காமராசரை ஆதரித்தார் என்றும்,

‘கறுஞ்சட்டைக்காரன் கட்டை விரலை வெட்டி விடுவேன்’ என்று காமராசர் பேசியதற்கு பதிலாக, காமராசரை கண்டித்து குத்தூசி குருசாமி அவர்கள் எழுதினார்.

கட்டை விரலையே வெட்டுவதாகச் சொன்ன, பெரியாரையும், பெரியார் இயக்கத் தொண்டர்களையும் சிறைச்சாலையிலே போட்டு வாட்டிய அந்தக் காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர் காமராசரை தந்தை பெரியார் அவர்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் வந்தது அரசியல் சூழலே என்றும்;

அரசியல் என்பது வானத்திலே வடி-வெடுக்கின்ற முகிலைப் போன்றது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு மேகக் கூட்டம் யானையைப் போல் தோன்றும்; கொஞ்ச நேரம் வேறு பக்கம் பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பிப் பார்த்தால், அதே மேகக் கூட்டம் குதிரையைப் போலத் தோன்றும்.

இப்படி மேகங்கள் வடிவெடுப்பதைப் போல் அரசியலும் பல வடிவங்களை எடுப்பதுண்டு, அது எனக்குத் தெரியாததல்ல என்று குறிப்பிட்டுப் பேசினார்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தேவையானபோது இரட்டைக் குழல் துப்பாக்கியாக வெடிக்கும் என்றார்.

இறுதியாக விழா நிறைவுப் பேருரையாக  நான் மத்திய கமிட்டித் தீர்மானங்களை விளக்கிப் பேசினேன்.

 பிற்படுத்தப்பட்டோரைப் படுகுழியில் வீழ்த்தும் தமிழக அரசின் புதிய பொருளாதார ஆணையை நவம்பர் 26இல் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று நான் கர்சித்தபொழுது இயக்க இளைஞர்கள் பந்தலின் முகப்பில் தீப்பந்தத்துடன் நின்று “கொளுத்துவோம்! கொளுத்துவோம்!’’ என்று சூளுரைத்த காட்சி இருக்கிறதே, இயக்க வரலாற்றில் மட்டுமல்ல _ இன வரலாற்றிலேயே கொழுந்து விட்டெரியும் கொள்கை மாட்சியாக அமைந்தது.

தந்தை பெரியார் அவர்களால், “நாதசுர இசைச் சக்கரவர்த்தி’’ என்று பாராட்டப்பெற்ற நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் குழுவினரது நாதசுர இசை தொடர்ந்து நடைபெற்றது. நாதசுர சக்கரவர்த்திக்குக் நான் பொன்னாடை போர்த்தி, அவரது குழுவினர்க்கு “விடுதலை’’ தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா மலரை அன்பளிப்பாக வழங்கி, பாராட்டுக்-களையும், நன்றியையும் தெரிவித்தேன். எத்தனையோ சரித்திரங்களைப் படைத்த தஞ்சை இம்முறை புதிய சாதனை சரித்திரத்தைப் படைத்துவிட்டது.

தந்தை பெரியார் அவர்கள் 60 ஆண்டு காலம் இந்த சமுதாயத்திலே இடைவிடாது பணியாற்றி தூங்கிக் கிடந்தவர்களை தட்டி எழுப்பி, முதுகெலும்பில்லாதவர்களுக்கு முதுகெலும்பைத் தந்து, மானமில்லாதவர்-களுக்கு மான உணர்வைத் தந்தவர்.

உலக சரித்திரத்திலே வேறு யாரும் செய்யாத வகையில் 95 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் நாடு முழுவதும் சுற்றினார்கள். பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றினார்கள். நம்முடைய சமுதாயத்திலே நீண்ட நெடுங்-காலமாக ஏற்படாத உணர்வுகளை எல்லாம் அய்யா அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள். அந்தத் தந்தைக்கு நூற்றாண்டு என்றால், அதனுடைய தனிச்சிறப்பு என்ன என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் கடந்த ஓராண்டை நாம் பயன்படுத்தியிருக்கிறோம்.

நீங்கள் செலுத்துகின்ற உழைப்பு, நீங்கள் காட்டுகின்ற பொறுமை கொட்டும் மழையாக இருந்தாலும் _ சுழன்றடிக்கும் சூறாவளியாக இருந்தாலும், செல்லுகின்ற பாதையிலே எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும், தூக்குமேடை ஏறித்தான், தந்தை பெரியார் லட்சியங்களை சொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டால் தூக்குமேடை ஏறுவதற்கும் தயங்காத தற்கொலைப் பட்டாளமே நாம்!

உங்களுக்கு தலை வணங்குவதற்குத்தான் இந்த விழா. இந்த பட்டாளம் வெறும் பகட்டுக்கு _ ஆடம்பரத்துக்கு _ சாகசத்துக்கு பலியாகின்ற பட்டாளம் அல்ல; அல்ல என்பதை தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவிலே நிரூபிக்கின்ற வகையிலேதான் அனைவரும் இங்கே வந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டேன்.

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு அனைத்து மாவட்டங்-களிலும் வெகு சிறப்பாக கொண்டாடிக் கொண்டு வந்தாலும், அவர் கொள்கைக்கு ஊறு, திரிபுவாதம் ஏற்படும்போது அதனை நாம் எதிர்த்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த வேதனையான சூழ்நிலையை அய்யா அவர்களின் நூற்றாண்டு முடியும் தருவாயில் 22.09.1979 அன்று ‘விடுதலை’யில் “நமது பாராட்டும் வேதனையும்!’’ என்ற தலைப்பில் நான் நீண்டதோர் தலையங்கம் தமிழக அரசின், குறிப்பாக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் போக்கைக் கண்டித்து எழுதினேன். அதன் முதன்மைப் பகுதிகளை இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

“நமது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழக அரசு ஓராண்டு காலமாக விழா எடுத்துச் சிறப்பித்துக் கொண்டாடியிருக்கிறது.

மத்திய மற்றும் வெளி மாநில அறிஞர் பெருமக்கள் பலரையும் அழைத்து நடத்தியிருக்கிறது.

தந்தை பெரியார் பெயரில் தனி மாவட்டம், கல்லூரிக்குப் பெயர், நூற்றாண்டு நினைவு மண்டபம், அறிவியல் கூடம், நினைவுத் தூண், பாலத்திற்குப் பெயர், ‘பெரியார் பொன்மொழி’ தடை நீக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையை “பெரியார் நெடுஞ்சாலை’’ எனப் பெயர் மாற்றம், பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் _ இப்படி பலப்பல அரிய செயல்களை எல்லாம் தமிழக அரசும் முதல்வரும் செய்துள்ளனர்.

இவ்வளவு அருஞ்செயல்கள் அரசு சார்பாக செய்யப்பட்டிருந்தாலும் முழு மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் பாராட்டும் நிலை இல்லை.

காரணம், பெரியாருக்கு விழா, அதுவும் அரசு சார்பில் விழா என்று கொண்டாடிடும் நிலையில் அவரது உயிர் மூச்சான வகுப்புவாரிக் கொள்கைக்கு மரண அடி தமிழக அரசால், குறிப்பாக தமிழக முதல்வரால் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதேயாகும்.

பெரியார் மாவட்டம் அமைத்துள்ளபோது _ முதல் தனி அதிகாரி _ இப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் யார்? _ ஒரு பார்ப்பனர்!

பரந்த இந்த தமிழக நிர்வாகத்தில் அந்தப் பொறுப்பை ஏற்க ஒரு தாழ்த்தப்பட்ட அய்.ஏ.எஸ். அல்லது பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ். எவரும் தமிழக அரசின் கண்களுக்குத் தென்படவில்லையா?

உயிரைப் பறித்தெடுக்க முயற்சித்துக் கொண்டே, உடலுக்கு அணிமணிகள் பூட்டி, அழகு சாதனங்கள் சூட்டுவது என்றால் அதனால் லாபம் என்ன?

எனவே, தந்தை பெரியார்தம் உயிர்க் கொள்கைகளான வகுப்புரிமை, இனநலன் இரண்டையும் இரண்டு கண்களாக, இதயமாக, மூளையாக மதிக்கும் லட்சோப லட்சம் பெரியார் தொண்டர்கள் கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட தமிழ்ப் பெருமக்கள் இவர்களது நல்லெண்ணத்தையும் மகிழ்ச்சியையும் இந்த நேரத்தில் சேர்த்து பெற, வீண்பிடிவாதம் காட்டாமல், வருமான வரம்பு ஆணையை ரத்து செய்து, ‘ஆரிய மாயை’யிலிருந்து விடுபட்டு வெளியே வாருங்கள்.

நாங்கள் சொல்வது இப்போது உங்களுக்கு கசப்பாகவும் எரிச்சலாகவும்கூட இருக்கலாம்.

இதன் விளைவு விரைவில், வெகுவிரைவில் கண்கூடாகத் தெரியும்.

பெரியார் என்றும் தோற்றதில்லை என்பது வரலாறு.

வேலூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் “தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அரசு பாலிடெக்னிக்’’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள மாவட்ட மத்திய நூலகத்திற்கு “தந்தை பெரியார் மத்திய நூலகம்’’ என்று பெயரிடப்-பட்டுள்ளது. அரசு உத்தரவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்-பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்-தக்கது. புதிய மாவட்டத்திற்கும் அதைத் துவங்கியிருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுதல்கள். வாழ்த்துக்களை தெரிவித்துக்-கொள்கிறோம்

கம்யூனல் ஜி.ஓ.வை ‘எக்னாமிக் ஜி.ஓ.’ பொருளாதார அடிப்படை ஆணையாக மாற்றிடும் பேராபத்தினைச் செய்த ஆணையும்,

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு தற்போதுள்ள தகுதி (வருமான வரம்பு உட்பட) காரணமாக அத்தகுதியுள்ள போதிய நபர்கள் உத்தியோகங்களுக்கு கிடைக்காமல் இருக்குமானால், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் ‘காலாவதி’ ((Lapse)) ஆகிவிடும் என்றும் அவ்வாணை 1977 முதலே அமுலுக்கு வந்ததாக கருதிக்கொள்ளும் ஒரு புதிய ஆணையும்.

பிற்படுத்தப்பட்ட சமூகம் பல ஆண்டு-களாகப் போராடிப்பெற்ற உரிமைகளை ஓர் நொடிப்பொழுதில் போக்கடித்துவிட்டது.

இதனைக் கண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கட்சி வேறுபாடு இன்றி, கருத்து வேறுபாடு இன்றி கொதித்து எழுந்துள்ளனர். அவர்களது உணர்வுகள் நீருபூத்த நெருப்பாக உள்ளது என்பதை முதலமைச்சரும் அவரது கட்சியான ஆளுங் கட்சியும் புரிந்துகொள்ளத் தவறினால் அதன் விளைவு என்னவென்பதை விரைவில் பட்டாங்கமாய் புரியவேச் செய்யும்.

வருமான வரம்பு ஆணையைத் தளர்த்தி, வருமான வரம்பு தற்போது ரூபாய் 9000 என்பதற்கு பதிலாக மேலும் கொஞ்சம் சில ஆயிரங்கள் கூட்டி உயர்த்தினால் இந்த எதிர்ப்பு முனை மழுங்கிவிடும் என்று முதல்வர் அவர்கள் தயவுசெய்து தப்புக்கணக்கு போடவேண்டாம்.

வருமான அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிப்பது என்பது கொள்கை ரீதியாக தவறான ஒரு அடிப்படையாகும். சமூகத்தில், கல்வியில்,  பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பதே அளவுகோல். (‘Socially and Educationaly Backward’)

கோவை மாவட்டத்தில் ‘ஜோகி’ என்ற குறவர் வகுப்பைச் சார்ந்தவர்கள் பலரிடம் 1000 பன்றிகள் இருக்கின்றன. அதன் காரணமாக அவர்கள் லட்சாதிபதிகள்தான்; ஆனால், சமூகத்தில், கல்வியில் அவர்கள் நிலை என்ன? உத்தியோகத்தில் அச்சமூகம் பெற்றுள்ள வாய்ப்பு எவ்வளவு? இந்த ஒன்றை அருள்கூர்ந்து அவர்கள் சிந்தித்தாலே மிகவும் தெளிவாக இப்பிரச்சினை _ பெரியார் _ அண்ணா வற்புறுத்திய ஜாதி அடிப்படை ஏன் என்பது புரியும்.

ஜாதி அளவுகோல் நிலையானது; பொருளாதார அளவுகோல் நிலையற்றது. நீண்டகால சமூகக் கொடுமைக்கு பரிகாரம் தேடிடும் நிலையான ஒன்றினை அடிப்-படையாக வைத்து அளப்பதுதான் முறையே தவிர, நிலையற்ற அளவுகோலைக் கொண்டு அளக்கவே கூடாது என்பதுதான் கம்யூனல் ஜி.ஓ.வின் அடிப்படை.

தாழ்த்தப்பட்டோர்க்கு வருமான வரம்பு கூடாது என்று எந்தக் காரணத்தால் தமிழக அரசு கருதுகிறதோ, அதே காரணத்தால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கும் வருமான வரம்பு கூடாது என்று நாம் வாதிடுகிறோம்.

தொழிலாளருக்கும் விவசாயிகளுக்கும் மற்றும் சமூகத்தின் பல பிரிவினர்களுக்கும் அவ்வப்போது வருமானம் கூடவும் குறையவும் கூடும். ஒவ்வொரு முறையும் இவ்வாணையை மாற்றிக் கொண்டே இருக்க முடியுமா? தேவையா அது?

“தமிழ்நாட்டில் அரசாங்கப் பணிகள், கல்வி ஸ்தாபனங்களுக்கு ஆகியவற்றில் உள்ள  பொது ஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகித இடங்களை முன்னேறிய வகுப்புகளைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தமது அரசு ஒதுக்க உறுதி கொண்டிருக்கிறது.’’ என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

ஏழைகள் எந்த ஜாதியினரானாலும் அவர்களுக்கு சலுகை என்று அரசு ஆணை வரவேண்டுமே தவிர, முன்னேறிய ஜாதியிலுள்ள ஏழைகளுக்கு மட்டும் என்று கூறுவது எப்படி நியாயமானதாகும்?

பொருளாதார அடிப்படையில் ஜாதியைப் போட்டு குழப்பி, ஜாதி அடிப்படையில் பொருளாதாரத்தை நுழையவிட்டுக் குழப்பும் குழப்பநிலை அல்லவா அது?

எனவே அதில்கூட தெளிவாக கர்நாடக அரசுபோல் செய்ய வேண்டும்.

தற்போதுள்ள தாழ்த்தப்பட்டோக்கு 18 சதவிகிதத்தில் எப்படி கைவைக்கவில்லையோ அதுபோலவே 31 சதவிகித பிற்படுத்தப்பட்ட சதவிகிதத்தில் கை வைக்காமல் பழைய நிலையில் விட்டுவிட்டு, எஞ்சிய 51 சதவிகிதத்தில் ஏழைகள், அவர்கள் எச்சாதியினரா-யினும் என்று கருதி வேண்டுமானால் இடஒதுக்கீடு செய்யட்டும். அதுதான் நியாயமாகவும் இருக்கும்.

தமிழக முதல்வர் அவர்கள் இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், இவ்வருமான வரம்பு ஆணையை விரைந்து திரும்பப்பெற்று விடுவதே நல்லது. இல்லையேல் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்துகொண்ட கதையாக அது ஆகிவிடும்.

எனவே, மீண்டும் மீண்டும் முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்; வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற வேண்டும். இது தமிழினத்தின், கோடானு-கோடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் உரிமைக்-குரல். இதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அலட்சியப்படுத்தாதீர்கள்! என்று வேண்டு-கோள் வைத்து தமிழக அரசை கேட்டுக்-கொண்டேன்.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *