தொழில் வளர்ச்சியிலும் பொருளா-தாரத்திலும் முன்னேற்றமடைந்த நாடுகளின் அரசு விடுமுறை நாட்கள் விவரத்தைப் பாருங்கள்.
1. வியட்நாம் 8
2. உருகுவே 5
3. டுனீசியா 6
4. சுவிட்சர்லாந்து 7
5. ஸ்வீடன் 9
6. சவுதி அரேபியா 9
7. நார்வே 2
8. மெக்ஸிகோ 7
9. இஸ்ரேல் 9
10. அயர்லாந்து 9
11. ஜெர்மனி 9
12. கியூபா 9
13. கனடா 6
14. பிரேசில் 8
15. சீனா 11 (இதில் அய்ந்து விடுமுறை மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு)
ஆனால், இந்தியாவில், மத்திய அரசின் விடுமுறை நாள்கள் _ 17
தமிழக அரசின் விடுமுறை நாள்கள் _ 21
அதிகமான நாள்களை – விடுமுறைகளாக அறிவிப் பதில் உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும் நிலை முற்றிலும் மாற்றப்படவேண்டும் என்று, ஆறாவது (மத்திய) சம்பளக் கமிஷன் தலைவர் ஜஸ்டிஸ் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அறிக்கை கொடுத்தார்.
பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன! மக்கள் வரிப்பணம் பொறுப்பற்ற முறையில் வீணே செலவாகிறது; நம் நாட்டுப் பொருளாதாரம் பல கோடி பாழாகிறது; உழைக்கும் மக்களை வீட்டில் உட்கார வைத்துச் சோம்பேறிகளாக்கவும், தவறான வழிகளில் குடி, சீட்டாட்டம், வெட்டிப் பேச்சு இவைகளுக்கே தான் அந்தத் தொடர் விடுமுறை பயன்படக்-கூடும் என்பது கண்கூடாக நாம் பார்த்த அனுபவக் காட்சிகளாகும்.
இடையில் வேலை நாள் என்றாலோ, வெள்ளிக் கிழமை ஒட்டியது என்றாலோ வாரம் முழுவதும் இணைந்து விடுமுறை எடுத்துச் சென்று விடுகின்றனர்.
எத்தனைக் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு!
நாளை (8.10.2016) இரண்டாம் சனிக்கிழமை, மறுநாள் ஞாயிறு வார விடுமுறை, 10ஆம் தேதி ஆயுத பூஜை, 11 ஆம் தேதி விஜயதசமி, 12 ஆம் தேதி மொகரம் என இப்படி தொடர்ச்சியான விடுமுறைகளில் 5 நாள்களுக்கு வங்கிகளும் மூடப்படும் என்றால், எத்தனைக் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு என்பதை மத்திய _- மாநில அரசுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
ஒரு மதத்தவரின் விழாவிற்காக மற்ற மதத்தவர்களும், மதத்தை ஏற்காதவர்களும் எதற்கு வீட்டில் உட்கார்ந்துகொண்டு பேன் குத்திக் கொண்டிருக்க வேண்டும்?
ஒரு சதவிகிதத்திற்காக 99 பேருக்கு விடுமுறை என்றால், அசல் கேலிக்கூத்து அல்லவா!
பழைய பூணூலை மாற்றி புதுப் பூணூல் போடும் ஆவணி அவிட்டம் 100-க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள பண்டிகை அதிலும் ஒன்றரை விழுக்காடு பெண்கள்; மற்ற அரை விழுக்காடு இளம் சிறுவர்கள் (பெரியவர்களான பின் அவர்களுக்குப் பூணூல் மாட்டுவது சம்பிரதாய சாஸ்திரம்.) கழித்துப் பார்த்தால், ஒரு சதவிகிதத்தினருக்காக 99 விகிதத்தினருக்கு விடுமுறை என்றால், அசல் கேலிக் கூத்து அல்லவா!
உலகிலேயே அதிகமான மத விடுமுறை நாள்கள் மதச்சார்பற்ற இந்த நாட்டில்தான் உள்ளன!
தீர்வு என்ன?
1. மதத்தினருக்காக விடுமுறை தேவை எனில், குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் அன்று விடுமுறை தந்துவிட்டு, மற்றவர்கள் பணி செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பித்தல்தானே அறிவுடைமை?
2. விருப்ப விடுமுறை (ளிஜீtவீஷீஸீணீறீ பிஷீறீவீபீணீஹ்s) என்பதை சேர்த்து வைத்து ஆண்டுக்கு மொத்தமாக விடுமுறை அந்தந்த மதத்தவர், மதமற்றவர்களுக்குத் தந்தால், அரசு இயந்திரம் நிற்காமல் ஓடும்; வங்கிகளை மூடவேண்டிய அவசியம் இருக்காது – பொருளாதார இழப்பும் ஏற்படாது!
3. ஆண்டுக்கு 3, 4, 5 நாள்கள்வரை விடுமுறை விடலாம்; அதுவும் தொடர்ச்சியாகக் கூடாது.
மத்திய – மாநில அரசுகளின் முக்கியமான கடமை
இப்படி தொடர் விடுமுறை, தொடர்ந்து வங்கிகளை மூடுவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடை; மக்களை சோம்-பேறியாக்கும் கொடுமை! அரசாங்கத்திற்கும், பொருள் உற்பத்திக்கும் மிகப்பெரிய இழப்பு!
எனவே, பொது விடுமுறைகளைக் குறைக்க வேண்டியது மத்திய – மாநில அரசுகளின் முக்கியமான கடமையாகும்!
ஆகவே, அரசு விடுமுறைகளை குறிப்பாக மத அடிப்படையில் விடும் விடுமுறைகளை ரத்து செய்து, குறிப்பிட்டவர்களுக்கு சில மணிநேரம் தாமதித்து வர அனுமதிக்கலாம்.
அரசுகள் இதுபற்றி நல்ல வண்ணம் பரிசீலித்து நல்ல முடிவினை உடனடியாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்தும், வேண்டுகோளுமாகும்.
கி.வீரமணி,
ஆசிரியர்