தந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் விழா பிழிவுகள்

அக்டோபர் 01-15

 

தொகுப்பு : கருத்தோவியன்

மதிப்பிற்குறிய மங்கை பானு

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு இன்னொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வலி தெரியும் என்பதால் திருநங்கைகள், திருநம்பியர்கள் ஆகியோரின் வலி எனக்குத் தெரியும் என்பதால் அந்தப்பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. அதனால், தந்தைபெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி இன்றுவரை செயலிலும் காட்டிக்-கொண்டிருக்கிறேன். அத்தகைய கொள்கை-களில் என்னைத் தூண்டிய கொள்கை எதுவென்றால் சமத்துவம்!

இந்தச் சமத்துவம் ஒடுக்கப்பட்ட சமூகமான திருநங்கையர், திருநம்பிகள் ஆகியோருக்கு இன்றுவரை கிடைக்கவில்லை. அதனால்தான் பெரியாரின் இன்றைய தேவை என்ற தலைப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்றிருக்கும் அரசு, -இந்திய வரைமுறை நம் அனைவருக்கும் தெரியும். பார்ப்பனிய ஆதிக்கம், பார்ப்பனிய சிந்தனையாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்புபவர்களை அடக்கி, அவர்களை அழிவு நிலையில் தள்ள நினைக்கிறார்கள்.

இன்றைய சூழலில் தந்தைபெரியாரின் கொள்கைகளை எடுத்துக் கொண்டு சமத்து-வத்திற்காகவும், பெண் அடிமைத்தனத்திற்கு எதிராகவும், ஜாதியொழிப்பிற்காகவும் தொடர்ந்து பாடுபடவேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் இ.க.இளம்பருதி

ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்தவன் நான். எனது பெற்றோர்களும் படித்தவர்கள் கிடையாது. இன்று நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருக்கிறேன் என்றால் அது தந்தை பெரியார் போட்ட பிச்சைதான்.

எல்லா சமூக அநீதிகளையும் எதிர்த்து போராடுவதுதான் சமூகநீதி! அதிலும் குறிப்பாக வாய்ப்பு மறுக்கப்பட்டவங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதுதான் ரொம்பவும் முக்கியமானது.  இன்றைக்கு உலகம் முழுவதும் அஃபெர்-மேட்டிவ் ஆக்சன் என்ற பெயரில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இதுக்காக பலவருடம் முன்னரே குரல்கொடுத்த பெருமை நம்ம பெரியார் அய்யாவையே சாரும்.

இப்ப இருக்கிற மத்திய அரசு, மிகவும் தந்திரமா நீட், நுழைவுத் தேர்வு தகுதி திறமை அப்பிடின்னு கொண்டுவந்து இந்த ரிசர்வேசனை ஒழிச்சிடப்பாக்குறாங்க.

ப்ளஸ்டூ மார்க் தேவையில்லேன்னா பன்னிரண்டாம் வகுப்பே தேவையில்லாம போகுதே! கொஸ்சின் பேப்பர் சிபிஎஸ்சி பேட்டனாம். அப்ப ஸ்டேட் போர்டுலே படிக்கறவங்க எல்லாம்? இங்கிலீஸ் அண்ட் இந்தியிலேதான் தேர்வு எழுதனுமாம். அப்ப மாநில மொழிகளின் நிலை? இப்படி எப்படிப்பார்த்தாலும் ‘நீட்’ ங்கறது மோசடியாதான் இருக்கு. மேலே இருக்கறவங்க மேலயே இருக்கனும். கீழே இருக்கறவங்க இன்னும் கீழேயே போகனும். மேடு மேடாகவே இருக்கனும், பள்ளம் பள்ளமாகவே இருக்கனும். அப்புறம் எப்படிங்க சமமாகும்?

பா. மணியம்மை

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய 95 வயதிலும் மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கொண்டு எந்த அளவுக்கு ஜாதியொழிப்புக்காக போராடினாரோ, அதே அளவுக்கு பெண்ணுரிமைக்காகவும் போராடினார்.

நம் நாட்டில் ஒரு வயது விதவைப்பெண்கூட இருந்திருக்கிறார்கள். தந்தைபெரியார் பால்ய விவாகத்தை கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் ராஜகோபாலாச்சாரியார் அதை ஆதரிக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், “இல்லையென்றால் பெண்கள் கற்போடு இருக்க முடியாது“ என்கிறார். பெரியார் இதை கடுமையாக எதிர்க்கிறார்.

அதேபோல சுயமரியாதைத் திருமணம். இது ஏதோ ஜாதியொழிப்பு, புரோகிதர் ஒழிப்பு, சடங்குகள் ஒழிப்பு என்பதுமட்டுமல்ல, பெண்ணுரிமைக்காகவும்தான். பெண்களின் சுயமரியாதைக்காகவும்தான். பெண்களின் இழிவைப் போக்கவும்தான்.

பெரியார் இல்லையன்றால் பெண்களுக்கு விடுதலை இல்லை! தன்மானமில்லை! சுயமரியாதை இல்லை!

திருக்குறள் த. திலீபன்

இந்த சமூகம் என் மீது திணித்த ஜாதிக்குண்டான தொழிலைச் செய்திருக்க வேண்டிய நான், அறிவார்ந்த சான்றோர்கள் அவையில் பேசக்காரணமான, நான் கல்வி கற்கக் காரணமான என் பேரன்பிற்கினிய அந்த ஈரோட்டுக் கிழவனையும், அறிவர் அம்பேத்கரையும் முதற்கண் வணங்குகின்றேன்.

சமீபகாலமாக மதத்தின் பேரால் மாட்டுக்கறியை மய்யமாக வைத்து ஒரு பெரிய அவலம் நடந்துகொண்டு வருகிறது. நான் என்ன உணவு உண்பது, என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்வது என்று முடிவு செய்யவேண்டியது நான்தான்.

இந்து மதத்தில் வர்ணதர்மம் இன்றைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் எத்தனை காலம்தான் பெரியார் தேவை தேவை என்று சொல்வது. இங்கிருக்கும் ஒவ்வொரு-வருமே பெரியாராக மாறவேண்டும்.

(தலைவர்களின் சிறப்புரை அடுத்த இதழில்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *