நூல் : திரிகள் மட்டுமே எரிகின்றன
ஆசிரியர் : கவிஞர் மு.தமிழ்க்கனல்
வெளியீடு : காலம் வெளியீடு,
25, மருதுபாண்டியர் 4 ஆவது தெரு,
கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி, மதுரை – 625 002.
பக்கங்கள் : 80 விலை : ரூ.60/-
தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் கவிதையின் தலைப்பையே நூலின் பெயராக வைத்துள்ளார் நூலாசிரியர். நாக-ரிகம் என்ற பெயரில் குளிர்பானங்கள் அருந்துவோர், துரித உணவுகளுக்கு அடிமையாக இருப்போர், இந்தியா ஒளிர்கிறது என பொய்யாய் ஓலமிடுவோரிடமிருந்து விடியல் தேவை என்கிறார்.
தந்தை பெரியாரின் கருத்துகளை – சாதனைகளை செறிவாகச் சொல்லியுள்ள விதம் அருமை! பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலும், நாம் இன்னும் என்னென்ன சுதந்திரங்களைப் பெற வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
தாயின் பெருமைகளைப் புகழ்ந்து கூறிவிட்டு உறவு என்ற கவிதையில், தாய்ப்பாலைக்கூட / திரும்பக் கேட்கிறாள் தாய் / என்ற வரிகள் தடுமாற வைத்துள்ளவை. அடிபடலில் அழுகிப்போக / சதைகளல்ல, விதைகள் நாங்கள் / என்ற வரிகள் வீறுகொள்ள வைப்பன. படிப்போர் மனதில் ஜாதி, மூடநம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நெருப்பாய் எரியத் தூண்டி சிந்திக்க வைத்திருப்பதே திரிகள் மட்டுமே எரிகின்றன.
நூல் : நானிலம்
ஆசிரியர் : கவிஞர் மா. மதிமாறன்
வெளியீடு : தமிழிசை பதிப்பகம்,
ப.எண். 10, பு.எண்.2, 2ஆவது தளம், முதல் குறுக்குத் தெரு,
யுனைடெட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை – 24
பக்கங்கள்: 296 விலை: ரூ.100/-
பகுத்தறிவு, பல்சுவை, இசைப்பாடல்கள், சமூகம் என்ற பிரிவுகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு நிலங்களாக்கியுள்ளார் நூலாசிரியர்.
புரட்சிக் கனலெனத் தெறிக்கும் பகுத்தறிவுக் கவிதைகள் ஒவ்வொன்றும், படிப்போர் அனைவரின் சிந்தனையைத் தட்டி எழுப்புபவை. இயற்கையைப் போற்றி, உலகம் தோன்றிய விதத்தை விளக்கி, உலகம் பயன்பெற உன்னதக் கருத்துகளைக் கூறியுள்ள பாங்கு போற்றற்குரியது.
ஜாதி தோன்றிய வரலாற்றைக்கூறி, ஜாதிப் பெயர்களைப் பெயருக்குப் பின்னால் போடுவோரின் செயலினைக் கடிந்துள்ளமையும், சிலைகளை வணங்குவோரைச் சாடியுள்ளமையும், படிப்போரைக் கிளர்ந்தெழச் செய்பவை.
குமுறும் எரிமலையாக நிமிர்ந்து நிற்கும் குறிஞ்சி குழந்தைகளுக்கான நூலாக வெளியிடும் சிறப்பினைத் தாங்கி நிற்கிறது.
இயற்கை அழகினை , தாயின் பெருமைகளை, 2 குழந்தைகள் போதும் என்ற மனநிலையை விவரித்து பல்சுவைத் தேனமுதாக முல்லை மணம் வீசுகிறது. இசைப்பாடல்களாகத் தவழ்ந்திருப்பவை படிக்கின்ற இளைஞர்களின் மனதில் இன்பக் கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுமோ என்ற நிலையில் மருதம். மனித சமூகத்தின் இன்றைய நிலைகளை, கடமைகளை, முன்னிறுத்திக் காட்டுவதே நெய்தல்.
- செல்வா