செய்யக் கூடாதவை

அக்டோபர் 01-15

 

 

 

கேட்போரின் இயல்புக்கும், தகுதிக்கும் மாறாகப் பேசக்கூடாது

கேட்போரின் உளநிலைக்கு ஏற்பப் பேச வேண்டும். சுருக்கமாகவும், மெதுவாகவும், தெளிவாகவும் பேச வேண்டும் என்று விரும்புவோரிடம் அதற்கேற்பப் பேச வேண்டும்.
படித்தவர்களிடம் பேச வேண்டியதை அடிமட்ட ஊழியர்களிடம் பேசக்கூடாது. அறிஞர்களிடம் பேச வேண்டியதை அடிமட்ட ஊழியர்களிடம் பேசக்கூடாது. தமிழில் பேசத் தெரிந்தவர்கள், தமிழர்களிடமே ஆங்கிலத்தில் பேசுவது தப்பு.

கோபப்படுகின்ற இயல்புடையவர்களிடம் மென்மையாக அமைதியாகச் சிரித்துக் கொண்டு பேச வேண்டும்.

கடுமையாகப் பேச வேண்டிய நேரத்தில் மனம் நோகாது கடுமை காட்ட வேண்டும்.

தேர்வுக்குச் செல்லுமுன் ஒருமுறை திருப்பிப் பார்க்கத் தவறக்கூடாது

தேர்வுக்குச் செல்லுகின்ற மாணவர்கள், தாங்கள் அன்றைய தேர்விற்கு அதுவரை படித்தவற்றை, தேர்விற்கு 1 மணி நேரத்திற்கு முன் ஒரு தனியிடத்தில், அமைதியாக உள்ள இடத்தில் அமர்ந்து, மனதிற்குள், புத்தகத்தைப் பார்க்காமல் சொல்லிப் பார்க்க வேண்டும். குறிப்பாக விடைகளின் தலைப்புகளை நினைவுக்குக் கொண்டு வந்து, எல்லாவற்றையும் ஒருமுறை நினைவுபடுத்தியபின் புத்தகத்தை மூடிவிட்டு, 10 நிமிடங்கள் படிப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக இயற்கைக் காட்சி-களைப் பார்த்தல், கழிவறைக்குச் செல்லுதல், எழுதுப் பொருள்களைச் சரி பார்த்தல் போன்றவற்றைச் செய்துவிட்டுத் தேர்வறைக்குச் செல்ல வேண்டும். வினாத் தாளை வாங்கி முழுமையாகப் படித்து விட்டு, தேர்வு செய்த வினாக்களுக்கு விடை எழுதினால் சற்று முன் நினைவுபடுத்தியவை மறக்காமல் நினைவுக்கு வரும்.

தேர்விற்குப் படிக்கின்றவர்கள் மிகையான உணவும், குறைவான உணவும் உண்ணக் கூடாது

சில மாணவர்கள் தேர்வு காலத்தில் சரியாகச் சாப்பிடுவதில்லை. இது தப்பு. தேர்வு எழுவது இதனால் பாதிக்கும். தேர்வு நேரத்தில் அளவான, சுத்தமான சத்தான, மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும் உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

மிக அதிகமான உணவும், தயிர், பொங்கல், அதிக எண்ணெய் கலந்த உணவுகளையும் தவிர்த்து, பழம், காய்கறி, இட்டிலி, இடியப்பம், வெண்டைக்காய், அவரை, முருங்கை, வல்லாரை போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.

பட்டினியாகத் தேர்வுக்குச் செல்லக்கூடாது. வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டும் செல்லக்-கூடாது. அளவான, சத்தான, சுத்தமான உணவே தேர்வுக்கு உகந்தது. தேர்வுக் காலத்தில் நல்ல தூக்கமும், உடல்நலமும் கட்டாயம் தேவை.

நோயாளியிடம் பாதிப்பைப் பற்றிப் பேசக்கூடாது

நோயுற்றவர்களிடம் தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளையே பேச வேண்டும். நோயின் கடுமை, பாதிப்பு, பிறர் பாதிப்பு, பிறர் பாதிக்கப்-பட்ட நிகழ்வுகள் இவற்றைக் கூறக் கூடாது. பிறர் குணமானதை, நலமாக இருப்பதைச் சொல்லலாம்; சொல்லவும் வேண்டும்.

நோயாளிக்கு உள்ளத்தில் ஏற்படும் நம்பிக்கைக்கு பாதி நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும், நோய் தாங்கும் வல்லமையையும் அது அதிகரிக்கும். எனவே, நோயாளியைச் சந்திக்கும் எவரும் நோயாளிக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சுருக்கமாகச் சொல்லி விடைபெற வேண்டும். நோயாளியிடம் அதிக நேரம் பேசக்கூடாது. ஓய்வு தேவையென்று மருத்துவர் சொல்லி இருந்தால், அவரைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற ஒத்துழைப்புகள் நோயாளிக்குக் கட்டாயம் தேவை.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *