“விவசாயிகளின் ஒப்புதலுடன் கெயில், மீத்தேன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படும்” என்று அறிவித்திருக்கிறார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆற்றில் தண்ணீர் இல்லை, வயலில் பயிர் இல்லை; விவசாயிகள் கையில் இப்போது நிலம் மட்டும்தான் இருக்கிறது. மீத்தேன், ஸேல், கெயில் என வேறுவேறு பெயர்களில் வந்து அந்த நிலங்களையும் பறித்து விவசாயிகளை அன்றாடங் காட்சிகளாக ஆக்கத் திட்ட-மிடுகிறது மத்திய அரசு.
¨ முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்போவதாக மிரட்டும் கேரளா
¨ தாமிரபரணி நீரை பங்குபோடத் துடிக்கும் குளிர்பான ஆலை
¨ காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடகா
¨ விவசாயிகள் நிலங்களைப் பறிக்கத் துடிக்கும் மத்திய அரசு
¨ பாலாற்றில் தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா
¨ பொட்டிகுளம் நியூட்ரினோ திட்டம், மேகதாட்டு புதிய அணை
என ஒன்று ஓய்ந்தால் இன்னொன்று எனப் பிரச்சினைகளை விவசாயிகளுக்கு எதிராய் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மீத்தேன் திட்டமும் கெயில் திட்டமும் இப்போது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளன.
இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதி நல்லசாமி, “கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் வேண்டாம் என்று நாங்கள் சொல்ல-வில்லை. கேரளா, கர்நாடகாவில் அமைக்கப்-பட்டுள்ளதைப் போல நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்கலாம் என்றுதான் சொல்கிறோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். கேரளா, கர்நாடகாவுக்கு ஒரு நீதி; தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்பது என்ன நியாயம்?’’ என்றார்.
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்,
“மீத்தேன் வாயு என்பது நிலக்கரி பாறையிலும் அதற்குக் கீழே இருக்கக் கூடிய வண்டல் மண் பாறையிலும் (ஸேல்) இருக்கும். காவிரிப் பாசனப் பகுதிகளில் தரையிலிருந்து 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை நிலக்கரி உள்ளது. அதற்கு அடியில் வண்டல் மண் பாறைகள் உள்ளன. ஆக, 2000 அடி ஆழத்திற்குக் குழாய் பதித்தால்தான் நிலக்கரி மீத்தேன் கிடைக்கும். இன்னும் ஆழமாகப் பத்தாயிரம் அடிவரை குழாய் பதித்து மீத்தேன் எடுத்தால் ஸேல் மீத்தேன் கிடைக்கும்.
மீத்தேன் எடுப்பதற்கு நீரியல் விரிசல் என்னும் ஒருமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஒவ்வொரு குழாய்க்கும் பலகோடி லிட்டர் தண்ணீரும் பல நூறு டன் மணலும் 634 வகையான ரசாயனங்களும் பயன்-படுத்தப்படும். இவை குழாய் வழியாக புமிக்குள் செலுத்தப்பட்டு, செயற்கை பூகம்பம் போலவெடித்துச் சிதற வைத்து, அதிலிருந்தே மீத்தேன் வாயுவை பிரித்து எடுப்பார்கள். அப்போது வெளிவரும் கழிவு நீரை பக்கத்தில் உள்ள நிலங்களிலும் வாய்க்கால்களிலும், ஆறுகளிலும்தான் விடுவார்கள். இதனால் ரசாயனங்களும் வேதிப் பொருள்களும் நீர், நிலம், காற்று என அனைத்திலும் கலந்து சுற்றுச்சூழல் சிதைந்து காவிரிப் படுகையே பாலைவனமாகும்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘நிலக்கரி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை உள்ளூர் மக்களின் ஒப்புதலுடன் நடைமுறைப்-படுத்துவோம்; பலத்தைப் பிரயோகிக்க மாட்டோம். இது சம்பந்தமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நஷ்டஈடு, மறுவாழ்வு குறித்து பேச விரும்புகிறோம். சமூகத்தின் ஒப்புதல் என்பது ஜனநாயகத்திற்கு அவசியம்’.
“2013ஆம் ஆண்டு ஸேல் மீத்தேன் கேஸ் எடுப்பதற்காக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. அந்த நிறுவனம் பயன்படாமல் கிடந்த நிலங்களைக் கையகப்படுத்தி மூவாயிரம் அடி ஆழம் குழய்களை புதைக்கத் தொடங்கியது. அதற்கு முன்பு 2012ஆம் ஆண்டிலேயே கோனகோபிலிப் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தும், யூ.எஸ்.ஜியாலஜிகல் சர்வே என்ற நிறுவனம் மூலமாகவும் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்பது தொடர்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இவைகள் எல்லாம் பற்றி விவசாயிகளுக்கோ மக்களுக்கோ தமிழக அரசுக்கோ எந்தத் தகவலையும் தெரிவிக்க-வில்லை.
காவிரிப் படுகையில் எரிபொருள் எடுக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் முப்பது விழுக்காடு பங்கு குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் உள்ளது. பெங்கால் எனர்ஜி, பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்ற தனியார் நிறுவனங்களுக்கும் அதில் கணிசமான பங்குள்ளது. இப்படி நமது வளத்தை அபகரிக்கப் பல தனியார் நிறுவனங்கள் சதித் திட்டம் தீட்டி செயல்படுகின்றன.
ஓ.என்.ஜி.சி. குழாய்கள் பதித்துள்ள கிராமங்களில் அதனால் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் சர்வ சாதாரணம். சில உதாரணங்களைச் சொல்கிறேன். திருவாரூர் மாவட்டத்தில் கள்ளிக்குடி, அடியக்காமங்கலம் போன்ற பகுதிகளில் இப்போது 100க்கு 10 பேர் புற்று-நோயால்தான் இறக்கின்றனர். அதாவது குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலப்பதாலும் குழாய்கள் துருப்பிடித்து உருவாகும் கசிவு. நீரில் கலப்பதாலும், அதனைப் பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, தோல்நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோல் இந்த குழாய்கள் பதிக்கப்பட்ட கிராமங்களிலுள்ள வீடுகளிலும் கோவில்களிலும் விரிசல் ஏற்படுகிறது.
காவிரிப் பாசனப் பகுதிகளில் தொழிற்-சாலைகளே இல்லை. ஆனால், சமீப காலத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் நிலத்தடி நீரில் ரசாயனத் தன்மை அதிகரித்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதற்குக் காரணம் ஓ.என்.ஜி.சி. தான்’’ என்றார்.
இழப்புகளும் பாதிப்புகளும்:
திருவாரூர் மாவட்டத்திலுள்ள உச்சி மேட்டில் 2009இல் ஓ.என்.ஜி.சி.யின் குழாய்களில் பெரும் சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. அதில் சிக்கி ஆனந்தராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சேதுபதி என்பவர் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆணி தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவரும் சேதுபதிக்கு அந்த விபத்து நடந்தபோது, அவர் உடல் எங்கும் தீ பரவியது. அதனை அணைப்பற்காக அருகில் இருந்த குளத்தில் விழுந்தார். மெல்ல மேலே வந்து அவர் பார்த்தபோது, தண்ணீரெல்லாம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதன்பின்னர் என்னென்னமோ சிகிச்சை எல்லாம் செய்தார்கள். ஆனால், எதுவும் சரியாகவில்லை.’’
காவிரி பாயும் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பல மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் இன்றும் காவிரிதான் தண்ணீர் கொடுக்கிறது. தமிழகத்தின் உணவுத் தேவையில் 60 விழுக்காட்டினை ஒரு காலத்தில் காவிரிப் படுகையே கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது அது 34 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இன்னும் குறைந்து உணவுக்கு மற்றவர்களை எதிர்பார்க்கும் நிலை வராமல் தடுக்க காவிரிப் படுகையைக் காப்பாற்ற வேண்டியது கட்டாயம்.
காவிரிப் படுகை வேளாண்மை மூன்று போகம் என்பது இரண்டு போகம் ஆனது; பிறகு அது ஒரு போகம் ஆனது. இனி ஒரு போகத்திற்கும் தண்ணீர் கிடைக்காது போல இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகள் நிலங்களை கிடைத்த விலைக்கு விற்றுவிடுவார்கள். அப்போது மீத்தேன், ஸேல் மீத்தேன் போன்ற நாசகர திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என மத்திய அரசு திட்டமிட்டே செயல்படுவதாய்த் தெரிகிறது.
பறவைகள் சரணாலயம், வனவிலங்குகள் சரணாலயம் போன்ற இடங்களில் வேட்டையாட கடுமையான தடைகள் உள்ளது-போல, காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் இங்கு எந்த எண்ணெய்யும் எரிவாயுவும் எடுக்க முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு செய்தால்தான் காவிரிப்படுகையின் பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்படும். காவிரிப் பாசனப் பகுதியும் வளம்கொழித்து தமிழகத்திற்கும் வளம் சேர்க்கும்.