இரத்த அழுத்தம் அறிய வேண்டிய செய்திகள்

அக்டோபர் 01-15
இன்று வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் இரத்த அழுத்தம் இளம் வயதினரைக்கூட பாதிக்கும் அவலம் வளர்ந்து வருகிறது.
 
இரத்த அழுத்தம் என்பது என்ன?
 
இதயத்திலிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக உடல் உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்பப்படும். இந்த இரத்த ஓட்டம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்-போது வேறு ஒரு வேகத்திலும் செல்லும். இப்படிச் செல்லக்கூடிய இந்த வேகத்துக்குப் பெயர்தான், இரத்த அழுத்தம். (Blood pressure).
 
பொதுவாக, இரத்த அழுத்தத்தை 120/80 mm Hg என்ற அளவில் குறிப்பிடும்போது, இதில், 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தத்தை (Systolic Pressure) குறிக்கும். இது, இதயம் சுருங்கி இரத்தத்தை வெளியில் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தத்தை (Diastolic pressure) குறிக்கும். இது, இதயம் தன்னிடம் இருந்த இரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உள்ளே வருகின்ற இரத்தத்தைப் பெற்றுக்-கொள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம்.
இயல்பான அழுத்தம்
 
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை மற்றும் நரம்பு மண்டலம் உள்ளிட்டவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தொடர் சங்கிலி அமைப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இது சிலருக்கு தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கக் கூடும். ஒரு நபருக்கு 100/70 mm Hg முதல் 140/90 mm Hg வரை உள்ள இரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. 140/90 mm Hg க்கு மேல் அதிகரித்தால் அது உயர் இரத்த அழுத்தம் (ஹை பிரஷர் _ High Pressure
 
90/60 mm Hg க்கு குறைவாக இருந்தால் அது குறைந்த இரத்த அழுத்தம் (லோ பிரஷர் _ Low Pressure).
 
உயர் இரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்…
 
¨ மரபு
¨ உடல் பருமன்
¨ உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை
¨ உணவில் அதிக உப்பு சேர்ப்பது
¨ சிறுநீரகம், இதயம் சார்ந்த பாதிப்புகள்
¨ சர்க்கரை வியாதி
¨ பிறவி இரத்தக்குழாய் பாதிப்பு
¨ புகை, மதுப்பழக்கம்
¨ மன அழுத்தம்
¨ உறக்கமின்மை, ஓய்வின்மை
¨ வலி, ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உட்கொள்வது.
 
குறைந்த இரத்த அழுத்தத்துக்கான காரணங்கள்…
 
¨ இரத்தசோகை
¨ வாந்தி, பேதி போன்றவற்றால் உடலில் நீர் வற்றிப்போவது
¨ அதிகநேரம் வெயிலில் இருப்பது உள்ளிட்டவை.
 
உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய உணவுப் பரிந்துரை..!
 
¨ உயர் இரத்த அழுத்த நோய்க்கு முதல் காரணம், உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளும் சோடியம் குளோரைடு உப்பு, உப்பு நிறைந்த ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கண்டம், சிப்ஸ், வடாம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும்.
 
¨ நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை குறைந்த அளவிலும், சுழற்சி முறையிலும் பயன்படுத்தலாம்.
 
¨ காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, க்ரீன் டீ குடிக்கும்போது இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
 
¨ ஆவியில் வேகவைத்த உணவுகள் மிகவும் நல்லவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் கோழி அல்லது மீன் சாப்பிடலாம்.
 
¨ நார்ச்சத்து உணவுகள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பு, உடல் எடையைக் குறைத்து, நீரிழிவையும் கட்டுப்படுத்தும்.
 
குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்ய உணவுப் பரிந்துரை…!
 
¨ கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சத்துமாவுக் கங்சிகள், அரிசி கஞ்சி.
 
¨ சோயா, பேரீச்சை, கீரைகள்.
 
¨ எண்ணெய் சேர்க்காத உணவுப் பண்டங்கள், மீன் உணவுகள்.
 
அறிகுறிகள் என்னென்ன?
 
¨ தலைசுற்றல்
¨ தலைவலி
¨ மயக்கம்
¨ வாந்தி
¨ மூக்கில் இரத்தக்கசிவு
¨ கண் பார்வை மங்குவது
¨ மூச்சுத் திணறல்
¨ கால் வீக்கம்
¨ நெஞ்சு வலி
¨ களைப்பு
¨ படபடப்பு
 
குறிப்பு: சிலருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. திடீரென மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என நேர்ந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால்தான் இதனை ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer) என்கிறார்கள். எனவே, இரத்த அழுத்தத்துக்கு தொடர் பரிசோதனைகளும், சிகிச்சையும் மிகவும் முக்கியம்.
சோதனை முறைகள்
 
1. இரத்தப் பரிசோதனை: இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு, கொலஸ்ட்ரால், சர்க்கரை, தைராய்டு உள்ளிட்டவற்றைக் கண்டறியலாம்
 
2. அட்ரினல் ஹார்மோன் சோதனை: 30 வயதுக்குக் குறைவானவர்களுக்கும், 50 வயதுக்கு அதிகமானவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில், பாரா தைராய்டு ஹார்மோனின் அளவைக் கண்டறியலாம்.
 
3. சிறுநீர் பரிசோதனை: சிறுநீரில் புரதம் வெளியேறுகிறதா என்பதைக் கண்டறியலாம்.
 
4. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் டெஸ்ட்: சிறுநீரகத்தின் அளவு, அதில் புண், கட்டிகள் ஏதேனும் உள்ளதா போன்றவற்றைக் கண்டறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *