அன்னை மணியம்மையாரின் தாய்மை உணர்ச்சி மக்கள் கண்களை அருவிகளாக்கியது!

அக்டோபர் 01-15

 வெளியூர் பயணம் புறப்பட வேண்டி-யிருந்ததால் பசவலிங்கப்பா தனது உரையை உடனே துவக்க வேண்டியிருந்தது. உணர்ச்சிமிக்க அந்த ஆங்கில உரையை திருப்பூர் இறையனார் தமிழில் மொழி-பெயர்த்தார். பசவலிங்கப்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே தவத்திரு குன்றக்குடி அடிகளார் மேடைக்கு வந்துவிட்டார்.

“தொண்டுக் கனியின் தொடர்பணி’’ என்ற கருத்தரங்கிற்கு தனது கருத்தாழமிக்க தலைமை உரையை ஆற்றினார்.

இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில், குவைத் செல்லபெருமாள் அவர்கள் வழங்கிய பொன்னாடையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், கூடியிருந்த ஆயிரமாயிரம் கழகக் குடும்பங்களின் உணர்ச்சி ஆரவாரங்-களுக்கிடையே,

“தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு இந்த இயக்கத்தின் தளபதியாக இருந்து வழிநடத்திச் செல்லும் பொதுச்செயலாளர் வீரமணி அவர்களின் சீரிய தொண்டைப் பாராட்டி இந்த ஆடையைப் போர்த்தி வாழ்த்துகிறேன்’’ என்றார்.

அடுத்து செல்லபெருமாள் அளித்த தங்கமெடலை,  “இதுபோன்ற ஆபரணங்களை நமது அருமைப் பொதுச்செயலாளர் அவர்கள் அணிவதை விரும்பமாட்டார் என்றாலும், நம்முடைய பேரன்பான வேண்டுகோளுக்காக இதை சிறிது நேரம் அணிந்திருப்பார்’’ என்று கூறி பலத்த கரவொலிக்கிடையே அணிவித்தார்.

தங்கமெடலையும் பொன்னாடையையும் பெற்றுக்கொண்டு உணர்ச்சி தழுதழுக்க,  அப்போது, “நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு உங்கள் முன் நிற்கிறேன். அடிகளார் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆற்றிய உரை நம் எல்லோருடைய உள்ளத்தையும் ஆழமாக தொட்டுவிட்டிருக்கிறது. அந்த உரையைக் கேட்டு உங்களைப் போல் நானும் பாதிப்புக்-குள்ளாகி இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்’’ என்றேன்.

இதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் அவர்களுக்கு வேன் வழங்கும் விழாவை நாம் நடத்தியபோது, தஞ்சை தோழர்கள் இதுபோன்று மோதிரத்தை தந்தை பெரியாரிடம் அளித்து எனக்கு அணிவிக்கச் செய்தார்கள். அப்போதுகூட கழகத் தோழர்கள், “அய்யா, நீங்கள் போட்ட மோதிரத்தை வீரமணி கழற்றி விட்டாரய்யா’’ என்று  சொல்லியபோது, “அவர் எப்போதுமே அப்படித்தான்’’ என்று அய்யா சொன்னார்கள். அந்த நிகழ்ச்சிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.

எனது திருமணத்தின்போதுகூட, நானும் எனது துணைவியாரும் மாற்றிக்கொண்ட மோதிரத்தைக்கூட தேவை இல்லை என்று அப்புறப்படுத்தி விட்டோம்.

‘நான் தந்தை பெரியாரின் அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருந்துவிட்டவன்.’ என் நெஞ்சத்திலே என்றென்றும் அய்யா அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.
“சபலத்திற்கு ஆளாகாதே’ என்று என்னை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.’’  வழக்கம்போல் இந்த தங்க மெடலையும், நான் துவங்க இருக்கும் மகளிர் பாலிடெக்னிக்கிற்கு வழங்க என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இந்த மெடலுக்கு நடுவே இருக்கும் அய்யாவின் உருவம் பதிக்கப்பட்ட கல்லை மட்டும், இதன் நினைவாக எனக்கு வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனக்கென்று தனித் தகுதி எதுவும் கிடையாது. இதோ இங்கே பல்லாயிரக்-கணக்கில் அமர்ந்திருக்கும் நமது கழக குடும்பத்தின் சக்திதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உறுதிமிக்க கொள்கைக் குடும்பம் இருக்கும்வரை நமக்கு வேறு எந்த தகுதியும் சக்தியும் தேவையில்லை. எனது இறுதி மூச்சின் கடைசி காற்று அடங்கும்வரை பெரியார் தொண்டனாக _ பெரியாரின் அடிமையாக என்றென்றும் உழைப்பேன்; உழைப்பேன் என்று கூறி அமைகிறேன்’’ என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் என்.ஜி.ஓ. சங்க தலைவர் சிவ.இளங்கோ உரையைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத் தலைவர் முருகு.சீனிவாசன் அவர்கள் தங்களுடைய சங்கத்தின் சார்பிலும், சங்கத் தலைவர் விக்டர் அவர்களின் சார்பிலும் நினைவுப் பரிசு ஒன்றை அடிகளாரிடம் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பித்த குவைத் செல்லபெருமாள் அவர்கள், “மண்ணுக்கும் அப்பால் மனித ஒருமைப்-பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த மானிடத் தலைவரின் சிறப்பை இங்கு பார்க்கிறோம். எல்லாமும் எல்லார்க்கும் என்ற தத்துவம் கண்ட தளநாயகரின் சிறப்பு காண தொலை தூரத்திலிருந்து வந்துள்ளார்கள். பல்வேறு தொல்லைகளுக்கு அப்பால் இங்கே வந்துள்ளார்கள். அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் செலவழித்து இங்கு வந்துள்ளார்கள். இலட்சத்தால் மதிப்பு பெற விரும்புகிறவர்கள் அல்ல; இலட்சியத்தால் மதிப்பு பெற விரும்புகிறவர்கள்’’ என்று உரையாற்றினார்.

அத்தகைய சூழ்நிலையை மாற்ற நீண்ட நாட்களாக 30, 35 ஆண்டுகாலமாக அய்யா வழியில் இந்தக் கொள்கையை பரப்பி வருகிறார்கள். அவர்களுடைய தொண்டிற்கு பாராட்டாக நம்மாலான சிறப்பு விருதினை வழங்கி பெருமைப்படுத்த விரும்புகிறோம். பாராட்டிற்குரிய அத்தனைபேரும் இங்கு இல்லை என்றாலும், அங்குள்ளவர்களும் சேர்த்து இங்கு வந்துள்ளவர்கள் விருதினைப் பெற்றுச் சென்று கொடுக்க வேண்டி அழைக்கிறேன்’’ என்று தெரிவித்து விருதுகளை வழங்கினார்கள்.

விருது பெற்றவர்கள்

1.    திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி
2.    சிங்கை டி.நாகரெத்தினம்
3.    குவைத் செல்லபெருமாள்
4.    மலேசிய தி.க. துணைபொதுச் செயலாளர் க.பாலசுப்ரமண்யம்
5.    மலேசிய தி.க. இளைஞர் பிரிவு தலைவர் சி.தருமலிங்கம்.
6.    இலங்கைத் தோழர் பாண்டியன்
7.    மலேசியா தி.க. இளைஞர் பிரிவு செயலாளர் கா.கோபால்
8.    மலேசியா தி.க. ‘கெடா’ மாநில செயலாளர் இரா.ப.தங்கமணி
9.    மலேசியா கல்விக்குழு உறுப்பினர் தீனதயாளன்
10.    மலேசியத் தோழர் மனோகரன்
11.    இலங்கைத் தோழர் முத்துக்கிருட்டினன்
12.    இலங்கைத் தோழர் தேகதயாபரன்
    வராத தோழர்களுக்கு சிங்கப்பூர் திருச்சுடர் இராமசாமி அவர்களிடமும், சிங்கை நாகரெத்தினம் அவர்களிடமும் கொடுத்து அங்குபோய் கொடுத்துவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அடுத்து தமிழ்நாடு ஜனதா (எஸ். கட்சித் தலைவர் டாக்டர் சந்தோஷம் உரையாற்றினார்கள்.)

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரம்மபிரகாஷ், அகில இந்திய பிற்படுத்தப்-பட்டோர் குழு உறுப்பினர் சுப்ரமணியம், மராட்டிய மாநிலத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர் சந்திரமோகன் வாக், ஆந்திராவி-லிருந்து வந்திருந்த கோரா அவர்களின் மகன் விஜயம், ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் ஜவாலாமுகி ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு இறுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளரும் ஜனசக்தி ஆசிரியருமான தா.பாண்டியன் சுமார் இரண்டரை மணி நேரம் உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். அப்போது, தந்தை பெரியாரின் 60 ஆண்டு தொண்டு நல்ல முத்துக்களை தமிழகத்துக்கு ஈன்று தந்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும்! நீங்கள் பிள்ளைகளை எந்த முறையில் வளர்க்கிறீர்களோ, அந்த முறையில்தான் சமுதாயத்தின் வளர்ச்சியும் இருக்கும்.

அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள்  பெண்கள் விடுதலைக்கு பாடுபட்டார். சீர்திருத்த திருமண முறையைக் கொண்டு வந்தார் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார்.

இன்றைக்கு இந்தியாவில், தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சட்டம் கிடையாது. தமிழ்நாட்டை பொருத்தவரை சமூக மாற்றங்களுக்கு முதலிடம் _ பழைய பத்தாம் பசலித்தனங்களுக்கு இரண்டாவது இடம்தான் என்ற அளவில், மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகம் இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு பெரியார் தொண்டுக்குக் கிடைத்த வெற்றி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.

அரசு கட்டிலில் இருப்பவர்கள்கூட, பெரியார் விழாவை நடத்தாமல் நாடாள முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது என்று குறிப்பிட்டார்கள்.

 

பிற்படுத்தப்பட்ட கமிஷன் உறுப்பினர் கே.சுப்ரமணியம் அவர்கள் தன் உரையில்,

அன்றைக்கு இருந்த தமிழகத்தையும் இன்றைக்குள்ள தமிழகத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். பெரியாரின் பெரும் சாதனையை உணர்கிறேன் என்று பெருமிதமுடன் கூறினார்.

தொடர்ந்து திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் ஓரங்க நாடகம் நடந்தது. தந்தை பெரியார் எழுதிய “வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்’’ என்ற நாடகத்தை சிறப்பாக நடத்தினர். அதைத் தொடர்ந்து பேராசிரியர் அறிவரசு, மதுரை தமிழரசன் ஆகியோர் பங்கேற்ற பகுத்தறிவுக் காலட்சேப நிகழ்ச்சி! தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

அய்யாவின் நூற்றாண்டு நிறைவு காணும் அன்று, அய்யா சிலைக்கும், அண்ணா சிலைக்கும் நான் மலர் மாலைகள் சூட்டினேன். தஞ்சை இடுகாட்டிற்குச் சென்று, கழக மாவீரர்கள் அஞ்சாநெஞ்சன் அழகிரி, பரிபூரணத்தம்மாள், இலட்சுமி அம்மையார், கோ.ஆளவந்தார் ஆகியோரின் கல்லறைகளுக்கு நான் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினோம். பின்பு தொழிலாளர் அரங்கம் திராவிடர் கழக விவசாய _ தொழிலாளர் பிரிவு செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நாகை _ திருவாரூர் வட்ட திராவிடர் கழக _ திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர், நாகை எஸ்.கணேசன் வரவேற்புரை ஆற்ற, திருச்சி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் லால்குடி முத்துச்செழியன் பி.ஏ., சிறப்புரை ஆற்றினார்.

ஆசிரியர் பகுத்தறிவு அணி தொடக்க விழா “Fort” (Forum of Rationalists’ Teachers)”  தொடர்ந்து நடைபெற்றது. புள்ளம்பாடி ஆரோக்கியசாமி பி.ஏ., பி.டி., பிறகு அன்பரசன் வழிமொழிய, நான் அமைப்பைத் துவக்கி வைத்தேன்.

தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு ‘விடுதலை’ மலரை சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத் தலைவர் முருகு சீனிவாசன் வெளியிட்டார். முதல் மலரை கழகப் பொருளாளர் கா.மாகுப்புசாமி ரூ.101 அளித்துப் பெற்றுக்கொண்டார். மலேசியா, சிங்கப்பூர் தோழர்கள் அதிக விலை கொடுத்து மலரைப் பெற்றுக்கொண்டனர்.

பட்டிமன்றம் துவங்கியது. தஞ்சை மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் துரை.சக்கரவர்த்தி பி.எஸ்சி. வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தித் தந்தார். பட்டி-மன்றத்தின் தலைப்பு _ ‘தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது கடவுள் ஒழிப்பா?, ஜாதி ஒழிப்பா?, பெண்ணடிமை ஒழிப்பா?’ என்பதாகும்.

கடவுள் ஒழிப்பே! என்ற அணியின் தலைவராக கழகப் பிரச்சார செயலாளர் என்.செல்வேந்திரனும், அவரது அணியில்-பேராசிரியர் பழமலை, நாஞ்சில் சி.எம்.-பெருமாள் ஆகியோரும், ஜாதி ஒழிப்பு அணியின் தலைவராக திருப்பூர் அ.இறையனும், அவரது அணியில் பட்டுக்கோட்டை இரெ.இளவரி, புலவர் சுபாஷ்சந்திரன் ஆகியோரும், பெண்ணடிமை ஒழிப்பே என்ற அணியில் மதுரை யாதவர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனும், அவரது அணியில் பேராசிரியர் நெடுஞ்செழியன், மாணவர் தோழர் கவுதமன் ஆகியோரும் பங்கு கொண்டு மிகச் சிறப்பாக வாதிட்டனர். நடுவர் தனது தீர்ப்பில் தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சியது “கடவுள் ஒழிப்பே!’’ என்று தீர்ப்பு வழங்கினார்.

திருச்சி பெரியார் மாளிகையில் சிறு குழந்தை முதலாக வளர்ந்த ஹேமலாவுக்கும், மணமகன் ஆறுமுகத்திற்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா மேடையில் நடைபெற்றது.

நெஞ்சுருக்கும் நிகழ்ச்சியாக அத்திருமணம் நடைபெற்றது. அன்னை மணியம்மையார் அவர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்து, அவரவர்களுக்கென்று ஒரு தனிப் பையில் துணிமணிகள், நகைகள், வைத்து அதைத் தன் கையாலேயே குறிப்பு எழுதி வைத்திருந்ததை, நான் எடுத்துப் படித்துக் காட்டியபொழுது, கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் கண்களும் நீர்வீழ்ச்சிகளாயின.

நாகரசம்பட்டி திருமதி என்.வி.விசாலாட்சி அம்மையார் அவர்களின் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நான் நிறைவேற்றி வைத்தேன்.

(நினைவுகள் நீளும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *