மெனோபாஸ் தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா?
மெனோபாஸ் என்பதைப் பல பெண்கள் தாம்பத்தியத்துக்கான முற்றுப்புள்ளி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இது குழந்தைப் பிறப்புக்கான முற்றுப்புள்ளி தானே தவிர, தாம்பத்திய உறவுக்கல்ல. மெனோபாஸக்குப் பிறகு முன்பைவிடவும் அதிகமாக தாம்பத்திய சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களும் உண்டு.
மெனோபாஸ் காலத்தில் சில அசவுகரியங்கள்தான் தாம்பத்ய உறவின் மீது ஆர்வமின்மை அல்லது வெறுப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, பெண்ணுறுப்பு வறண்டு போவதால் தாம்பத்தியத்தின்போது திடீரென்று வலி ஏற்படும். இதனால் எழும் அச்ச உணர்வு, உறவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இதற்கு மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெறுவதில் தவறில்லை.
இக்காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை உடல் வலி, மூட்டு வலி போன்ற வலிகள். மனதில் ஆர்வம் இருந்தாலும், வலிக ளால் உடலில் ஆர்வம் இருக்காது. உடலை வலுவாக்கும் உணவுகளும், உடற்பயிற்சிகளும் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கலாம். இப்பிரச்சினைகள் இயல்பானவை என்று நீங்கள் புரிந்துகொண்டு, உங்கள் துணைவரும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கையில் இனிமையான தாம்பத்யத்தை நீங்கள் தொடர முடியும். மேற்கண்ட எல்லா பிரச்சினைகளுக்கும் மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. ஆகவே, கவலை வேண்டாம்.