ஒடுக்கப்பட்ட மக்களின் உள் ஒடுங்கிய ஆற்றலின் அடையாளம் ஒலிம்பிக் மாரியப்பன்!

அக்டோபர் 01-15

 – சிகரம்

ஆதிக்கச் சாதியால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, வறுமையில் வாழும் நிலையிலும் உலக அளவில் தன் சாதனையை நிகழ்த்தி, வாய்ப்பு கிடைத்தால் ஒடுக்கப்பட்-டோர் உயர்ஜாதியினரைவிட பல மடங்கு சாதிப்பர் என்பதை உணர்த்தி, தகுதி, திறமை பேசுவோரின் தகிடு தத்தங்களைத் தகர்த்-தெறிந்துள்ளார்.

அது மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகள் திறன் குன்றியவர்கள் அல்லர்; அவர்களால் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதையும் செயல் மூலம் காட்டியுள்ளார்.

அதிகாலை 3:30 மணிக்கு பெரியவடகம்பட்டி கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் அந்த இளைஞனுக்காக தொலைக்காட்சி பெட்டி-களுக்கு முன் கூடியிருந்தனர். ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவின் இறுதிச்சுற்று. மாரியப்பன் ஒவ்வொரு முறை எம்பிக் குதிக்கும்போதும் கிராமமே கிளர்ந்தெழுந்து குதித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளும், மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளும் கிளர்ந்-தெழுந்தன, எழுச்சி பெற்றன.

ஒன்பதாவது இடத்தில் இருந்து, அடுத்தடுத்த முயற்சிகளில் தாவிக் குதித்து அதிகாலை 4:30 மணிக்கு முதல் இடத்தை அவர் பிடித்தபோது, பெரியவடகம்பட்டி மகிழ்ச்சியில்அதிர்ந்தது. உணர்ச்சியில் துள்ளியது. அந்த அதிகாலையில் ஓர் உலக சாதனையாளன் சூரியனைப் புறந்தள்ளி உதித்தெழுந்தான்.

மாரியப்பன் தங்கவேலு, சேலம் டேனிஷ்-பேட்டையை அடுத்த பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர். ரியோவில் வழக்கமான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் தொடங்கும் மாற்றுத் திறனாளி-களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளார்.

கடந்த ‘பாரா ஒலிம்பிக்’கில் பதக்கத்தை தவறவிட்டபோது, அடுத்தமுறை தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் சொன்ன வார்த்தைகளை 1.89 மீட்டர் தாண்டி உண்மையாக்கி இருக்கிறார்.

எந்தவித வசதியும் இல்லாத சூழலில், தன் முயற்சியால் பயிற்சிசெய்து, இந்த இமாலய இலக்கை எட்டியிருக்கிறார் மாரியப்பன். உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரம் பாய்ந்து, தங்கம் வென்று, தமிழ்நாட்டையே தலைநிமிரச் செய்திருக்கிறார்; இந்தியாவைப் பெருமைப்பட வைத்திருக்கிறார்.

மாரியப்பனுக்கு அய்ந்து வயது இருக்கும்-போதுதான் அவருக்கு விபத்து நடந்தது. சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அந்தப் பக்கமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டான். அதில் வலது கால் நசுங்கி முழுமையாகச் செயல் இழந்து-போனது.

பள்ளியில் படிக்கும்போதே மாரியப்பனுக்கு விளையாட்டில் ஆர்வம். உடல் குறைபாட்டால் எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலை. பள்ளியில் மற்ற மாணவர்கள் எல்லோரும் உயரம் தாண்டுதலிலும், நீளம் தாண்டுதலிலும் சாதித்துக் காட்டுவதை, தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் மாரியப்பனின் பொழுதுபோக்கு. எல்லோரும் பயிற்சி முடித்துச் சென்ற பிறகு, யாருமே இல்லாத நேரத்தில்தான் மாரியப்பன் பயிற்சியைத் தொடங்குவார்.

தன்னந்தனியாக தன்னுடைய குறைகளை மறந்து, தவ்வித் தவ்வி ஒடியும் தாவியும் தாண்டியும் பயிற்சி செய்வார். கீழே விழுந்து கைகளில் சிராய்ப்புகளும் ரத்தமுமாக வீட்டுக்குப் போவார். வறுமையில் சிக்கிக் கிடந்தது மாரியப்பனின் குடும்பம். நான்கு பையன்கள் இருக்கும் பெரிய குடும்பம். கைக்குழந்தைகளாக இருந்தபோதே அப்பாவை இழந்தனர். ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் தன் ஒற்றை வருமானத்தில் காப்பாற்றினார் மாரியப்பனின் அம்மா சரோஜா.

“கணவர் இல்லாம நடுத்தெருவுல நின்னோம். இரக்கப்பட்ட சிலர், எனக்கு 100-க்கும், 200க்கும் வாடகைக்கு வீடு கொடுத்தாங்க. இப்பக்கூட 500 ரூபா வாடகை வீட்டில்தான் இருக்கோம்.
நான் காட்டு வேலைக்கும், கொத்து வேலைக்கும், செங்கல் சூளைக்கும் போய், குழந்தைகளுக்கு ஒரு வேளைக் கஞ்சித் தண்ணி கொடுத்துக் காப்பாத்துவேன். குழந்தைகளுக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கிற அளவுக்கு வசதி இல்லை. இன்னைக்கும் ரேஷன் அரிசிதான் சாப்பிடுறோம். அதைச் சாப்பிட்டுதான் மாரியப்பன் பயிற்சி பண்ணிக்கிட்டிருந்தான் என்றார்.
பள்ளியில் தன்னந்தனியாகப் பயிற்சியில் ஈடுபட்டு ரத்தக்காயத்துடன் வரும் மகனைப் பார்த்ததும் சரோஜா பதறிப் போவார். மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்துப்போக வசதி இல்லை. எல்லா காயங்களுக்கும் மஞ்சள்தான் மருந்து. எப்போதாவது மருந்து மாத்திரை.

தன்னந்தனியாகப் பயிற்சி பெறும் மாரியப்பனை ஒருநாள் தற்செயலாகக் கவனித்தார் அந்தக் கிராமத்து அரசுப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் ராஜேந்திரன். மாரியப்பனை அழைத்து, ‘எங்கே… தாண்டிக் காட்டு!’ எனச் சொல்ல, சாதாரண பையன்-களைவிட அதிகமான உயரம் தாண்டி பிரமிக்க வைத்தார் மாரியப்பன். பள்ளிக்குள் ஒரு சாம்பியன் இருப்பதை கண்டுபிடித்துவிட்ட ராஜேந்திரன் அவனுக்குத் தினம் பயிற்சியளித்தார்.

“போட்டிகளுக்கும் அவனை அழைத்துச் சென்றேன். சேலம் மாவட்ட அளவில் நடைபெற்ற ஜூனியர், சப்_ஜூனியர், சீனியர் என எல்லா பிரிவுகளிலும் மாரியப்பன் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதல் பரிசு பெற்றான்.

2014ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கமும், 2015ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப் பதக்கமும் வாங்கினான்’’ என்று உணர்வு பொங்கக் கூறினார் ஆசிரியர் ராஜேந்திரன்.

சில நாள்களுக்கு முன்பு வரை தெரியாத மாரியப்பனை, ஆறு மாதங்களுக்கு முன்னரே தேடிக் கண்டுபிடித்து ஒலிம்பிக் வரை அழைத்துச் சென்றவர் கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சியாளர் சத்தியநாராயணன்.

“முறையான பயிற்சியாளர் இல்லை, விளையாட மைதானம் இல்லை, சரியான பிசியோதெரபிஸ்ட் இல்லை, ஷூ இல்லை, சாக்ஸ் இல்லை என ஆயிரம் சாக்குப் போக்குகளைச் சொல்லி, வெறுங்கையோடு திரும்பும் நம் விளையாட்டு வீரர்களின் மத்தியில், ‘ஒரு கால்கூட தேவை இல்லை. இலக்கை எட்டுகிற ஊக்கம் போதும்’ என்று வெற்றிக்-கொடி நாட்டி இருக்கிறார் மாரியப்பன்’’ என்று ஏடுகள் பாராட்டின.

மாரியப்பனின் சாதனைக்குப் பரிசாக தமிழக அரசு 2 கோடி ரூபாயும்; மத்திய அரசு ரூ.75 லட்சம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளன. மஹிந்திரா நிறுவனம் ஒரு காருடன் 10 லட்சம் ரூபாய் பரிசும் அறிவித்திருக்கிறது. தனக்குக் கிடைத்த பரிசத் தொகையில் 30 லட்சம் ரூபாயை படித்த பள்ளிக்கு அளிப்பதாக அறிவித்திருக்கிறார் மாரியப்பன்.

ஒடுக்கப்பட்டோர் உள்ளம் உயர்ந்த உள்ளம் என்பதை உலகுக்கு ஓங்கிச் சொல்வதாய் இது அமைந்தது. வாழ்க மாரியப்பனின் சாதனையும், கொடை உள்ளமும்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *