கே : ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தப் பெண்ணை ஓடஓட நடுச் சாலையில் வெட்டிக் கொல்லும் கொடுமை தமிழகத்தைத் தாண்டி டில்லியிலும் பரவிவிட்ட நிலையில், இதற்குக் கடுமையான தீர்வு என்ன?
– சீ.லட்சுமிபதி, சென்னை-45
ப : பாலியல் கல்வியின் மூலம் இளைய தலைமுறையைப் பக்குவப்படுத்தல், கடுமையான தண்டனை _ இவை இரண்டும் தேவை.
கே : அறிவியல், வரலாறு கற்றவர்கள்கூட கடவுள் நம்பிக்கையில் தங்களை ஏமாற்றிக்கொண்டு செயல்படக் காரணம் என்ன?
– நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப : அறிவு வேறு, படிப்பு வேறு என்ற தந்தை பெரியார் கருத்தே இதற்கான விடை.
கே : தண்ணீரே ஓடாத காவிரியில் பிள்ளையார் சிலையை போட்டு உடைப்பது நாத்திகமா? ஆத்திகமா?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்.
ப : ஆத்திகம் என்ற போதையில் விளைந்த நாத்திகம் என்றே சொல்லலாம்!
கே : மழைக்காக வருணஜபம் செய்த மவுடீகப் பார்ப்பனக் கூட்டம், மழை பெய்திருந்தால் ஜபப் பலன் என்றிருப்பர். ஆனால், மழை பெய்யவில்லையே? தங்கள் கருத்து?
– கி.கண்ணம்மா, வியாசர்பாடி
ப : மழையை நிறுத்த வெள்ளத்தைத் தடுக்க என்ன ஜெபம் என்று கேட்டுப் பாருங்கள் அவர்களிடம்.
கே : உச்சநீதிமன்ற உத்தரவை மறுக்கும் கர்நாடக அரசை, தண்ணீர் திறக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்?
– சு.வெற்றிமணி, வேலூர்-2.
ப : மத்திய அரசின் அரசியல் சட்ட செயற்பாட்டின் மூலம் செய்ய வைக்கலாம். அரசியல் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு ஆட்சியில் அவர்கள் தொடரலாமா?
கே : திராவிடனான மாவலிச் சக்கரவர்த்-தியைச் சிறப்பிக்கும் ஓணம் பண்டிகையை “வாமன ஜெயந்தியாக’’ மாற்றிய ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு கேரள மக்கள் கொடுத்த அடி உறங்கும் தமிழர்க்கு உணர்ச்சியூட்டுமா?
– ந.கலைவேந்தன், குற்றாலம்.
ப : தமிழனைத் தவிர, மற்றவர்களுக்-கெல்லாம் மொழி உணர்வு, கலாச்சார உணர்வு, இன உணர்வு நிறைய உள்ளதே!
கே : தந்தை பெரியார் தரணியெங்கும் பின்பற்றப்படுவது வளர்ந்து வருவது எதைக் காட்டுகிறது?
– கு.செந்தமிழன், சீர்காழி.
ப : பெரியார் வாழுகிறார்; பெரியார் தத்துவம் பரவலாக எங்கும் வேர் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது!
கே : பெரியாரின் பல்துறைச் சார்ந்த சிந்தனைகளை துறைவாரியாகப் பிழிவு செய்து 100 பக்கத்தில் நூல் வெளியிட்டு இளைஞர்களைத் தெளிவுபெறச் செய்வீர்களா?
– மா.தனபாக்கியம், காஞ்சி.
ப : தங்களது அரிய யோசனைக்கு நன்றி. நிறைவேற்றிவிட (100 பக்க நூல்) முயற்சிக்கிறேன். டிசம்பர் 24இல் எதிர்பார்க்கலாம்!
கே : பெரியார் பிறந்த நாள் செய்தியை தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற நாளேடுகள் அறவே புறக்கணிப்பது எதனால்?
– சி.முருகன், கும்பகோணம்.
ப : டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு சொந்தக் கட்டுரை (தோழர் ஒளிவண்ணன் எழுதி) வெளியிட்டது. வைத்தியநாதய்-யருக்குத்தான் ஒவ்வாமை போலும்! ஸீ