பகத்சிங் போன்ற நாத்திகப் புரட்சியாளர்கள் நாடு முழுக்க வேண்டும்!

அக்டோபர் 01-15

– தந்தை பெரியார்

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டதவர்கள் யாருமே இல்லை.  அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களைவும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.

இவை ஒரு புறம் நடக்க, இதே கூட்டத்-தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜபிரதிநிதி திரு.இர்வின் பிரபுவை பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு.காந்தியவர்களைப் புகழ்வதும் பகத்சிங்கை தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்-திருப்பதோடு அல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்-கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.  இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள்  திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படியாக தேசமகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவதும் திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தி அவர்களை ஒரு பெரிய மகான் என்றும் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் வெள்ளைக்காரர் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன.

ஆனால், இப்போது வெகுசீக்கிரத்தில் அதே மக்களால் காந்தியம் வீழ்க, காங்கிரஸ் அழிக, காந்தி ஒழிக என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன.
பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம்.  ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம்.  அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.

உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து-கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்-பாக அவர் நடந்து கொண்ட படியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லு வதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஓர் உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும்.  ஏனெனில் நாமறிந்தவரை திரு. பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க் கண்ட வாக்கியம் காணப்-படுகிறது.

அதாவது,

பொது உடைமைகட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுதானிருக்கும்; எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது, அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்து-தான் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடைவர் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றோம்.  ஆகவே இந்தக் கொள்கையானது எந்தச் சட்டத்தின்படியும் குற்றமாக்கக் கூடியது அல்லவென்றும் ஆவதா-யிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டிய-தில்லை-யென்றும் சொல்லுவோம்.  ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின்றோம்.  அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனி மனிதனிட-மாவது, தனி வகுப்பினிடமாவது தனி தேசத்தானிடமாவது துவேஷம் இல்லாமலும், எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும், துன்பம் உண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்-படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்-கின்றோம்.  ஆதலால் நாம் எதற்கும் கவலைப்-படவோ. பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம். இன்னும் விளக்க-மாகச் சொல்ல வேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியிருக் கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதிலும் அடங்கி-யிருகின்றது.

தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதான் ஆக வேண்டுமோ.  அதுபோலவே-தான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாய் இருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும்.  ஆகவே இந்த தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை, பொது உடைமைத் தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்த கொள்கைகள் தான் திரு. பகத்சிங் போன்றவர்-களின் கொள்கைகள். ஆதலால் இக்கொள்கை-களை நியாயமானவை என்றும் அவசிய-மானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தியம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமேயில்லை.  ஆனால் அந்தக் கொள்கைக்-காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே. என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாய் இருக்கின்றது.  திரு. காந்தி அவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாசிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத்திற்கும், காந்தியத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தா-லொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம்.  ஆனால், அந்த உண்மையை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தியம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும், துணிவையும் அடைந்திருக்-கின்றார்கள்.

இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும்.  திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தியத்திற்கும், இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவோ நோய்கொண்டு அவஸ்தைப் பட்டோ செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு, இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது. 

சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்!  பாராட்டுகின்றோம்!! பாராட்டுகின்றோம்!!!  இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடைய வர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4-பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்று மனமார வேண்டு-கிறோம்.

(‘குடிஅரசு’ – தலையங்கம் – 29.03.1931)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *