சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் சிரியா சிறுவன் ஒருவன் தலையில் ரத்த காயத்துடன் உடல் முழுவதும் தூசி படிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்தப் படம் போரின் கோரமுகத்தை காட்டுவது போல் உள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அதிபர் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஸ்கார்ஸ்டேல் நகரில் அலெக்ஸ் என்ற 6 வயது சிறுவன் தன்பெற்றோருடன் வசித்து வருகிறான். சமீபத்தில் அவன், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கீழ்க்கண்ட ஒரு கடிதம் எழுதியுள்ளான்.
“சிரியாவில் தலையில் ரத்த காயத்துடன், உடல் முழுவதும் தூசி படிந்திருக்கும் நிலையில் உள்ள ஓம்ரானின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். உங்களால் அவனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வர முடியுமா? அவனுக்கு ஒரு குடும்பத்தை தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அவனை நாங்கள் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறோம். என்னுடைய நண்பனுக்கு ஓம்ரானை அறிமுகம் செய்து வைப்பேன். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம். பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோம். அதன் பிறகு ஓம்ரான் எங்களுக்கு சிரியா மொழியை கற்றுக் கொடுப்பான். நானும் எனது சகோதரி கேத்தரினும் எங்கள் பொம்மைகளை ஓம்ரானுடன் பகிர்ந்து கொள்வோம். எங்களின் புதிய சகோதரனுக்கு கணக்கு சொல்லி தருவோம். அதனால் தயவு செய்து அவனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வாருங்கள்.”
இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
நியூயார்க்கில் நடந்து வரும் அய்.நா. பொதுக்குழுவில் அகதிகள் குறித்து பேசியபோது, அதிபர் ஒபாமா இந்தக் கடிதத்தை உலகத் தலைவர்களிடம் காட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிறுவன் அலெக்சின் இந்த செயல் அவனின் மனித நேயத்தைக் காட்டுகிறது. பிற நாட்டு மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அலெக்ஸ் இந்த கடிதத்தை எழுதியுள்ளான். இந்த மனிதநேயத்தை அலெக்சிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
குறிப்பாக இலங்கை அரசும், மோடி அரசும் பாடங் கற்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.