வந்தவர் மொழியா..? செந்தமிழ்ச் செல்வமா..?

செப்டம்பர் 16-30

தூலம்

ஸ்தூலம் என்ற வடசொல்லுக்கும், தூலம் என்ற தூய தமிழ்க் காரணப் பெயருக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணுவோரும் இருக்கின்றார்கள்.

சுலவு என்ற சொல்லடியாகத் தோன்றிய பல சொற்களில் தூலமும் ஒன்று என்று உணர்தல் வேண்டும். தூலம், சுற்றி நீண்டது. காரணப் பெயர்.

இலேசு

இது இளைது என்பதன் மரூஉ. இளைதாக முண்மரம் கொள்க என்ற குறளடி காண்க. இளைது, இளப்பம், இளைப்பம், இளசி என்பன ஒரு பொருளன. முதுமையால் பெறப்படும் வன்மை இலாதது. இது புலன்களுக்குப் புலப்படுவதில் அரிதின்மையும், தூக்குவதற்குத் தொல்லையின்மையையும் குறித்து வழங்குகிறது.

பலபம்

பலகை என்ற சொல் ஈறு திரிந்த ஓர் ஆகுபெயர். பலகை- – கற்பலகை, அதன் துகளைக் குழைத்துச் செய்த கற்குச்சி பலபம்.

எனவே பலபம் வந்தவர் மொழியன்று.

சுலபம்

இது சுளுவு என்றும் மருவி வழங்கும். சுலவு என்பதினின்று தோன்றியது. புலன்களுக்கு அண்மையானது, இதை வடசொல் என்று எண்ணி மலைத்தல் வேண்டாம். இது செந்தமிழ்ச் செல்வமே.
(குயில்: குரல்: 1, இசை: 54, 16-6-59)

தாளம்

தாள்- – ஒட்டு, இசையில் கால அளவுடைய அசையும் மற்றோர் அசையும் ஒட்ட வைப்பதோர் ஒட்டு, ஆகுபெயர். அம்சாரியை, குன்றம் என்பது போல.

இதை வடசொல் என்று காட்டும் வடவரைப் பின்பற்றித் தமிழரும் அவ்வாறே எண்ணியிருக்கின்றனர். எனவே, தாளம் வந்தவர் மொழியன்று. செந்தமிழ்ச் செல்வமே.

மேளம்

இது வடசொல் அன்று, மேழம் என்பதின் திரிபு. மேழம்- – -ஆடு, ஆட்டுத் தோலால் ஆனது மேழம், மேளம் ஆகுபெயர். எனவே மேளம் தூய தமிழ்க் காரணப் பெயர் எனக் கடைப்பிடிக்க.

அருச்சனை

இது வடசொல் என்று மயங்கற்க! அருத்தனை என்பதின் போலி. அருத்து முதனிலை. அன்சாரியை, ஐ தொழிற்பெயர். இறுதிநிலை, அருந்துதல் என்பதில் அருத்து முதநிலை. தல் தொழிற்பெயர் இறுதிநிலை. எனவே அருத்தனை அருத்துதல் ஒன்றே. உண்பித்தல் என்பது பொருள். அருந்துதலின் பிறவினை இது.
அருத்தனை, பொருத்தனை என்பது சொல் வழக்கு. இவற்றில் பொருத்தனை என்பது பொருப்பேற்றல் என்று பொருள்படும். விரதம் என்னும் வடசொல் இதே பொருளில் இடம் பெறும். வேண்டிக் கொள்ளுதல் என்றும் கூறுவதுண்டு. அறுத்தல் பெருத்தல் என்பன வேறு பொருளில் அமைந்தவை.
(குயில், குரல்: 2, இசை: 3, 23-6-59)

வியாழன்

இது வயவாளன் என்பதன் திரிபு. வயம்-வல்லமை. ஆளன்- – –உடையவன். வல்லமை உடையவன் என்பது பொருள். எனவே வியாழன் என்பது தூய தமிழ்க் காரணப் பெயர்.

இதைத் திரிபு பெற்ற நிலையில் வியாழன் என்றோ எழுதுவதில் எப்பிழையும் நேராது.

ஏழு நாள்களின் பெயர்களில் சனி என்பதைப் பழந்தமிழ் நூற்கள் காரி என்ற தூய தமிழ்ச் சொல்லால் வழங்குகின்றன.

ஆதலின் சனிக்கு காரியையே தமிழர்கள் எடுத்தாள வேண்டும். காரிக் கிழமை என்று வாய் மகிழச் சொல்க– – -கை மகிழ எழுதுக.
(குயில், குரல்: 2, இசை: 4, 30-6-59)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *