நான் ஒரு வழக்கறிஞர். எனது தொழிலினை மிகுந்த கண்ணியத்துடனும், மிகுந்த சுயமரியாதையுடனும் செய்து வருகிறேன். நான் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வருகிறேன்…
இந்நிலையில், (26.8.2016) இன்று, 31.8.2016ஆம் தேதி வரைக்கான தங்களின் துக்ளக் வார இதழில் தலையங்கச் செய்தி பார்த்தேன். அந்த தலையங்கச் செய்தியானது எங்கள் வழக்கறிஞர்களின் போராட்டத்தினை கிண்டல் செய்யும் விதமாகவும், அவமரியாதை செய்யும் விதமாகவும், வாசகங்கள் பொறிக்கப்பட்டு, வழக்கறிஞர்கள் சீருடையில் பல வழக்கறிஞர்கள் மரத்தடியில் விவாதம் செய்வது போலவும், ஓவியத்துடன் தலையங்கப் பக்கம் பிரசுரமாகியுள்ளது.
மேற்படி வார இதழின் தலையங்கச் செய்தியின் மூலமாக, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் நாங்கள், வேலை எதுவும் இல்லாதவர்கள் போலவும், மரத்தடியில் அமர்ந்து விவாதம் பேசும் வழக்கறிஞர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. தங்கள் வார இதழின் இந்த பிரசுரமானது, கடந்த 70 நாட்கள் மிகவும் உணர்வுப் பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த 60,000 வழக்கறிஞர்களின் உணர்வையும், இழப்பு-களையும் புண்படுத்தும் விதமாகவும், பொது-மக்கள் மத்தியில் எங்களைக் கேலிப் பொருளாக்கும் விதமாகவும் சித்தரித்த தங்கள் வார இதழின் செயலானது, மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவன் என்ற முறையில் எனக்கு மிகவும் அவமானத்-தையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் எனது சுயமரியாதையைச் சேதப்படுத்தும் சுதந்திரம் யாருக்குமில்லை. ஆனால், தங்களின் வார இதழின் மேற்படி தலையங்கச் செய்தியானது, எனது தன்மானத்திற்கு மிகுந்த அவமானம் ஏற்படுத்தும் செயல் ஆகும். குப்பைத் தொட்டிக்குக் கூடத் தகுதியில்லாத தங்கள் வார இதழின் விற்பனையை அதிகரிக்கவும், பத்திரிகையின் பரபரப்பிற்காகவும் உணர்வு பூர்வமான எங்களின் போராட்டத்தினையும், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களையும் அவமதிக்கும் விதமாக தலையங்கமும் செய்திப் படமும், வாசகமும் வெளியிட்டத் தங்களின் செயல் சட்டப்படி தண்டிக்கத் தக்கதாகும்.
மு.தங்கப்பாண்டியன்,
வழக்கறிஞர், அருப்புக்கோட்டை
——————————————————————————————————————————————————————–
தண்ணீர் தாகம்!
தலைப்பைப் பார்த்தவுடன் வியப்பாக இருக்கிறதா? உண்மை! தாகம் தணிக்கும் தண்ணீருக்கே தாகம் எடுக்க வைத்து விட்டார்கள். பல்வேறு காரணங்களுக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டுவிட்டது. மழை வளம் குறைந்துவிட்டது. மரங்கள் வெட்டப்பட்டமையும், மரங்கள் வளர்க்கப்படாமையும் இதற்குக் காரணம்.
நிலப்பரப்பு கட்டடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் என்று ஆக்கப்பட்டதால், நிலத்தடியில் நீர் செல்லும் வாய்ப்பு குறைந்து, பெய்கின்ற மழைநீரெல்லாம் பாழாகிறது.
தற்போது கிராமங்களில்கூட சுத்தமான குடிநிர் இல்லை. காரணம் நிலத்தடி நீர் மாசுபடுத்தப் படுகிறது. ஆற்று நீரும், ஊற்று நீரும் தொழிற் சாலைக் கழிவுகளால் நஞ்சாகி நாற்றமடிக்கின்றன.
நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவதால், கடல் நீர் உள் புகுந்து உப்பு நீராகி குடிக்க வழியில்லாமல் போய்விட்டது.
எதிர்கால தலைமுறைக்கு எதையும் விட்டுவைக்காமல், இந்த தலைமுறை உறிஞ்சி விட்டது. தண்ணீர் இல்லையேல் தலைமுறை அழியும். உலகம் முழுவதும் மிகக் குறைவான அளவே நிலத்தடி நீர் உள்ளதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன.
உலகில் 100 கோடி மக்களுக்கு குடிக்க குடிநீர் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் 3,900 குழந்தைகள் தூய்மையற்ற, கெட்ட நீரைப் பருகுவதால் இறந்துபோகின்றன. விலை கொடுத் தால்தான் நல்ல நீர் என்ற அவலம். நிலத்தடி நீர் ஒரு பக்கம் குறைய, மறுபக்கம், வெப்பமயமா தலால் கடல்நீர் மட்டம் உயர்ந்து நிலப்பகுதியை கடல்கள் விழுங்குகின்றன. இந்த அழிவு போதாது என்று, நீருக்கான போராட்டத்தில் உலகமே அழிய வாய்ப்புண்டு! எச்சரிக்கையாய் செயல்பட்டால் மட்டுமே எதிர்கால உலகம் பிழைக்கும்!