நூல்: இதய ஒலி
ஆசிரியர்: டாக்டர் பழனி ஜி.பெரியசாமி
வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 600 017.
போன்: 24342810, 24310769
விலை: ரூ.350.00, பக்கங்கள்: 420.
முடிவெடுப்பதில் தலைவர்கள் பாணி
ஒரு விஷயத்தில் எப்படி முடிவெடுப்பது, அதை எந்தக் கோணத்தில் எங்கே முடிவெடுப்பது என்பதற்கு நல்லதொரு உதாரணமாக விளங்கும் நிகழ்ச்சி ஒன்றை இங்கே பதிவு செய்வது பொருத்தம் என்று கருதுகிறேன்.
1987இல் எம்.ஜி.ஆர் அவர்கள் இரண்டாவது முறையாக (உடல் பரிசோதனைக்காக) அமெரிக்காவுக்கு வந்திருந்த-போது கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ராஜீவ்காந்தி அவர்களும் வந்திருந்தார்.
மாநாடு முடிந்தபின் திரும்பும் வழியில் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக வாஷிங்டன் வந்தார்.
ராஜீவ்காந்தி அவர்களுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அங்கே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
வாஷிங்டனில் வில்லார்ட் (Willard) ஹோட்டல் என்ற புகழ்பெற்ற ஹோட்டலில் பிரதமர் ராஜீவ் தங்கியிருந்தார். அது பழைமையான ஆனால் புகழ்பெற்ற உயர்தர ஹோட்டல்.
எம்.ஜி.ஆரும், நானும், மற்றவர்களும் பால்டிமோரில் இருந்தோம்.
அப்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக கௌல் அவர்கள் இருந்தார்.
அவரிடமிருந்து ‘ராஜீவ்காந்தி அவர்கள் பால்டிமோர் வந்து எம்.ஜி.ஆரைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
ராஜீவ் அவர்கள் அப்போது பிரதமர். எம்.ஜி.ஆர் ஒரு மாநில முதல்வர். எனினும் முதல்வரைப் பார்க்க பிரதமர் வர விரும்புகிறார் என்பது அரசியல் நாகரிகத்தின் தேர்ந்த உதாரணம்.
‘நீங்கள் பிரதமர். உங்களை வந்து முதலமைச்சர் பார்ப்பதுதான் முறையே தவிர, நீங்கள் வந்து என்னைப் பார்க்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று எம்.ஜி.ஆர் பதில் அனுப்பினார்.
‘நான் பிரதமராக வந்து பார்க்கவில்லை. ஒரு நண்பராக வந்து பார்க்கிறேன்’ என்று ராஜீவ் சொல்லியும், ‘முடியாது. நான் வந்து பார்க்கிறேன்’ என்று பிடிவாதமாக எம்.ஜி.ஆர் தெரிவித்து விட்டார்.
அப்போது இந்தியாவில் ஒரு பெரிய பரபரப்பான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்தியாவிலிருந்து ஒரு படகில் சென்ற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பத்தொன்பது பேர் நடுவழியில் சயனைடு உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
அது பூதாகாரமாக விவாதிக்கப்பட்டு, அன்றைய தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் அக்கறை காட்டாமல் இருக்கிறது என்று எதிர்க் கட்சிகள் உரக்கக் குரல் கொடுத்தன.
விவாதங்கள் பரவலாயின.
என்ன செய்வது என்று அப்போது அமெரிக்காவில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பலரோடு ஆலோசித்தார். அந்த ஆலோசனைகளில் நானும் கலந்து கொண்டேன்.
புலிகள் ஆதரவாளர்கள் இறந்து போன பிரச்சினையில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று தமிழகத் தலைவர்கள் அனைவரின் கருத்துக்களையும் எழுத்து மூலம் சேகரிப்பது என்று முடிவானது.
அமெரிக்காவில் இருந்தபடியே தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ‘உங்கள் கருத்துக்களை உடனே அனுப்புங்கள்’ என்று கேட்டுக் கொண்டோம்.
‘இது ஒரு முக்கியப் பிரச்சினை. இதில் அரசியல் ஏதும் செய்யக் கூடாது. கருத்துகள் மட்டுமே தேவை’ என்று விளக்கியிருந்தோம்.
தி.க. தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன் ஆகியோர் அவர்களின் கருத்துகளை எழுதித் தர, என்னைச் சேர்ந்த சென்னிமலை அவற்றை வாங்கி எங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன்.
வந்து சேர்ந்த கருத்துகளைத் தொகுத்து தமிழக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று 1, 2, 3… என்று வரிசை எண் இட்டு பத்தொன்பது பாயிண்ட்டுகளைத் தொகுத்து எம்.ஜி.ஆரிடம் கொடுத்தோம்.
அவர் பார்த்து விட்டு என் செயலாளராக அப்போது இருந்த ஜாய்ஸ் ஹேர் (Joyce Hare) என்ற பெண்மணியிடம் அந்தப் பட்டியலைத் தந்து அதை டைப் செய்து தரச் சொன்னார்.
மூன்று பிரதிகள் எடுத்தோம்.
பிரதமர் ராஜீவ் அவர்களைச் சந்திக்கும்போது அவரிடம் தருவதற்காக அந்த மூன்றில் ஒன்றில் கையெழுத்திட்டு எம்.ஜி.ஆர் தயாராக வைத்துக்கொண்டார்.
பால்டிமோரிலிருந்து நாற்பத்தைந்து நிமிடச் சாலை வழிப் பயணத்தில் வாஷிங்டன் போய்ச் சேர்ந்தோம்.
‘வில்லார்ட்’ ஹோட்டலில் (Willard Hotel) பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
எனினும், எம்.ஜி.ஆருடன் நாங்கள் உள்ளே போக சிரமம் இல்லை.
ராஜீவ் மாடியில் தங்கியிருந்தார்.
எம்.ஜி.ஆரை மிகவும் அன்புடன் வரவேற்றார்.
சற்று நேரம் உரையாடிய பிறகு, தான் கொண்டு சென்றிருந்த _ இலங்கைத் தமிழர்கள் படகில் இறந்த பிரச்சினை தொடர்பான _ அதைத் தீர்க்க தமிழகத் தலைவர்களின் கருத்துகள் அடங்கிய பட்டியலைப் பிரதமரிடம் தந்தார் எம்.ஜி.ஆர்.
வாங்கியதும் ராஜீவ் அவர்கள் முழுமையாகப் படித்தார்.
உடனே பேனாவைத் திறந்து அந்தப் பத்தொன்பது பாயிண்ட்ஸ்களில் பெரும்பான்மை-யானவற்றை ‘டிச்’ செய்தார்.
‘இவற்றை உடனடியாகச் செய்கிறேன். மீதி சிலவற்றின் மீது நான் உடனே இங்கேயே முடிவெடுக்க முடியாது. டெல்லி போனதும் அதில் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.
எவ்வளவு விரைவாக, எப்படி அணுகி எந்தக் கோணத்தில் ஒரு தலைவர் செயல்பட முடியும் என்று ராஜீவ் காந்தியின் அன்றைய செயல்-பாட்டினை அங்கிருந்து கவனித்த எனக்கு வியப்பு மேலிட்டது.
அன்றுதான் அதே ஹோட்டலின் கீழே இந்தியர்களின் வரவேற்பு நிகழ்ச்சி.
அதற்குக் கிளம்பி கீழே ராஜீவ்காந்தியுடன் நாங்களும் வந்தோம்.
பிரதமர் என் பக்கம் திரும்பி, “டாக்டர்… கீழே நிறையக் கூட்டம் இருக்கும். உங்கள் சி.எம். உடல் நலமின்றி இருப்பதால் அங்கே கூட்டத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நான் கீழே இறங்கியதும் கூட்டத்தை நோக்கி ஒரு பக்கமாக வேகமாகப் போய் விடுகிறேன். நீங்கள் உங்கள் முதலமைச்சரை இன்னொரு பக்கமாக அழைத்துக் கொண்டு போய் விடுங்கள். அவர் நலமாக இருப்பதில் எனக்கு அக்கறை உண்டு’ என்றார்.
எத்தகையதொரு உண்மையான அன்பு!
அந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆர். மீது ராஜீவ் அவர்களுக்கு இருந்த அக்கறை, முடிவுகளை விரைவாக எடுக்கும் அவருடைய ஆற்றல், பிரச்சினை என்றால் அதை உடனடியாகத் தீர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் அணுகுமுறை, இவை அனைத்தினூடே பரவியிருந்த மனிதநேயம் ஆகிய அனைத்திற்கும் சிறந்த எடுத்துக்-காட்டாக அமைந்தது.
என் வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாததொரு நிகழ்ச்சி அது.
நான் பழகியவரையில் அல்லது தெரிந்து-கொண்ட வரையில் தமிழகத் தலைவர்கள் பலருக்கும் முடிவெடுப்பதில் தனித்தனி அணுகுமுறை உண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன்.
ராஜாஜியின் கூர்மையான அறிவு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ராஜ தந்திரத்துடன் அவர் முடிவுகள் அமைந்திருக்கும்.
காமராசர் மிகவும் யதார்த்தவாதி. சிக்கலான பிரச்சினைகளில்கூட அவரால் எளிதாக முடிவெடுக்க முடிந்தது.
தமிழகத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் ஓரிடத்தில் தண்ணீர் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றால் ‘அங்கே ஓர் அணை கட்டு’ என்பார்.
அணை என்றால் பெரிய, பிரமாண்டமான அணை என்று அர்த்தமல்ல. தண்ணீர் வீணாகாமல் தேக்கி வைக்கும் அளவுக்குச் சிறியதோர் அணை.
நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதுதான் அவருக்கு முக்கியம்.
ஒருமுறை நெ.து.சுந்தரவடிவேலு அவர்களும், காமராஜரும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கிராமம் வழியாகச் சென்றபோது பல பையன்கள் அங்கே சும்மா திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தார்.
“ஏன் இவனுங்க இங்கே சுத்திக்-கிட்டிருக்காங்க பள்ளிக்கூடம் போகலையா?’’ என்று சுந்தரவடிவேலுவைக் கேட்டார்.
“இல்ல அய்யா. ஸ்கூல் ஆரம்பிச்சா நிறைய வாத்தியார்கள் தேவைப்படுறாங்க’’ என்று சுந்தரவடிவேலு பதில் சொன்னார்.
“அட, இது என்ன பிரச்சினை? ஒன் டீச்சர் ஸ்கூல் _ ஓராசிரியர் பள்ளி -_ ஆரம்பிங்கண்ணேன். சும்மா சுத்திக்கிட்டு இருக்கிறதைவிட ஓர் ஆசிரியரின் கீழ் இருப்பதையாவது ஆரம்பிச்சு வையுங்க’’ என்றார் காமராஜர்.
கருணாநிதி அவர்கள் எந்தப் பிரச்சினையானாலும் கட்சித் தலைவர்களைக் கலந்து ஆலோசிப்பார். பல்துறைகளிலிருந்து விவரம் சேகரிப்பார். அவற்றின் அடிப்படையில் ஒரு முடிவை எடுப்பார். அப்படி எடுத்த பிறகு அந்த முடிவை மாற்றிக் கொள்ளமாட்டார். ஆர்வமாகவும் அதைச் செயல்படுத்துவார்.
ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளும் திறன் அதிகம். கோப்புகளைப் படிக்கும் போதே என்ன சிக்கல் என்பதைப் புரிந்து கொள்வார் என்று பலர் கூறியிருப்பதை நான் அறிவேன். முடிவுகளை வேகமாக எடுப்பார். அதே-வேகத்தில் அவற்றைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வார். தனித்தன்மையுடன் கூடிய அவரது குணாதிசயம் அது.
பிஜு பட்நாயக். இந்திய அரசியல் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத முக்கிய தலைவர் அவர்.
ஒரிஸ்ஸா (தற்போது ‘ஒடிஸா’) மாநில முதல்வராக இருந்தவர். ஒரிஸ்ஸாவின் தந்தை என்று மதிக்கப்பட்டவர்.
இந்தோனேசியாவில் சுகர்னோவுக்கு எதிராக ராணுவப் புரட்சி நடைபெற்றபோது தனிப்பட்ட முறையில் சென்று அவரை மீட்ட துணிச்சல்காரர்.
நேரு குடும்பத்தின் நெருங்கிய நண்பர். எதிலும் உடனடியாக முடிவெடுக்கும் திறமை, துணிச்சல் கொண்டவர். கடைசி பத்து ஆண்டுகள் அவர் இருந்த வரை அவருக்கு நான் நண்பராக இருந்தேன் என்ற பெருமை எனக்கு உண்டு.
இப்படி தலைவர்களின் அணுகுமுறை மாறுபட்டாலும், அவர்களின் நோக்கம் தமிழகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதுதான் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.