நல்ல கருத்துக்கள் எங்கு கிடைப்பினும் விடக்கூடாது
அறிவு என்பது பல்முனைகளிலிருந்து, பலரிடமிருந்து, பலவகையில், பல நேரங்களில் வந்து சேர்வது. மேலும், முயன்று பெறுவது ஆகும். எனவே, எங்குக் கிடைத்தாலும், யாரிடம் கிடைத்தாலும், எதில் கிடைத்தாலும், அதைப் பெற வேண்டும். பொட்டலம் மடித்த தாளைக்-கூட அண்ணா படிக்கத் தவற மாட்டாராம். அதனால்தான் அவர் அறிஞரானார். கண்டதைக் கற்றால் பண்டிதர் ஆகலாம் என்ற பழமொழி கூட இதை வலியுறுத்தச் சொல்லப்-பட்டதே ஆகும். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நண்பர்கள், உறவினர்கள், பெரியவர்கள், காணும் காட்சி, மற்றவர் பட்டுணர்ந்து, படித்து அறிந்தது, கேட்டறிந்தது என்று பல வகையில் அறிவு வந்து சேரும். எளியவரிடம் சிறியவரிடம் நல்ல கருத்து கிடைத்தாலும் பாராட்டினால் நல்ல அறிவு வளரும். எனவே, அறிவு பெறத் தவறக்கூடாது. ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரின் கருத்தறியத் தவறக்கூடாது. நமக்கு கசப்பாக இருந்தாலும் கேட்க வேண்டும்.
பல கடிதங்கள் எழுதும்போது முகவரியை மாற்றிவிடக் கூடாது
ஒரே நேரத்தில் பலருக்குக் கடிதம் எழுதும்போது முகவரியை மாற்றி எழுதிவிடக் கூடாது. அது மிகப் பெரிய சிக்கலை பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஓர் எழுத்தாளருக்கு ஒரே நேரத்தில் குழந்தையும் பிறந்தது; நூல் ஒன்றையும் வெளியிட்டார். இரண்டையும் பாராட்டி, வாழ்த்திக் கடிதங்கள் வந்தன. அதற்கு நன்றி தெரிவித்த எழுத்தாளர், என் ஒருவன் முயற்சியால் இது நடந்ததல்ல; பலரின் கூட்டு முயற்சியால் நடந்தது என்று புத்தகத்தை வாழ்த்தியவருக்கு எழுதிய கடித்ததை குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தியவருக்கு முகவரி மாற்றி அனுப்பிவிட்டார். என்ன ஆயிற்று! தப்பாகப் போயிற்று. குழந்தை என் ஒருவன் முயற்சியால் அல்ல, அது கூட்டு முயற்சியால் பிறந்தது என்று ஆனது. எவ்வளவு கேவலம் பாருங்கள்! எனவே, முகரிவயைச் சரியாக எழுதத் தவறக் கூடாது.
பயணப் பொருள்களைப் புறப்படும்போது தேடக் கூடாது
வெளியூருக்குப் பயணம் சென்றாலோ அல்லது உள்ளூரில் ஒரு பணியின் பொருட்டுச் சென்றாலோ, என்னென்ன பொருள்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து, தவறாது எடுத்துச் செல்ல வேண்டும். முதல்நாளே எடுத்து வைத்துவிட வேண்டும். அல்லது முன்கூட்டியே எடுத்து வைத்துவிட வேண்டும். மாறாக, பயணம் புறப்படும்போது அதைக் காணோம் இதைக் காணோம் என்று தேடத் தொடங்கினால் பதற்றமும், மனஉளைச்சலும் ஏற்பட்டு, பயணம் மனஇறுக்கமுடையதாய் மாறும். எனவே, பயணம் என்பது திட்டமிட்டதாய், முன்கூட்டியேதயார் நிலையில் உள்ளதாய் இருக்க வேண்டும்.
பண இருப்பிற்கேற்ப பொருட்களைத் திட்டமிடத் தவறக்கூடாது.
கடையில் பொருட்களை வாங்கும்போது, நம்மிடம் உள்ள பணத்திற்கு ஏற்பப் பொருட்களின் விலை அறிந்து திட்டமிட்டுத் தேர்வு செய்து வாங்க வேண்டும். இல்லை-யென்றால் வாங்கிய பொருளைத் திருப்பித் தருதல், போட்ட இரசீதை மாற்றுதல், கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறல் போன்ற சிக்கல்கள் வரும். இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்-படுவர். அவர்கள் நேரம், வேலை பாதிக்கப்படும்.
இருக்கின்ற பணத்திற்கு ஏற்ப என்ன பொருள் என்பதை, தேவையின் முன்னுரிமைப்-படி தேர்வு செய்து வாங்க வேண்டும், தேவையான அளவு வாங்க வேண்டும்.
விழாக்களில் குறைகளைப் பெரிதாக்கக் கூடாது
பொது நிகழ்ச்சிகள், விழாக்கள், பொது இடங்களில் குறைகள் காணப்பட்டால் அதைப் பெரிதுப்படுத்தி பிரச்சினையாக ஆக்கக்கூடாது.
முடிந்த அளவு அனுசரித்து நடந்து-கொள்ள வேண்டும். அல்லது பக்குவமாய், நாகரிகமாக அதை உரியவரிடம் சொல்லி சரி செய்ய வேண்டும்.
சிலர் எதற்கெடுத்தாலும் குறை கண்டு கோபப்படுவர். இது கூடவே கூடாது. பொது நிகழ்வு நடத்துகின்றவர்கட்கு ஏராளமான வேலைகளும், பதற்றமும், உளைச்சலும், கவனச் சிதறலும் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில், என்னைக் கூப்பிடவில்லை, என்னைச் சரியாகக் கவனிக்கவில்லை, என்னிடம் பேசவில்லை, என்னை மதிக்கவில்லை என்று குறை சொல்லிக் கோபப்படுவது பண்பாடல்ல; நாகரிகமும் அல்ல.