தந்தை பெரியார் விளக்கம்
திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த மக்கள் நாலாஞ் ஜாதியைச் சேர்ந்தவர்களென்றும், சூத்திரர்கள் (அடிமைகள், தாசி மகன்) என்றும் இழிவுபடுத்தப்-படுகிறார்கள். வடநாட்டு ஆதிக்கத்தால் நாடு பொருளாதாரத் துறையில் நலிவடைகிறது. வளம்மிகுந்த நாட்டில் வறுமை தாண்டவ-மாடுகிறது. நோய்நாடி, அதுமுதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி. ஆவனசெய்து திராவிட சமுகத்தைக் காக்கவே திராவிடர் கழகம் தோன்றிற்று.
திராவிடர் கழகம் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியரல்லாதாருடைய கழகம். இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவு மொழிகள் பேசும் மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று. வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள்கைகளை விளக்கத் தவறும். இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக் கூடாது என்று சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள் தமிழர் கழகம் என்று அழைத்தால் மற்ற திராவிட மொழிகள் பேசும் மக்களை விலக்கி நிற்கும். பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள். எனவே தமிழர் கழகம் ஆரியத்தையும் பார்ப்பனியத்தையும் அழிக்கத் தவறிவிடும். திராவிட மக்களைப் பார்ப்பனியப் பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விடும். திராவிட மொழிகளுக்குள்ளே மிகவும் ஒற்றுமையிருக்கிறது. 5 மொழி பேசிவரும் திராவிட மக்களுக்குத் தனி நாகரிகம், தனி கலை, தனி வாழ்க்கை முறை இருக்கின்றன. திராவிட நாடு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்படும் வரையில் தனித்தே இருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடருக்குரியதாகத் திராவிட நாட்டைத் திராவிடர் அடையவேண்டும். திராவிட நாட்டிற்குத் தனி அரசியல் உண்டு. திராவிட நாட்டில் மொழி வாரியாக தனி ஆட்சியிருந்-தாலும் 5 மொழிகள் பேசும் மக்களின், பிரதிநிதிகள் கொண்ட ஒரு கூட்டுச் சபை அமைக்கவேண்டும். வெளிநாட்டு விவகாரங்-களை இந்த கூட்டுச்சபையே கவனித்துவரும். எனவே திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும், திராவிடர் கழகம் இன்றியமை-யாததாக இருக்கின்றது.
(01.05.1947 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் மாணவர் பிரசார குழு பயிற்சிப் பாசறையில் நடத்திய வகுப்பின் உரை தொகுப்பு.)
– ‘குடிஅரசு’ – சொற்பொழிவு – 03.05.1947