கைவிரல் நுனியளவு, அதாவது வெறும் 15 மி.மீட்டர் நீளமே கொண்ட வளைந்து செல்லக்கூடிய ரோபோவைக் கண்டுபிடித்து போலந்து வார்சா பல்கலைக்கழக ஆராய்ச்சி-யாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ரோபோ ஆய்வு வரலாற்றில் புதிய மைல் கல்லாக இது கருதப்படுகிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள் மனிதனைப் போன்ற உடல் பாகங்களைக் கொண்டதாகவும் அல்லது மிருகங்கள், பிராணிகள் போன்றவை-யாகவும் இருந்தன.
இவை இணைப்புகளுடன் அதிக எடை கொண்டவையாக இருந்தன. இந்த வகையான ரோபோக்கள் மின்சாரம் அல்லது மின்கலன்-களால் (பாட்டரியால்) இயக்கப்பட்டு வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மீன், பறக்கும் தும்பி போன்ற சிறிய வகையிலான ரோபோக்கள் உருவாக்கப்பட்டன.
சிறிய வகை ரோபோக்களை இயக்க மின்சக்தி அளிப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இதை போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழக அறிவியல் துறை ஆய்வாளர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்பின் மூலம் முறியடித்துள்ளனர்.
அவர்கள் கண்டுபிடித்துள்ள கைவிரல் நுனியளவு ரோபோ, வெளிச்சத்தையே சக்தியாக கொண்டு இயங்குகிறது. லேசர் பீம் லைட்டின் உதவியுடன் சிறிய ரோபா இயக்கப்படுகிறது. கம்பளிப் பூச்சியைப் போல் நகர்ந்து செல்லும் இந்த சிறிய ரோபோ எந்தவித இணைப்புகளு-மின்றி வளையக்கூடியது. அதிலும் அதிசயம் என்னவென்றால், இந்த ரோபோ சமமான இடத்தில் ஊர்ந்து செல்வது மட்டுமின்றி, செங்குத்தான பகுதிகளிலும் ஏறிச் சென்று மூலை முடுக்குகளில் நுழையும் வல்லமை படைத்தது.
இந்த சிறிய ரோபோக்கள் தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட பொருள்களை கொண்டுச் செல்லும் திறமை கொண்டவை என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.
வளையும் தன்மை கொண்ட “லிக்விட் கிரிஸ்டலைன் எலாஸ்டோமீட்டர்’ எனும் திரவ பொருளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் இந்த சிறிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த திரவம், வெளிச்சத்தின் அடிப்படையில் தனது அமைப்பை மாற்றிக் கொள்ளும் என்பதால் லேசர் பீம் வெளிச்சத்தை இரு புறத்திலும் செலுத்தி ரோபோவை இயங்க வைத்துள்ளனர். இந்த வெளிச்சத்தின் தன்மையை மாற்றி அமைத்தால், இந்த வகை ரோபோக்கள் முப்பரிமாண (3டி) வடிவங்-களிலும் உருவாக்கலாம் என்று மென்மையான வகை ரோபோவைக் கண்டுபிடித்த குழுவின் தலைவரும், போலந்தின் வார்சா பல்கலைக்-கழகத்தின் அறிவியல் துறை ஆய்வாளருமான பியோட்டர் வஸல்ஸியக் நம்பிக்கையுடன் கூறுகிறார். இந்த ரோபோவைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் இத்தாலி ஆய்வாளர்களும், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர்.