இந்திய மாணவர்களுக்கு காமன்வெல்த் உதவித் தொகை
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பு அல்லது பிஎச்டி ஆய்வுப் படிப்பைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் காமல்வெல்த் கல்வி உதவித் தொகை பெறலாம். அடுத்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் பிரிட்டனில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்-துறை அமைச்சகம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகபட்சம் 26 பிஎச்டி ஆய்வுப் படிப்பு மாணவர்கள் உள்பட 65 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 25லிருந்து 30 மாணவர்களைத் தேர்வு செய்து காமன்வெல்த் கல்வி உதவித்தொகை ஆணையம் படிக்க கல்வி உதவித்தொகை வழங்கும்.
இந்தக் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் வயது செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கலைப்புல பாடங்கள், சமூக அறிவியல் பாட மாணவர்கள் அந்தப் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், தொழில்நுட்பம், விவசாயம் தொடர்பான பாட மாணவர்கள் அந்தப் பாடங்களில் 65 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல பிஎச்டி படிக்க விரும்பும் மாணவர்கள் முதுநிலை படிப்பில் இதே அளவுக்கு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட படிப்புகளை அடுத்த ஆண்டு அக்டோபருக்குள் முடித்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பிரிட்டன் செல்வதற்கும் திரும்புவதற்குமான விமானக் கட்டணம், படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் வழங்கப்படும். அத்துடன் மாத உதவித் தொகையாக 1043 அல்லது 1,279 பவுண்ட்கள் வழங்கப்டும். ஆய்வுக் கட்டுரைக்-கான நிதியுதவி, குளிர் காலத்துக்கான ஆடைகள் வாங்குவதற்கான செலவு, பயணச் செலவு உள்ளிட்டவைக்கும் உதவித்தொகை வழங்கப்-படும்.
விவரங்களுக்கு: http://mhrd.gov.in/
ஆஸ்திரேலியாவில் படிக்க கல்வி உதவித் தொகை:
ஆஸ்திரேலியாவில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் வருகிற நவம்பரில் தொடங்கும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படும். கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களும், இளநிலைப் பட்டப்படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் அவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் 25 சதவீத நிதியுதவி அளிக்கப்படுகிறது.
படிப்பில் தொடர்ந்து அதிக மதிப்-பெண்களை பெற்று சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு டீக்கின் துணைவேந்தர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 100 சதவீதம் கல்வி உதவி வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், இதற்கு முந்தைய படிப்புகளில் 85 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2017ஆம் ஆண்டில் படிக்கச் சேரும் மாணவர்களும் இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.9.2016
விவரங்களுக்கு: www.deakin.edu.au/internataional
ஜெர்மனியில் படிக்க கல்வி உதவித்தொகை!
ஜெர்மனியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்-கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு ஜெர்மன் அகாதெமி எக்ஸ்சேஞ்ச் அமைப்பு கல்வி உதவித் தொகை வழங்குகிறது. சிறப்பு வாய்ந்த மாணவர்கள் என்றால் பிஎச்டி படிக்கச் சேர்ந்தாலும் அவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
அறிவியல், பிசினஸ், என்ஜினீயரிங், கணிதம், விவசாயம், மருத்துவம், சட்டம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பயணச் செலவுகள் உள்பட மாதம் 750 யூரோக்கள் வீதம் 12 முதல் 36 மாதங்களுக்குகல்வி உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் பட்டதாரிகளாகவும், குறைந்த-பட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி படிக்கும் படிப்புகளுக்கு ஏற்றபடி மாறுபடும்.
விவரங்களுக்கு:http://www/daaddelhi.org/en/
மாணவிகள் படிக்க உதவித் தொகை:
ஒரே பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தில் உள்ள பெண் உயர்கல்வி படிப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு இந்திராகாந்தி கல்வி உதவித்தொகை வழங்குகிறது. குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தையாக இருப்பவர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இரட்டைப் பெண் குழந்தைகளாக பிறந்தவர்-களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முழு நேர முதுநிலைப் படிப்பில் முதலாண்டில் சேர்ந்திருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும். உதவித் தொகை பெற தேர்ந்-தெடுக்கப்படும் மாணவிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,100 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.9.2016.
விவரங்களுக்கு: http://www/uge/ac/in/sge/
சிறுபான்மை இன மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
இந்தியாவில் வாழும் (முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள் உள்பட) சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மேல்நிலைப் படிப்புகளைப் படிக்க மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இந்த உதவித் தொகையை பெற முடியும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
படிப்புக் கட்டணம், புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி வாங்குவதற்கான செலவுத் தொகை , விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்-படும்.
இந்த கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.9.2016
விவரங்களுக்கு:
www.maef.nic.in/Instructions.aspx